புலன்கள், நினைவு மற்றும் ஆசாபாசங்களை ஒறுத்தல்

1. எப்பொழுதும், எல்லாவற்றிற்கும் மேலாகவும், ஒவ்வொரு ஆபத்தான பார்வைக்கும் - ஒவ்வொரு மேலோட்டமான, பயனற்ற பார்வைக்கும் தைரியமாக உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். கூர்ந்து பார்க்காமல் பாருங்கள். யாருடைய அழகையோ, அழகின்மையையோ தீர்மானிக்கும் அளவுக்கு உற்றுப் பார்க்காதீர்கள்.

2. முகஸ்துதியான வார்த்தைகளுக்கும், புகழ்ச்சிக்கும், வலுக்கட்டாயத்திற்கும், தீய அறிவுரைக்கும், அவதூறுக்கும், பிறர்சிநேகமற்ற பரிகாசத்திற்கும், முன்யோசனையற்ற பேச்சுகளுக்கும், தீய நோக்கம் கொண்ட விமர்சனத்திற்கும், உரத்த சந்தேகங்களுக்கும், இரண்டு ஆத்துமங்களுக்கு இடையே மிகமிகச் சிறிய குளிர்ந்த தன்மையை விளைவிக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் உங்கள் செவிகளை மூடிக் கொள்ளுங்கள்.

3. உங்கள் அயலானின் சுகவீனம் அல்லது நோயின் காரணமாக நீங்கள் துர்நாற்றம் எதையாவது அனுபவிக்க நேர்ந்தால், அதைப் பற்றி எப்போதாகிலும் முறையிடுவது உங்களிடமிருந்து தொலைவாயிருப்பதாக, அதிலிருந்து ஒரு பரிசுத்த மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

4. உணவின் தரத்தைப் பொறுத்தவரை, நம் ஆண்டவரின் ஆலோசனைக்கு மிகுந்த மரியாதை தாருங்கள், 'உங்களுக்கு முன் வைக்கப்படுவது எதுவாயிருந்தாலும், அதை உண்ணுங்கள். நல்ல உணவில் இன்பங்காணாமலும், மோசமானதைப் பற்றி அருவருப்படையாமலும் உண்ணுங்கள். இரண்டிற்குமிடையே வேறுபாடு காட்டாதிருங்கள். அதிலேதான் நிஜமான ஒறுத்தல் இருக்கிறது" என்கிறார் அர்ச். பிரான்சிஸ் சலேசியார்.

5. உங்கள் உணவுகளைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுங்கள்; உணவு மேஜையில் மிகச் சிறிய தவமுயற்சியை உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள்; உதாரணமாக, போதுமான உப்புப் போடுவதை, ஒரு கிண்ணம் குளிர்பானத்தை, ஓர் இனிப்பைப் பரித்தியாகம் செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் இதைக் கவனிக்க மாட்டார்கள், ஆனால் கடவுள் இதைக் கணக்கில் வைத்துக் கொள்வார்.

6. உங்களுக்குத் தரப்படுவது, மிக அதிகமாக உங்களுக்கு ஒத்துப்போகிறது என்றால், சிலுவையில் நமது ஆண்டவருக்குத் தரப்பட்ட பிச்சுக் கலந்த காடியைப் பற்றி நினையுங்கள்; இது சுவை பார்ப்பதிலிருந்து உங்களைத் தடுக்க முடியாது. ஆனாலும் அது சுவையின்பத்திற்குச் சமமான எதிர்விசையாக இது உதவும்.

7. இச்சைக்குரிய எல்லாத் தொடுதலையும், எதில் உங்களுக்கு ஆசாபாசம் இருக்கிறதோ, எதைக் கொண்டு நீங்கள் ஓர் ஆசாபாசத்தைத் தேடுகிறீர்களோ, எதிலிருந்து முக்கியமான புலனகள் சார்ந்த ஒரு மகிழ்ச்சியைப் பெறுகிறீர்களோ, அந்த ஒவ்வொரு வருடலையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

8. உங்களை உஷ்ணப்படுத்திக் கொள்வது, உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள அவசியமில்லாத பட்சத்தில் அப்படிச் செய்வதை விலக்குங்கள்.

9. இயல்பாகவே சரீரத்தை வேதனைப்படுத்துகிற எல்லாவற்றையும் குறிப்பாக குளிர்காலக் குளிரையும், கோடைகால வெப்பத்தையும், கடினமான படுக்கையையும் அவ்விதமான ஒவ்வொரு அசௌகரியத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். காலநிலை எப்படி இருந்தாலும் சிரித்த முகத்தோடு இருங்கள்; எல்லா வெப்ப நிலைகளிலும் புன்னகையுங்கள் தீர்க்கதரிசியானவரோடு சேர்ந்து 'குளிரே, வெப்பமே, மழையே, நீங்கள் ஆண்டவரை வாழ்த்துங்கள்" என்று சொல்லுங்கள். நான் சுகவீனமாயிருந்ததைவிட வேறு ஒருபோதும் அதிக நன்றாக இருந்ததில்லை" என்ற அர்ச். பிரான்சிஸ் சலேசியாருக்குப் பழக்கமான இந்த வார்த்தைகளை நல்ல இருதயத்தோடு நம்மால் சொல்ல முடியும் நாள்தான் நமக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

10. உங்கள் சிந்தனை ஒரு மிகச் சிறப்பான நிலையின் கவர்ச்சியைக் கொண்டு உங்களை வசீகரிக்கும் போதும், ஒரு வறட்சியான எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கொண்டு அது உங்களை வருத்தப்படுத்தும் போதும், உங்களை நோகச் செய்த ஒரு வார்த்தை அல்லது செயலின் நினைவைக் கொண்டு அது உங்களுக்கு எரிச்சலூட்டும் போதும், அதை ஒறுத்து அடக்குங்கள்.

11. பகல் கனவு காணும் தேவையை உங்களுக்குள் நீங்கள் உணருகிறீர்கள் என்றால், இரக்கமின்றி அதை ஒறுத்து அடக்குங்கள்.

12. பொறுமையற்றதனம், எரிச்சல் அல்லது கோபம் ஆகியவை அனைத்திலும் அதிகக் கவனத்தோடு உங்களை ஒடுக்குங்கள்.

13. உங்கள் ஆசைகளை முழுமையாகப் பரிசோதியுங்கள். அறிவு மற்றும் விசுவாசத்தின் கட்டுப்பாட்டிற்கு அவற்றை கொண்டு வாருங்கள். ஒரு பரிசுத்த வாழ்வைவிட அதிகமாக ஒரு நீண்ட வாழ்வையும், சிரமங்களோ, துயரங்களோ இல்லாத இன்பமான, வசதியான வாழ்வையும், போராட்டமில்லாத வெற்றியையும், பின்னடைவுகள் இல்லாத வெற்றியையும், விமர்சனம் இல்லாத புகழ்ச்சியையும் எந்த விதமான சிலுவையும் இல்லாத ஒரு சுகமான, சமாதானமுள்ள வாழ்வையும், அதாவது நம் தெய்வீக ஆண்டவருடைய வாழ்வுக்கு முற்றிலும் எதிரான ஒரு வாழ்வையும் நீங்கள் விரும்பியதில்லையா?

14. உண்மையில் கெட்டவையாக இல்லாவிட்டாலும், மேலோட்டமான வாசகம், திறமையின்றி அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற, ஆத்துமத்தைக் காயப்படுத்தக் கூடிய சில பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாதபடி கவனமாயிருங்கள்.

15. உங்களுடைய அனைத்திலும் பெரிய தவறுகள் எதுவென்று கண்டுபிடிக்கத் தேடுங்கள். அதை அடையாளம் கண்டவுடன், அது கடைசியாகப் பின்வாங்கி ஓடும் வரையிலும் அதை முழு நேரமும் துரத்தியடித்துக் கொண்டேயிருங்கள். இந்த நோக்கத்திற்காக, ஆத்தும் சோதனை அனுசரிப்பதல், அது ஒரே விதமாக, அல்லது அலுப்பூட்டுவதாக இருந்தாலும் நல்ல மனதோடு உங்களை உட்படுத்துங்கள்.

16. இரக்கமுள்ளவர்களாக இருப்பதும், அதை வெளிக்காட்டுவதும் உங்களுக்குத் தடை செய்யப்படவில்லை. ஆனாலும் அதில் உரிய அளவைத் தாண்டிவிடும் ஆபத்துக்கு எதிராக விழிப்பாயிருங்கள். அளவுக்கு அதிகமாக சுபாவத்தன்மையுள்ள பற்றுதல்களையும், தனிப்பட்ட நட்புகளையும், தனிப்பட்ட எல்லா இளக்காரங்களையும் எதிர்த்து நில்லுங்கள்.