வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

பாவ சங்கீர்த்தனம் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிற பச்சாத்தாபம் என்னும் தேவத் திரவிய அனுமானம், ஞானஸ்நானத்திற்குப் பிறகு கட்டிக் கொள்ளப்பட்ட பாவங்களின் மன்னிப்பிற்காக நம் ஆண்டவரால் நியமிக்கப்பட்ட ஞான வழியாக இருக்கிறது.  பாவங்களை மன்னிக்கவும், மன்னியாமல் இருக்கவும் அப்போஸ்தலர்களுக்குக் கிறீஸ்துநாதரால் வழங்கப்பட்ட அதிகாரம், நாம் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டிய கடமையைக் குறித்துக் காட்டுகிறது.

சர்வேசுரனுடைய கற்பனையானது பாவங்களை சங்கீர்த்தனம் செய்ய வேண்டிய கடமையை நம் மீது சுமத்தினாலும், அந்தக் கடமை எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான நேரத்தை அறுதியிட்டுக் கூறவில்லை.  விசுவாச காலங்களில், இது காரியத்தில் எந்த விதமான சட்டத்தையும் ஏற்படுத்துவது திருச்சபைக்கு அவசியமாக இருக்கவில்லை.  விசுவாசிகள், பாவசங்கீர்த்தனத் தொட்டியில் தங்கள் மீது பொழியப்படுகிற வரப்பிரசாதங்களை அறிந்தவர்களாக, அடிக்கடி இந்தத் தேவத் திரவிய அனுமானத்தைத் தேடி வந்தனர்.  ஆனால் காலப் போக்கில் பலர் இக்காரியத்தில் அசமந்தம் உள்ளவர்களாக மாறிய போது, கி.பி. 1215‡ஆம் ஆண்டில் நடந்த லாத்தரன் பொதுச் சங்கத்தில், வரு­த்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை ஏற்படுத்துவது அவசியம் என்று திருச்சபை உணர்ந்தது.  ஒருவன்  தன்னிடம் சாவான பாவம் இருக்கக் கண்டால், வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதுதான் இந்தக் கட்டளையின் பொருள் ஆகும்  சாவான பாவ நிலையில் உள்ள ஒருவன் ஒரு வருடத்திற்கும் மேலாகப்  பாவ சங்கீர்த்தனம் செய்வதை அசட்டை செய்வான் என்றால் அவன் திருச்சபையின் இரண்டாம் கட்டளைக்கு எதிராக சாவான பாவம் கட்டிக் கொள்கிறான்.  

இந்தக் கட்டளையை நிறைவேற்ற, கடைசியாய்ச் செய்த நல்ல பாவசங்கீர்த்தனத்திற்குப் பிறகு வரும் பன்னிரண்டு மாதங்களுக்குள் வருடாந்தரப் பாவ சங்கீர்த்தனம் செய்யப்பட வேண்டும்.   ஒரு கெட்ட பாவ சங்கீர்த்தனம் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில்லை. பாவ சங்கீர்த்தனம் செய்வதற்குரிய மிகச் சரியான நேரம் குறித்துத் தரப்படவில்லை, என்றாலும் வழக்கமாக விசுவாசிகள் தங்கள் பாஸ்காத் திவ்ய நன்மைக்கு முன்பாக பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.  வருடாந்தரப் பாவசங்கீர்த்தனம் செய்யத் தவறுகிற எந்த ஒரு கத்தோலிக்கனும், மனச்சான்றில், முடிந்த வரை சீக்கிரமாக இந்தத் தேவத் திரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறான்.

ஓருமுறையாவது என்ற வார்த்தையின் மூலம், விசுவாசிகள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் திருச்சபை வெளிப்படுத்துகிறது.  இந்த அற்புதமான தேவத் திரவிய அனுமானம் தேவ இஷ்டப் பிரசாதத்தை மட்டுமல்லாது, பாவத்தைத் தடுப்பதற்கான உதவி வரப்பிரசாதத்தையும் நம்மில் அதிகரிக்கிறது.  சாவான பாவத்தில் விழுகிறவர்களுக்கு பாவ சங்கீர்த்தனம் அவசியமான காரியமாகும்.  ஏனெனில், கடவுளோடு பகைமை கொண்டிருக்கும் நிலையில்  மரித்தால், தாங்கள் நித்திய நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் கத்தோலிக்கர் அறிந்திருக்கின்றனர். இந்தக் காரணத்திற்காகவே  “மனந்திரும்பி ஆண்டவரிடஞ் சேரத் தாமதியாதே;   நாளுக்கு நாள் தாமதஞ் செய்யாதே” என்று கடவுள் பாவிகளை எச்சரிக்கிறார் (சர்வப். 5:8).  மோசமான நோய்வாய்ப் பட்டவன், அல்லது பயங்கர விபத்தில் சிக்கிக் கொண்டவன்  ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறான்.  அவ்வாறே சாவான பாவத்தில் விழுந்து விட்ட ஒரு கத்தோலிக்கனும், முடிந்த வரை சீக்கிரத்தில், ஞான மருத்துவராயிருக்கிற ஒரு குருவிடம் செல்ல வேண்டிய அவசரத்தில் இருக்கிறான்.  “நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம் பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கு அவர் (சர்வேசுரன்) பிரமாணிக்கமும், நீதியும் உள்ளவராயிருக்கிறார் ” என்று அர்ச். அருளப்பர் கூறுகிறார் (1 அரு. 1:9).