தேவ பராமரிப்பு

30. சர்வேசுரன் எல்லாவற்றையும் காப்பாற்றுகிறார் என்பதற்கு அர்த்தமென்ன?

அவர் அந்தந்த வஸ்துக்களையும் அதனதன் சுபாவத்தின் படியே நடத்தி, அவை ஒவ்வொன்றையும் விசேஷ அன்புடன் விசாரித்துப் பராமரித்துக் கொண்டு வருகிறார் என்று அர்த்தமாகும்.

1. எல்லாத்தையும் சர்வேசுரன் காப்பாற்றி வருகிறார் என்பதை வேறு எவ்விதம் சொல்லலாம்?

தேவ பராமரிப்பு அல்லது தேவாதீனம் என்று சொல்லுகிறோம்.

2. சர்வேசுரன் சகலத்தையும் நடத்தி விசாரித்துப் பராமரித்துக் கொண்டு வருகிறார் என்று நாம் எப்படி அறிவோம்?

(1) வேதாகமத்தில் அநேக இடங்களில் தேவ பராமரிப்பு உண்டென்று சொல்லியிருக்கின்றது. “பிதாவே, உமது தேவ பராமரிப்பு நடப்பிக்கின்றது” என்று ஞானாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம் (ஞான. 14:3). “எதை உண்போம் அல்லது எதைக் குடிப்போம் அல்லது எதை உடுத்திக் கொள்வோம் என்று கவலைப்படாதிருங்கள். ஏனெனில் உங்கள் பிதாவானவரோ இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகளென்று அறிவார்” என்று சேசுநாதர் வசனித்தார் (மத். 6:31, 32). “உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றபடியால் நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்றும் (லூக். 12:7) சர்வேசுரனுடைய உத்தரவின்றி “ஒன்றாகிலும் சேதமாகாது” என்றும் சேசுநாதர் சுவாமி சொல்லியிருக்கிறார் என்று அர்ச். லூக்காஸ் எழுதி வைத்தார் (லூக். 21: 18).

(2) உலகத்திலுள்ள ஒருக்காலும் மாறாத ஒழுங்கே அதற்கு அத்தாட்சியாகும். சர்வேசுரன் எல்லாவற்றையும் நடத்தி ஆண்டு வராவிட்டால், இப்பிரபஞ்சப் பொருட்களிலிருக்கும் திட்டமான சுபாவ ஒழுங்குகள் பிசகிப் போகும்.

(3) நமது பொது அறிவு தேவ பராமரிப்பு உண் டென்று சொல்லுகிறது. பூலோகத்தைச் சிருஷ்டித்தபின் சுவாமி அதனைக் கவனியாமல் போனால், அவர் சர்வ ஞானமுடையவரா யிருக்கிறாரென்று சொல்ல முடியாது.

(4) கடைசியாய் இந்தச் சத்தியம் சகல சாதி சனங் களுடைய இருதயத்தில் படிந்திருக்கிறது. இதினிமித்தமாகத்தான் எக்காலமும், எப்போதும், ஆபத்து நேரிடும் பட்சத்தில் சகல சாதி சனங்களும் சுவாமியை நோக்கி, செபித்துப் பலியிட்டு அவருடைய உதவியைக் கேட்டு வருகிறார்கள்.

3. அந்தந்த வஸ்துக்களையும் என்று சொல்லுவானேன்?

ஏனெனில், சர்வேசுரன் ஒவ்வொரு வித வஸ்துவையும், ஒவ்வொரு சிருஷ்டிப்பையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒன்றும் தவிராமல் எல்லாவற்றையும் நடத்தி ஆண்டு வருகிறார்.

4. சர்வேசுரன் அந்தந்த வஸ்துக்களையும் அதனதன் சுபாவத்தின் படியே நடத்தி வருகிறார் என்பதற்கு அர்த்தம் என்ன? 

சர்வேசுரன் அந்தந்த வஸ்துக்களின் முயற்சியைத் தடுக்கிறதில்லை. ஆனால் ஒவ்வொரு வஸ்துவும் தன் கதியை அடையும்படி, அந்தந்த வஸ்துவின் சுபாவத்துக்கு ஒத்த வண்ண மான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார். இப்படியே புத்தியும் மனதுமுடைய மனிதனுக்கு மனச்சுயாதீனம் இருக்கிறபடியால், அவனைக் கட்டாயப்படுத்தாமல் ஞான வெளிச்சத்தால் அவனது புத்தியைத் தெளிவித்து, தேவ வரப்பிரசாதத்தால் அவனுக்கு உதவி செய்து, அவனை நடத்தி வருகிறார். மிருகங்களையோ அவற்றின் இயல்பான அறிவினாலே நடத்துகிறார்.

5. சர்வேசுரன் வஸ்துக்கள் ஒவ்வொன்றையும் விசேஷ அன்புடன் விசாரித்துப் பராமரித்துக் கொண்டு வருகிறார் என்று சொல்வானேன்?

இவ்வுலகில் வேறு பொருள் இல்லாமலிருந்து, ஒரே ஒரு பொருள் மாத்திரமிருந்தால், சர்வேசுரன் அதை எப்படி பராமரித்திருப்பாரோ, அதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் இப்பொழுது கவனித்துப் பராமரித்து வருகிறார். ஒரு தகப்பன் தன் பிள்ளையைக் கவனித்துக் காப்பாற்றி அவனுக்கு அவசியமானவைகளை எல்லாம் கொடுக்கிறதுபோல் சர்வேசுரனும் ஒவ்வொரு வஸ்துவையும் பராமரிக்கிறார்.

6. எப்படிச் சர்வேசுரன் ஒவ்வொரு வஸ்துவையும் விசேஷ அன்புடன் பராமரிக்கிறார்? 

(1) ஒவ்வொரு வஸ்துவின் நன்மைக்கும் பாக்கியத் திற்கும் அவசியமானவைகளையும், ஏதுவானவைகளையும் ஒவ்வொன் றுக்கும் கொடுப்பதினாலேயும்:- “ஆகாயப் பட்சிகளை நோக்கிப் பாருங்கள்... அவைகளை உங்கள் பரம பிதா போஷித்து வருகிறார்” (மத். 6:26). உதாரணமாக: ஒவ்வொரு தேசத்தின் சீதோஷ்ணத் தன்மைப்படி அதில் சீவிக்கும் மிருகங்களை சர்வேசுரன் உடுத்து கிறார்.

(2) தன் நன்மைக்கும், பாக்கியத்திற்கும் எதிரானவை களினின்று ஒவ்வொரு வஸ்துவையும் காப்பாற்றி, தீமையை நன்மையாக மாற்றுவதினாலேயும்:- “நீங்கள் என்னைக் கெடுக்கச் சதி யோசனை பண்ணினீர்களே; ஆனால் தேவன் தீமையை நன்மை யாக மாற்றினார்” (ஆதி. 50:20). ஜோசேப்பு சரித்திரத்தைக் காண்க (ஆதி 39)--தன் உயிரைக் காப்பாற்ற ஒவ்வொரு மிருகத்திற்கும் உபாயங்கள் உண்டு. உதாரணமாக: தேனீக்கு கொடுக்கு உண்டு.

(3) ஒவ்வொரு வஸ்துவும் தன் தன் கதியை அடையும் படி அதை நடத்துவதாலும் சர்வேசுரன் ஒவ்வொன்றையும் விசேஷ அன்புடன் விசாரிக்கிறார். “உன் சகல வழிகளிலும் அவரை நினைப் பாயாக. அவர் உன் பாதச் சுவடுகளை நடத்துவார்” (பழ. 3:6). உதாரணமாக: பூச்சிகள் தங்கள் முட்டைகள் அனுகூலமாய் பொரிக்கும்படி அதிக வசதியான இடத்தில் அவைகளை இடுகின்றன.

7. சர்வேசுரன் அந்தந்த வஸ்துக்களையும் காப்பாற்றி ஆதரித்து வராவிட்டால் என்ன சம்பவிக்கும்?

அவருடைய ஆதரவின்றி சகலமும் நிர்மூலமாய்ப் போய்விடும்.

8. எத்தனை வகைத் தேவ பராமரிப்பு உண்டு?

சுபாவத்துக்கடுத்த தேவ பராமரிப்பு, சுபாவத்துக்கு மேற்பட்ட தேவ பராமரிப்பு ஆகிய இருவகை உண்டு.

9. சுபாவத்துக்கடுத்த தேவ பராமரிப்பு ஆவதென்ன?

அந்தந்த வஸ்துவும் தன் தன் இயல்பான கதியை அடையும்படி சர்வேசுரன் உபயோகிக்கும் இயல்பான உபாயங் களாம்.

10. சுபாவத்துக்கு மேற்பட்ட தேவ பராமரிப்பு என்பது என்ன?

புத்தி அறிவுள்ள மனிதன் தன் மேலான கதியை அடையும்படி, சர்வேசுரன் பிரயோகிக்கும் சுபாவத்துக்கு மேற்பட்ட உபாயங்களாம். உதாரணமாக: தேவ வரப்பிரசாதம்.

11. சர்வேசுரன் சகலத்தையும் நடத்தி வருகிறார் என்பதால் அறிய வேண்டியதென்ன?

அவருடைய சித்தமின்றி அல்லது உத்தரவின்றி எதுவும் நடக்கிறதுமில்லை, எதுவும் நடக்கவும் முடியாதென்று நாம் அறிய வேண்டும்.

12. அப்படியானால் மனிதனால் எப்படிப் பாவம் செய்ய முடிகிறது?

புத்தி மனதுள்ள மனிதனுக்குச் சர்வேசுரன் மனச் சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிறபடியால், அவன் கட்டாயப் படுத்தப்பட்டு நடக்கிறதில்லை. ஆகையினாலே மனிதன் தன இஷ்டப்படி தேவ சித்தத்தை மீறவும், நிறைவேற்றவும் சக்தியுடை யவனாயிருக்கிறான்.

13. சர்வேசுரன் ஏன் பாவத்தைத் தடுக்கிறதில்லை?

(1) மனிதன் தன் மனச் சுயாதீனத்தை உபயோகித்து, நல்ல செயல்களைச் செய்து மோட்சத்தை அடைய வேண்டும். அவன் கட்டாயத்தின்பேரில் நடத்தப்படுவானேயாகில், புண்ணி யத்துக்கு இடமிருக்காது, சம்பாவனைக்காவது, தண்டனைக்காவது அவன் தகுதியுள்ளவனாக முடியாது. ஆகையால் மனிதனே சுவாமி அவனுக்குக் கொடுக்கும் வரப்பிரசாதத்துக்கு இணங்கி அல்லது அதை எதிர்த்து தன்னுடைய பாக்கியத்துக்கோ அல்லது நாசத்துக்கோ காரணமாயிருக்கும்படி சர்வேசுரன் பாவத்தைத் தடுக்கிறதில்லை.

(2) ஆனால் மனிதன் தன் சுயாதீனத்தைத் துர்ப் பிரயோகம் செய்யும்போது முதலாய், சர்வேசுரன், தமது நீதியும் இரக்கமும் எப்போதும் எங்கும் பிரகாசிக்கும்படி ஆச்சரியத்துக் குரிய விதமாய் நன்மை புரிந்து வருகிறார்.

14. மனிதன் தன் சுயாதீனத்தைத் துர்ப்பிரயோகம் செய்யும்போது சர்வேசுரன் தமது நீதியையும் இரக்கத்தையும் எப்படிப் பிரகாசிக்கச் செய்கிறார்? 

சர்வேசுரன் பாவிகளை உடனே தண்டியாமல், அவர்கள் மனந்திரும்பும்படி வேண்டிய நேரமும், வரப்பிரசாதங் களும் கொடுத்து, அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது தமது இரக்கத்தை விளங்கச் செய்கிறார். ஆனால் பாவியானவன் மனந்திரும்பாமல், வரப்பிரசாதத்தைத் தள்ளிவிட்டு, பாவத்தில் மூர்க்கத்தோடு அமிழ்ந்திருந்து, தன் பாவங்களின் பேரில் கொண்ட பற்றுதலோடு செத்துப் போனால், அப்போது சர்வேசுரன் அவன் செய்த கிரியைகளுக்கு ஏற்ப தண்டனை விதித்து, தமது நீதியைப் பிரகாசிக்கச் செய்கிறார்.

15. இவ்வுலகத்தில் மனிதனுடைய பாவ புண்ணியங் களுக்கு ஏற்ப நீதியுள்ள சர்வேசுரன் ஏன் உடனே தண்டனை அல்லது சம்பாவனை இடுகிறதில்லை? 

(1) சர்வேசுரன் மனிதனுடைய பாவ புண்ணியங் களுக்குத் தக்கதாய் இவ்வுலகத்தில் தண்டிக்க அல்லது சம்பாவனை கொடுக்க வேண்டியிருந்தால், அவர் இடைவிடாமல் புதுமை செய்ய வேண்டியிருக்கும். அப்போது உலகத்தின் ஒழுங்கு கெடும். உதாரணமாக: கெடுதியான மழை பெய்யும் பட்சத்தில் கெட்டவ னுடைய தோட்டத்தில் மாத்திரமே அது பெய்யும்படியாகச் செய்ய வேண்டியிருக்கும். ஒரு கிராமத்தில் கொள்ளை நோய் பரவும் சமயத்தில் பாவிகளாகிய மக்கள் சாகும்படியாகவும், புண்ணிய வான்கள் தப்பித்துக்கொள்ளும்படியாகவும், சர்வேசுரன் புதுமை யைச் செய்யவேண்டியிருக்கும்.

(2) ஒவ்வொருவன் செய்யும் ஒவ்வொரு புண்ணியத் திற்காக ஆண்டவர் ஒவ்வொருவனுக்கும் ஒரு அநித்திய நன்மை கொடுத்து வரும் பட்சத்தில், மக்கள் நித்திய சம்பாவனையின் பேரில் ஆசை ஒன்றும் வையாமல் அநித்திய நன்மைகளை மாத்திரமே விரும்பி, அந்தப் போலி நன்மைகளைப் பற்றியே புண்ணிய வழியில் நடப்பார்கள். அப்படியே ஒவ்வொருவன் கட்டிக் கொள்ளும் ஒவ்வொரு பாவத்திற்காக சுவாமி அவனை இவ்வுலகத்தில் தண்டிக்கும் பட்சத்தில், மனிதர்கள் தேள், பாம்பு, இவைகளுக்குப் பயப்படுகிறது எவ்விதமோ, அவ்விதமே அவர்கள் பாவத்திற்குப் பயப்படுவார்களேயயாழிய, சுவாமி அதை விலக்குகிறாரென்ற காரணத்துக்காக அதற்கு அஞ்ச மாட்டார்கள். அப்போது சர்வேசுர னுக்கு என்ன மகிமை? பரலோகத்தில் நமக்குள்ள பேறுபலன் என்ன?

(3) மனிதனாய்ப் பிறக்கிற எவனும் பலவித தின்மை களைச் சகிக்க வேண்டியவன். இந்தச் சட்டத்திற்கு முழுதும் தப்பித்துக் கொள்வார் ஒருவருமில்லை. ஆதலால் புண்ணிய வழியில் நடக்கிறவர்கள் முதலாய் பலவகைத் தின்மைகளை அனுபவிக் கிறதைப்பற்றி ஆச்சரியப்பட இடம் ஒன்றுமில்லை, அதில் அநியாயம் ஒன்றுமில்லை.

16. இவ்வுலகத்தில் நம்மை உபாதிக்கிற சரீரத்துக்கடுத்த கெடுதி களெல்லாம் நமக்குச் சம்பவிக்கும்படி சர்வேசுரன் ஏன் சித்தமாகிறார் அல்லது உத்தரவளிக்கிறார்? 

(1) பாவத்துக்குத் தண்டனையாக--இப்படியே மோயீசன் மேல் முறுமுறுத்தவர்களுக்குத் தண்டனையாக சர்வேசுரன் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பினார் (எண். 21:6).

(2) பாவிகளைத் தம்மிடத்தில் திரும்பக் கொண்டு வரும்படியாக--யூதர்கள் மனந்திரும்பும்படியாக சர்வேசுரன் அவர் களுக்கு அநேக கெடுதிகளை வருவித்தாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம். ஊதாரிப் பிள்ளை மனந்திரும்புகிறதற்கு அவன் பட்ட கஷ்டங்கள்தான் காரணமாயிருந்ததென்று சேசுநாதர் நமக்கு அறிவித்திருக்கிறார் (லூக். 15:17).

(3) நீதிமான்களைப் பரீட்சித்து நித்திய சம்பாவ னைக்கு அவர்களைப் பாத்திரவான்களாக்கும்படியாக.--நாம் புண்ணியம் செய்யவும், பேறுபலன்களை அதிகரிக்கவும், இந்தக் கெடுதிகள் உதவியாயிருக்கிறதென்பதும் நிச்சயம். “நீ சர்வேசுர னுக்குப் பிரியப் பாத்திரமாயிருந்ததினாலே, உன்னைப் பரீட்சிக்கச் சோதனை வர வேண்டியதாயிற்று” என்று இரஃபாயேல் சம்மன சானவர் தோபியாஸ் என்பவருக்கு அறிவித்தார் (தோபி. 12:13). ஆண்டவர் தாம் சிநேகிக்கிறவனைத் தண்டிக்கிறார் (எபி. 12:6).

(4) நம்மைச் சீர்படுத்தி அர்ச்சிப்பதற்காக.--“கனி கொடுக்கிற யாவும் அதிகக் கனி கொடுக்கும் பொருட்டு அவை களைக் கழிப்பார்” (அரு. 15:2).

(5) இக்கெடுதிகளிலிருந்து விளையும் சில அதிகப் பெரிய நன்மைகளை அவர் அறிந்திருக்கிறதினால், இக்கெடுதிகளை நமக்குச் சர்வேசுரன் வரவிடுகிறார்.--ஒரு நாள் ஒரு குருடன் சேசு நாதரிடத்தில் வந்து தன்னை சொஸ்தமாக்கும்படி கேட்கும்போது அப்போஸ்தலர்கள் சேசுநாதரை நோக்கி, “சுவாமி, இவன் குருட னாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா?” என்று கேட்க, சேசு நாதர் மறுமொழியாக: “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, இவனிடத்தில் சர்வேசுரனுடைய வல்லமை விளங்கும் பொருட்டே இவன் குருடனாய்ப் பிறந்தான்” என்று அர்ச். அருளப்பர் தன் சுவிசேஷத்தில் எழுதி வைத்தார் (அரு.9:2,3).

(6) நீதிமான்கள் இக்கெடுதிகளைப் பொறுமையுடன் அனுபவித்து மற்றவர்களுக்கு நன்மாதிரிகையாயிருக்கும்படியாக (தோபி. 2:12).

17. பாவிகள் சுகமாயிருப்பதாகவும், நல்லவர்கள் கஸ்தி வருத்தப்படுவதாகவும் இவ்வுலகத்தில் பார்ப்பது உண்டு. இது தேவ பராமரிப்புக்கு விரோதமாகத் தோன்றவில்லையா? 

(1) சுவாமி இவ்வுலகத்தில் முதலாய்ப் பாவிகளைத் தண்டனை ஒன்றுமின்றி விடுகிறாரென்று நினைக்கிறது தப்பு. பாவத்தைக் கட்டிக் கொண்டவர்கள் மனக்குத்தல் என்கிற தண்டனையால் உபாதிக்கப்படுவார்கள். “தீங்கு புரிகிற எந்த மனிதனுக்கும்... துன்பமும், நெருக்கிடையும் உண்டாகும்” என்றார் அர்ச். சின்னப்பர் (உரோ. 2:9). இந்த வேதனை இலேசான வேதனை யென்று எண்ண வேண்டாம். அதைப் பொறுக்க முடியாமல், யூதாசு செய்தது போல, பற்பல பாவிகள் தங்களை மாய்த்துக் கொள்வதுண்டு. ஆகையால் மெய்யான சந்தோஷம் நல்லவர் களிடத்திலன்றி, பாவிகளிடத்திலிராது.

(2) எப்பேர்ப்பட்ட பாவியான போதிலும், ஏதாவது ஒரு சில நன்மைகள் செய்திருக்கக் கூடும். நீதியுள்ள சர்வேசுரன் அதற்கு மறு உலகத்தில் அவர்களுக்குச் சம்பாவனை கொடுக்கக் கூடாதபடியால், இவ்வுலகத்திலேயே அவர்களுக்குச் சம்பாவனை அளிக்கிறார். அதேவிதமாக நல்லவர்கள் செய்திருக்கக் கூடுமான பாவங்களுக்கு, அவர்களை மறு உலகில் தண்டிக்காதபடி சர்வேசுரன் அவர்களுக்குச் சிற்சில சமயங்களில் சிலுவைகளை இவ்வுலகிலிருக்கையிலே அனுப்புகிறதுண்டு.

18. தேவபராமரிப்பின் மட்டில் நமது கடமையென்ன? 

(1) நமக்கு என்ன சம்பவித்தாலும் கவலைப்படாமல், நமது ஏக நம்பிக்கை முழுதும் சர்வேசுரன் பேரில் வைப்பது, “அவர் உங்களை விசாரிக்கிறவராகையால், அவர்மேல் உங்கள் சகல கவலை களையும் வைத்து விடுங்கள்” என்று அர்ச். இராயப்பர் வசனித்திருக் கிறார் (1 இரா. 5:7). “ஆண்டவர் பேரில் உன் கவலையைப் போட்டு விடு; அவர் உன்னைப் போஷிப்பார்; நீதிமான்களை நித்திய காலத்திற்கும் கலங்க விட மாட்டார்” என்று தாவீது இராஜா எழுதினார் (சங்.65:24). “அஞ்சாதிருங்கள்; அநேக அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் மேலானவர்களாயிருக்கிறீர்கள்” என்று சேசுநாதரே வசனித்தார் (மத். 10:31).

(2) நமது பேரில் அவர் காட்டும் தயவுக்கு பிரதி நன்றியறிதல் செலுத்துவது: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத் தார். தேவனுக்கு எப்படி இஷ்டமோ அப்படியே ஆயிற்று. ஆண்டவருடைய நாமத்திற்குத் தோத்திரம் உண்டாகக் கடவது” என்றார் யோப் என்பவர் (யோப். 1:31). “ஆண்டவர் எனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் நான் அவருக்கு எதைச் செலுத்து வேன்?” (சங்.115:3).

(3) சிற்சில சமயங்களில் சுவாமி நமக்கு அனுப்பும் கஷ்ட நஷ்டங்களாகிய சிலுவைகளை அவர் நமது ஆத்தும நன்மைக்காக அனுப்புகிறார் என்று நம்பி, அவைகளைப் பொறுமை யுடன் சகிப்பதுமாம். அப்பேர்ப்பட்ட சமயங்களில் யோப் என்பவர் சொன்னதுபோல், “கடவுள் கையிலே நன்மையைப் பெற்ற நாம், தின்மையையும் பெறத் தேவையில்லையோ?” (யோப். 2:10) என்று சொல்ல வேண்டும்.