சேசுநாதருக்குள்ள இரு சுபாவங்கள்

56. (30) சேசுநாதர் சுவாமிக்கு எத்தனை சுபாவம் உண்டு?

தேவ சுபாவம், மனுஷ சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.

1. தேவசுதன் மனித அவதாரம் செய்வதற்கு முன் அவருக்கு எத்தனை சுபாவமிருந்தது?

பிதாவின் குமாரனாயிருக்கிறபடியால் அவருக்கு தேவ சுபாவம் மாத்திரம் இருந்தது.

2. அவர் மனிதனாய்ப் பிறந்தபின் அவருக்கு எத்தனை சுபாவம் இருந்தது?

தேவ சுபாவமும், மனுஷ சுபாவமும் ஆகிய இரண்டு சுபாவங்கள் அவருக்கு இருந்தன.

3. சேசுநாதர்சுவாமிக்குத் தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு என்பதற்கு அர்த்தம் என்ன?

மெய்யான தேவனாகவும், மெய்யான மனிதனாகவும் இருக்கிறார் என்று அர்த்தமாம்.

4. சுதனாகிய சர்வேசுரன் மனுஷ சுபாவத்தைத் தம்முடன் ஒன்றித்திருக்கிறபடியால், அந்த இரண்டு சுபாவங்களும் அவரிடத்தில் கலந்து போயிருந்தனவா?

அவர் மனுஷ அவதாரம் செய்தபின், சர்வேசுரனுக் குரிய புத்தி மனது, இலட்சணங்கள், கிரியைகளும், மனுஷனுக்குரிய புத்தி, மனது, சரீரம், கிரியைகள் முதலியவையும் அவரிடத்தில் கலந்து போகாமல் பிரிந்தே நின்று வெவ்வேறாயிருந்தன. உதாரண மாக: சேசுநாதர் மனிதனாகச் சாப்பிட்டார், நடந்தார், தேவனாக அப்பங்களைப் பலுகச் செய்தார், வியாதிக்காரர்களைக் குணப் படுத்தினார். ஆகையால் தெய்வீகத்துக்கும், மனுஷீகத்துக்கும் அவசியமான சகல குணங்களும் அவரிடத்தில் எவ்விதக் கலப்பும் மாற்றமுமின்றியிருக்கின்றன.

5. மனுஷ சுபாவமும் தேவ சுபாவமும் கலந்திருந்தால் என்ன சம்பவித்திருக்கும்?

இரண்டு சுபாவமும் ஒன்றோடொன்று கலந்திருந்தால், அவருக்கு ஒரு மூன்றாவது சுபாவம் உண்டானதென்று சொல்ல வேண்டியிருக்கும். அது மெய்யானால் சேசுகிறீஸ்து நாதருக்கு தேவ சுபாவமும், மனுஷ சுபாவமும் மெய்யாகவே இல்லை யென்று சொல்ல வேண்டியிருக்கும். ஆதலால் அவர் மனிதனு மல்ல, சர்வேசுரனுமல்ல என்று தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

6. அந்தத் தீர்மானத்தை விளக்கிக் காட்ட ஒரு உவமானம் சொல்லு.

மஞ்சள் நிறம் வேறு. நீல நிறம் வேறு. இவ்விரண்டின் கலப்பினால் உண்டாகும் நிறம் மஞ்சளானதுமல்ல, நீலமானது மல்ல, ஆனால் பச்சை என்னும் நிறமாம். அதுபோலவே சேசுநாதருடைய இரண்டு சுபாவமும் கலந்திருந்தால், அவர் மனிதனுமல்ல, சர்வேசுரனுமல்ல.

7. மனுஷ சுபாவமானது, தேவ சுபாவத்தில் மூழ்கி மறைந்து போனதில்லையோ?

ஒருபோதுமில்லை. ஏனெனில் மனித சுபாவம், தேவ சுபாவத்தில் மறைந்திருந்தால், சேசுநாதருக்கு மனித சுபாவம் மெய்யாகவே இல்லையென்று சொல்ல வேண்டியதாகிவிடும்; ஆதலால் அவர் மனிதனாயிருக்க மாட்டார். பாடுபட்டு மரிக்கவும், மனுக்குலத்தை இரட்சிக்கவும் அவராலே முடியாது.

8. தேவ சுபாவம் மனித சுபாவத்தோடு ஐக்கியமானதால், அது மனித சுபாவமாய் மாறிப் போனதென்றும் சொல்லலாமா?

சொல்லலாகாது. ஏனெனில் தேவ சுபாவம் அளவற்றதும் அழிவற்றதுமாயிருப்பதால், அழிவுள்ளதும் குறையுள் ளதுமான மனுஷ சுபாவத்தில் சேர்ந்து அளவுள்ளதாக மாறுவது ஒருக்காலும் இயலாத காரியம்.

9. சேசுநாதர் நம் சரீரக்கண்ணுக்கு வெறும் மனிதனைப் போல் தோன்றினபோதிலும், மனித சுபாவத்துடன் தம்மிடத்தில் ஒன்றித்திருக்கும் தேவ சுபாவத்தைக் காண்பிக்கச் சித்தமானாரா?

அநேக சமயங்களில் சித்தமானார். இப்படியே, அவர் சிறு குழந்தையாய்ப் பிறந்தபோது அவருடைய பிறப்பைச் சம்மனசுகள் இடையர்களுக்கு அறிவித்தார்கள் (லூக்.2:8). மேலும் அற்புதமான ஒரு நட்சத்திரம் அவருடைய மகிமையை வெளிப் படுத்தினதுமன்றி, அவரிடத்தில் இராஜாக்களை அழைத்துக் கொண்டு வந்தது (மத்.2:2). அவர் ஞானஸ்நானம் பெறும்போது இஸ்பிரீத்துசாந்து அவர்மேல் இறங்கி, “என் நேச குமாரன் இவரே” என்னும் பிதாவின் குரலொலி கேட்கப்பட்டது (மத். 3:16,17). அவர் ஏழையாய்த் திரிந்து வேதத்தைப் போதித்த காலத்தில் செத்துப் போனவர்களை உயிர்ப்பித்து வந்தார் (லூக். 7:11; அரு. 11:28; மத்.9:25). அவருடைய கட்டளைக்குக் காற்றும் கடலும் கீழ்ப்படிந்தன (மாற். 4:39). அவர் சிலுவையில் சாகிற வேளையில் அவர் உலக கர்த்தரென்று காண்பிக்க சூரியன் அற்புதமாய் மங்கிப் போக, பூமியதிர, கற்பாறைகள் பிளந்து போக, இறந்த அநேகர் உயிர்த்து எழும்ப, ஒருக்காலும் கேள்விப்படாத இவைபோன்ற அதிசயங்கள் நடந்தன (மத். 27).

10. இதிப்படியிருக்க நாம் தீர்மானிக்க வேண்டியதென்ன?

சேசுநாதர் சுவாமிக்குத் தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய வெவ்வேறான இரண்டு சுபாவங்கள் உண்டென்று தீர்மானிக்க வேண்டும்.

11. நம்மை இரட்சிக்கிறதற்கு சேசுநாதர்சுவாமி இரண்டு சுபாவங்கள் உடையவராயிருக்க வேண்டுமென்பது அவசியமா?

முழுதும் அவசியம். அவர் தேவனாயிராமல் வெறும் மனிதனாய் மாத்திரம் இருப்பாராகில் அல்லது மனித சுபாவம் கொள்ளாமல் வெறும் தேவனாயிருப்பாராகில், மனித ஈடேற்ற மென்கிற வேலையை முடிக்க அவராலே முடியாது. எனென்றால், ஒரு பக்கத்திலே சர்வேசுரனுக்குப் பாவத்தால் செய்த துரோகத்துக்கு மனிதனாலே முழுப் பரிகாரம் செய்ய முடியாததினால், சேசுநாதர் வெறும் மனிதனாயிருப்பாராகில், நம்மை இரட்சிக்க முடியாது. வேறு பக்கத்தில் சர்வேசுரன் பாடுபடுகிறது முடியாத காரியம். சேசுநாதர் வெறும் தேவனாயிருப்பாராகில் பாடுபடக் கூடாததி னாலே, நம்மை இரட்சிக்க அவராலே கூடாது என்பதுவும் நிச்சயம்.