மாதாவின் வேண்டுகோள்

மூன்றாவது அம்சம்

27. இந்தப் பகுதியில் பாத்திமா அன்னையின் முக்கிய வேண்டுகோளைப் பற்றிப் பார்ப்போம். “மனந்திரும்பிய வாழ்விற்கு என்னிடம் வாருங்கள்” என்ற கன்னிமாமரியின் வேண்டுகோள், புதிய ஏற்பாட்டில் நாம் காணும் வேண்டு கோள்தான். மத்.4:17 - “அது முதல் சேசுநாதர், தவம் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” மனந் திரும்புங்கள், கடவுளிடம் திரும்பி வாருங்கள், தவம் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறது. இவையே சுவிசேஷத்தின் செய்தியாகும். இதே வேண்டுகோள் பாத்திமாவிலும் எதிரொலிக்கிறது. தேவ அன்னை சுவிசேஷ போதனையை நமக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்டுவதைவிட வேறொன்றும் செய்ததே இல்லை. ஆனால் அன்னை நமக்கு நினைவூட்டிக் கூறும் செய்தியில் உள்ள நுணுக்கத்தை நாம் உணர வேண்டும். கிறீஸ்துவின் சித்தப்படி மாதா நம்மிடம் பின்வருமாறு கூறுகிறார்கள். “என் திருமகன் சேசு கேட்கும் மனந்திரும்புதலை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அவருடைய சித்தப்படி இந்த மனந் திரும்புதலை என்னிடம் வராமல் நீங்கள் இன்று செய்ய முடியாது. விசுவாசத்தினால் என் மாசற்ற இருதயத்தில் வாசம் செய்யாமலும், என் மத்தியஸ்தம் இல்லாமலும், அதாவது, என் தாய்மை வழியாக அல்லாமல், வேறு வழியில் நீங்கள் மனந்திரும்புதல் பெற முடியாது. கிறீஸ்தவ வாழ்க்கைக்குத் திரும்புகிற மனமாற்றத்தை என் வழியாகவே நீங்கள் அடைய முடியும். இது சர்வேசுரனின் சித்தம், என் சித்தமல்ல.” இதுவே பாத்திமாவின் வேண்டுகோளாகும்.

“சர்வேசுரன் உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த விரும்புகிறார்” என்று நமது அன்னை கூறிய போது, உண்மையில், “உலகை நான் ஆள வேண்டும் என சர்வேசுரன் ஆசிக்கிறார்” என்றே மாதா கூறினார்கள் என்று கோடிட்டுக் காட்ட விரும்புகிறார்கள்.

28. "பக்தி” என நாம் பலமுறை உபயோகிக்கிற வார்த்தையைப் பற்றி ஒரு சில கருத்துக்களை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். பக்தி என்பது கிறீஸ்தவ வாழ்வுடன் ஒன்றித்த பக்தி முயற்சிகளைப் பின்பற்றுவது என்பது பொருளல்ல. கிறீஸ்தவ வாழ்வுக்குப் பிரியமான, நியாயமான பக்தி முயற்சிகளைக் குறைகூறுவதும் என் நோக்கமல்ல. உண்மையான பக்தி என்பது, பக்தி முயற்சிகளைச் செய்வதுடன் நின்றுவிடாது, சுவிசேஷத்தின் நிறைவேற்ற மான வாழ்க்கை வாழ்வதே உண்மையான பக்தி வாழ்வு. பக்தி என்ற வார்த்தையின் லத்தீன் மூலம் DEVOTIO. DEVOVERE என்ற வினைச்சொல்லுக்கு DEDICARE அதாவது, அர்ப்பணித்தல் என்பதே பொருள். ஒப்புக்கொடுத்தல், கையளித்தல், அல்லது அர்ப்பணித்தல் என்று கூறலாம். ஆகவே முழுப் பக்தியுள்ள வாழ்வு என்பது முழு அர்ப்பண வாழ்வுதான். மரியாயின்மீது உண்மையான முழுமையான பக்தி கொள்ளுதல் என்றால் மாதாவுக்கு நம்மை உண்மையுடனும், முழுவதுமாகவும் அர்ப்பணித்தல் என்பதே பொருளாகும். அதாவது நம் இருதயத்திலும், உலகமெங்கிலும் மாதா ஆட்சி புரிய கையளித்து விட்டுக்கொடுப்பதே உண்மையான மாதா பக்தியாகும். 

பாத்திமா வேண்டுகோளின் தனித்தன்மை

29. மாதா நம்மிடம் என்ன கேட்கிறார்கள்? எதை எதிர்பார்க்கிறார்கள்? நம் வாழ்வில் சுவிசேஷத்தின் நிறை வேற்றத்திற்குரிய மனந்திரும்புதலை மரியாயின் வழியாக அடைவதையே நம்மிடம் நம் அன்னை கேட்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நாம் செய்ய வேண்டியது: நம்மையே அவர்களுக்கு அர்ப்பணித்து அவர்கள் நம்மில் ஆட்சி புரிய அனுமதிக்க வேண்டும். இது நம் வாழ்க்கையின் " ஒவ்வொரு அம்சத்திலும் நிறைவேற வேண்டும். 

30. இந்த வேண்டுகோளை எல்லாக் கிறீஸ்தவர்களும் ஏற்க வேண்டும். சகல மனிதர்களின் பாவங்களையும், விசேஷமாய் அடிப்படைப் பாவமாகிய நாஸ்தீகத்தையும் மேற்கொள்ளும்படியே இந்த வேண்டுகோள் செய்யப் படுகிறது. இந்த நாஸ்தீகத்தைப் பரப்பும் முக்கிய கருவியாக ரஷ்யா இருக்கிறதை நாம் கவனிக்க வேண்டும். எனவே பாத்திமா வேண்டுகோளின் சிறப்பு அம்சமாக இருப்பது, கம்யூனிஸ்ட் ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனை. இந்த அர்ப்பணத்தை பாப்பரசர் உலகில் உள்ள எல்லா ஆயர்களுடனும் சேர்ந்து செய்ய வேண்டும். இதுவரை செய்யப் பட்ட அர்ப்பணங்கள் மரியாயின் வேண்டுகோளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை. மிகுந்த பக்தியுடன் பாப்பரசர் 12-ம் பத்திநாதரால் 1942-ம் ஆண்டு செய்யப்பட்ட அர்ப்பணம் கூட இந்த வேண்டுகோளை நிறைவு செய்யவில்லை. இந்த அர்ப்பணம் ஐரோப்பிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்த போதிலும் அது பாப்பரசர் தனிப்பட்ட முறையில் உலகை அர்ப்பணித்த நிகழ்ச்சியே யாகும். ரஷ்யா என்று குறிப்பிட்டு ஐக்கிய அர்ப்பணம் செய்யப்படவில்லை.

திருச்சபையின் அப்போஸ்தல அதிகாரிகள் (Apostolic Hierarchy) ஐக்கிய அர்ப்பணமாக ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். இந்த அர்ப்பணத்தைப் பாப்பரசர், மேற்றிராணிமார் மட்டுமின்றி ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். 

31. உலகில் இப்போது உள்ள குழப்பத்திற்கும், பயங்கரவாதம் பரவி வருவதற்கும் காரணம் என்ன? ஏன் உலகம் இக்கால இறுதியின் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது? ஏனென்றால் பாத்திமாவில் நமது அன்னையின் வழியாகவும், பின்னர் சகோதரி லூசியா வழியாகவும் வெளியிடப்பட்ட சர்வேசுரனின் சித்தத்திற்கு நாம் பணிந்து, பயனுள்ள பதில் அளிக்கத் தவறி விட்டோம்.

உலகம் காப்பாற்றப்படுவது மாமரி வழியாக மட்டுமே! 

32. மாமரியின் வழியாகவே தவிர வேறு எந்த வழியாலும் உலகம் காப்பாற்றப்பட முடியாது. அதற்கு, சர்வேசுரன் பாத்திமாவில் கேட்டவற்றை நிறைவேற்றுவதே வழியாகும். பாத்திமா அன்னையின் அறைகூவலுக்குப் பதில் அளிப்பது மூலமாகத் தவிர, வேறு வழிகளில் உலகில் அமைதி ஏற்பட எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வீண். அவை தோல்வியே அடையும். ஏனெனில் சர்வேசுரன் தம்முடைய சித்தத்தை இவ்விதமாக வெளியிட்ட பின்னர், மனிதன் தன்னிச்சையாக வேறு வழியைத் தேடக் கூடாது. 

33. பாத்திமா செய்திகளில் இந்த வேண்டுகோள் முக்கிய நடுப்பொருளாக அமைந்துள்ளது. இந்த வேண்டு கோளின் அடிப்படையில் நாம் மரியாயின் மீது கொள்ள வேண்டிய பக்தி என்றால் என்ன என்பதைக் கண்டுணர வேண்டும். அதைக் கண்டுபிடித்தால்தான் பாத்திமா செய்தியின் ஆன்மீகத் தன்மை என்ன என்பதை அறிய முடியும். அதுவே மாதாவுக்கு முழுவதும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. அதுவே மரியாயிடத்தில் வாழ்வதாகும். இதுதான் பாத்திமா செய்தியின் ஆன்மீக இரகசியம். இதை அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட்டின் வார்த்தைகளில் சுருக்கமாக இப்படிக் கூறலாம்: “நம் எல்லாச் செயல்களையும் சேசுவின் வழியாக, சேசுவுடன், சேசுவுக்காக செய்வதற்கு ஏதுவாக, அவைகளை மரியாயின் வழியாக, மரியாயுடன், மரியாயிடத்தில், மரியாயிக்காகச் செய்ய வேண்டும்” (மரியாயின் மீது உண்மைப் பக்தி, எண் 257).