மரிக்கிறவர்களின் தாய்!

நாம் மரிக்கும் அறை நம் தேவதாயின் விசேஷ செயல் பாட்டுக்குரிய இடமாக உள்ளது. தனது இறுதி அவஸ்தையில் இருப்பவர்கள் நம் அன்னைக்குப் பிரியமான பிள்ளைகளாக இருக்கிறார்கள். நம் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையின் வியாகுலங்களின் மீதான பக்தியின் ஒரு விலை மதிப்பில்லாத பலன், மரணத்திற்கு முன் தரப்படுகிற உத்தம மனஸ்தாபமும், பாவத்தைப் பற்றிய உண்மையான மனவுறுத்தலும், இறுதியான மரணப் போராட்டத்தில் மாமரியின் விசேஷ பாதுகாவலும் ஆகும்.

வியாகுல மாதா பக்தி, இறுதி நேரத்தில் இந்த பக்திக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிச்சயமான வரப்பிரசாதங்களின் காரணமாக மட்டுமல்ல, மாறாக, சேசுவின் திருமரணத் தின்போது அவருக்கு நம் மாதா செய்த ஊழியத்தின் காரணமாகவும் நல்மரணத்திற்கு ஒரு சிறந்த தயாரிப்பாக உள்ளது.

அர்ச்சியசிஷ்டவர்கள், பக்தியுள்ள ஆன்மாக்களின் சரித் திரங்களில் எண்ணற்ற நிகழ்ச்சிகளில், மாமரி அவர்களுடைய கடைசி அவஸ்தை நேரத்தில் அவர்களுக்குத் தோன்றி, காணக்கூடிய விதமாக அவர்களுக்கு உதவி செய்ததை நாம் வாசிக்கிறோம். ஆயினும், இந்த வியாகுல மாதா பக்தி மரண நேரத்தில் நமக்கு ஆறுதல் தர வேண்டும் என்று நாம் உண்மையாகவே விரும்பினால், நாம் பல ஆண்டுகளாக இந்த பக்தியைப் பிரமாணிக்கத்தோடு அனுசரித்து வந்திருக்க வேண்டும்.

(குறிப்பு:ஆண்டுக்கணக்கில் பிரமாணிக்கமாயிருத்தல் என்பது புகழ்ச்சிக்குரியதுதான் என்றாலும், சமீப காலத்தில் தான் இந்த பக்தியைக் கைக்கொண்டவர்கள், தங்கள் மரண நேரத்தில் மரியாயின் விசேஷ ஆறுதலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே நாம் உறுதியாக நம்புகிறோம். சுவிசேஷத் திலுள்ள உவமையில், பகலில் மிகத் தாமதமான மணி வேளையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள், நாள் முழுவதும் உழைத் தவர்களுக்கு சமமான கூலியைப் பெற்றுக் கொண்டார்கள் (மத்.20:11-16).

தமது திருமரணத்தின்போது, தமது பரிசுத்த அன்னை தமக்குக் காட்டிய தயவிரக்கத்தின் காரணமாக, அவர்கள் சகல மனிதர்களுக்கும், விசேஷமாக, மரிக்கிறவர்களுக்கும் தாயாக ஆனார்கள் என்று நமது திவ்விய ஆண்டவர் அர்ச். பிரிட்ஜித் அம்மாளுக்கு வெளிப்படுத்தினார். இஸ்பிரீத்து சாந்துவானவரின் அளவற்ற நேசத்தில், மாமரி கடவுளின் தாயானார்கள். தன் துன்பங்கள் மற்றும் தன் தயவிரக்கத்தின் வழியாக, அவர்கள் நம் தாயாக ஆனார்கள். தன் திருக் குமாரனின் மரணத்தின்போது அவருடன் இருந்ததன் மூலம், தன் குழந்தைகளின் மரணத் தறுவாயில் அவர்களுக்குத் தேவையான விசேஷ உதவியை அவர்களுக்குத் தரும் வரப்பிரசாதத்தை மாதா சம்பாதித்துக் கொண்டார்கள்.

திவ்விய கன்னிகை ஆகிர்தா மேரியிடம், மரிக்கிறவர் களின் துன்பங்களும், ஆபத்துக்களும் மிகவும் பெரியவை என்பதால், மிக அடிக்கடி மரிக்கிறவர்களுக்காக ஜெபிக் கும்படி கேட்டுக் கொண்டார்கள். தங்கள் கடைசி அவஸ்தையில் நித்திய அழிவினின்று தங்கள் ஆன்மாக்களை இரட்சித்துக் கொள்ள இன்னும் ஒரு சில நிமிடங்களை மட்டுமே கொண்டிருக்கிற பாவிகள் இருக்கிறார்கள்! ஒரு பக்தியுள்ள பரிசுத்தமான ஜீவியத்தின் கனிகளை இறுதி வரை காத்துக் கொள்வதற்கான கடைசிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற நீதியுள்ள ஆன்மாக்கள் இருக்கிறார்கள்! நரகத்தின் கோபாவேசமும், வஞ்சகமும், கட்டிக் கொண்ட பாவங்களின் நினைவும், தேவ இஷ்டப்பிரசாதத்தில் தான் இருக்கிறோமா என்ற நிச்சயம் இல்லாமையும், நாம் அறியாத எதிர்கால பயங்கரங்களும் - இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஆத்துமத்தைச் சோர்வடையச் செய்து, அதைப் பார மாக்குகின்றன. ஆனால் சர்வேசுரனுடைய திருத்தாயாரின் மீதும், விசேஷமாக அவர்களுடைய வியாகுலங்களின் மீதும் பக்தியுள்ளவர்கள் இந்த இறுதி வேளையில் கைவிடப் படுவதில்லை . மரணத்தின் இறுதி கணத்திலும் கூட நரகத்தின் வாயிலிருந்து எண்ணிலடங்காத ஆன்மாக்களை மாமரி காப்பாற்றியிருக்கிறார்கள். சர்வேசுரனை நேசித்துக் கொண்டும், அவருடைய திவ்விய மாதாவின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டும் மரிப்பவர்கள் யாராயினும், அவர்கள் தண்டனைத் தீர்வைக்கு ஒருபோதும் உள்ளாக மாட்டார்கள் என்று அர்ச். மரிய லிகோரியார்கூறுகிறார். 

அர்ச். வின்சென்ட் பல்லோட்டி வியாகுல மாதா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் முத்திப்பேறு பட்டம் பெற்ற நிகழ்ச்சி பற்றிய தொகுப்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி விவரிக்கப் பட்டுள்ளது: வியாகுல மாதாவின் பேரில் பக்தியை அனுசரித்து வந்த யாரும் இதுவரை இழக்கப்பட்டதேயில்லை என்றும், இந்த பக்தியைப் பிரமாணிக்கமாக அனுசரித்து வருபவர்களை, அவர் களுடைய மரண வேளையில் எந்த விதமான சோதனைகளாலும் தாக்கக் கூடாது என்று தீய அரூபிகளுக்குக் கடவுள் கட்டளையிட்டிருக்கிறார் என்றும், பேய்பிடித்த ஒரு மனிதனின் வாய்மொழி மூலம் ஒரு தீய அரூபி அறிவித்தது! . இந்த அறிவிப்பு உண்மையானது என்று அர்ச். வின்சென்ட் எந்த அளவுக்கு உறுதியாக நம்பினார் என்றால், திவ்விய கன்னிகைக்குத் தோத்திரமாகவும், விசுவாசிகளின் நன்மைக் காகவும் அவர் இதை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாம் நம் நேச அன்னையின் வியாகுலங்களை தயவிரக்கத் தோடு நினைவுகூர்ந்து அவற்றை நேசித்து வருவோமானால், நம் மரண வேளையில் பாக்கியவதியான இந்த திவ்விய கன்னிகை நமக்கு உதவி செய்ய வருவார்கள் என்பதை அறிந்திருப்பது எப்பேர்ப்பட்ட ஆறுதலான காரியம்!