ஏழு வியாகுலங்கள்!

திருச்சபையானது முழு முயற்சியோடு தன்னுடைய பிள்ளைகள் மோட்ச அன்னையின் வியாகுலங்களின் மீது பக்திகொள்ள வேண்டும் என ஆசிக்கிறது. நமது விசேஷ வணக்கத்திற்காக மாதாவின் ஏழு வியாகுலங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இவையே வியாகுல மாதா ஜெப மாலையின்போது தியானிக்கப்படும் தேவ இரகசியங்கள் ஆகும். (இது பின்வரும் அத்தியாயம் ஒன்றில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது.) அவை:

1. சிமியோனின் தீர்க்கதரிசனம். 

2. எகிப்து நாட்டுக்கு குழந்தை சேசுவுடன்தப்பிச்செல்லுதல் 

3. குழந்தை சேசு தேவாலயத்தில் காணாமல் போனது. 

4. மாதாகல்வாரிப் பாதையில் சேசுவை சந்தித்தது. 

5. சேசு சிலுவையில் மரித்தது. 

6. மரித்த சேசுவின் திருச்சரீரத்தை மாதாவின் மடியில் வளர்த்தியது.

7. சேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தது.

தனது தாய்மையுள்ள இருதயத்தை ஊடுருவிய இந்த ஏழு வியாகுலங்களின் காரணமாக, சர்வேசுரனுடைய தாயார் சிலுவையின் அடியில் நிற்பது போல, அல்லது தனது மடியில் உயிரற்ற சேசுவின் திருச்சரீரத்தைத் தாங்கியிருக்கிற நிலையில், அவர்களுடைய மாசற்ற இருதயத்தை ஏழு வாள்கள் ஊடுருவி யிருப்பது போல, அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார்கள். அவர் களுடைய இருதயம் வாளால் ஊடுருவப்படுவது பரிசுத்த சிமியோனால் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டது: “உம்முடைய ஆத்துமத்தையும் ஒரு வாள் ஊடுருவும்” (லூக்.2:35). பரிசுத்த திருச்சபை தேவதாயின் ஏழு வியாகுலங்களை மட்டுமே நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால் அவற்றின் நிஜமான எண்ணிக்கையை யாரால் அளவிட முடியும்! சர்வேசுரனுடைய திருமாதாவின் துயரங்களை யாரும் புரிந்து கொள்ள முடியாது! அவைகள் நம் புத்திக்கு எட்டாதவை! ஆனாலும், தன் திவ்விய குமாரனின் வாழ்வைப் போலவே அவர்களுடைய முழு வாழ்வும் துன்பங்கள், இன்னல்களின் ஒரு தொடராக இருந்தாலும், சேசுவின் கசப்பான பாடுகள் மற்றும் மரணத்தின் புனித வாரத்தின் போதுதான் அனைத் திலும் அதிகப் பெரிதான வேதனைகளும், துன்பங்களும் அவர்களுக்கு வந்தன. அப்போதுதான் வெறுப்பு மற்றும் கடுங்கோபத்தின் புயல் முழு வன்மையோடு சேசுவுக்கு எதிராக வெடித்தது. -

நம் திவ்விய இரட்சகரின் பாடுகளின்போது, மாதா தன் குமாரனுடைய வேதனைகளைப் பார்த்த ஒவ்வொரு முறை யும், அவர்களுடைய ஆத்துமத்தை ஒரு வாள் மேலும் ஆழமாக ஊடுருவியது. அவருடைய குரலின் ஒவ்வொரு சத்தமும் விசேஷமான கசப்பை அவர்களுடைய இருதயத் திற்குக் கொண்டு வந்தது. அவர் மீது அவர்கள் கொண்டிருந்த நேசம் அவருடைய திருப்பாடுகளின் போது ஒவ்வொரு கணமும் அதிகரித்தது. அவர்களுடைய நேசத்தின் இந்த ஒவ்வொரு அதிகரிப்பும், அவர்களது வியாகுலங்களை அதிகரித்தன. நம் ஆண்டவர் அவர்களுக்கு எவ்வளவுக்கு அதிகப் பிரியமுள்ளவரும், அதிக மதிப்புள்ளவருமாய் ஆனாரோ, அவ்வளவு அதிகக் கூர்மையாக அவருடைய கொடுமையான, அவமானமுள்ள திருப்பாடுகளின் இருதயத்தைப் பிளக்கும் தேவ சாபத்தை அவர்கள் உணர்ந்தார்கள்! தன் தெய்வீகக் குமாரனின் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும், அவருடைய பரிசுத்த ஆள்தன்மையின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒவ்வொரு அவமானத்தையும் மாதா தன் ஆத்துமத்திலும், தன் புலன்களிலும் உணர்ந்தார்கள். என்றாலும் அவர் களுடைய வெளிறிப்போன திரு அதரங்களிலிருந்து எந்த முறைப்பாடும், கதறலும் வெளிப்படவில்லை. வீரத்துவமிக்க திடத்துடன் அவர்கள் தன் மிக வன்மையான துயரத்தை அடக்கினார்கள். தேவ சித்தத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, உலகத்தின் பாவங்களுக்காகத் தன் திருக்குமாரனின் பலியை தாராள உள்ளத்தோடு ஒப்புக் கொடுத்தார்கள்.