ஜெபமாலை சங்கீத மாலை ஏன்?

அர்ச்.சாமி நாதர் (1214- ஆண்டு) ஜெபமாலை பக்தி சபையை ஏற்படுத்திய நாளிலிருந்து 1460-ம் ஆண்டில் முத்.ஆலன் ரோச் அதை புதுப்பித்த நாள் வரையிலும் ஜெபமாலை சேசு மரியாயின் சங்கீத மாலை என்றே அழைக்கப்பட்டது.

இதன் காரணம், தாவீது அரசனின் சங்கீதங்கள் 150 இருப்பது போலவே ஜெபமாலையிலும் 150 அருள் நிறை மந்திரங்கள் இருக்கின்றன. எழுத்தறிவில்லா பாமர மக்கள் தாவீதின் சங்கீதங்களை சொல்ல முடியாததால் அவர்களுக்கு அதே பலனைத் தரக்கூடியது ஜெபமாலை என்றே சொல்லப்பட்டது. சங்கீதங்களை விட ஜெபமாலை அதிக பலனை விளைவிக்கும் என்று கீழ்வரும் மூன்று காரணங்களால் கூற முடியும்.

சம்மனசு சொன்ன மங்கள வார்த்தை ஜெபம் மனுவுருவான தேவ வார்த்தையாகிய சேசுவையே நமக்குத் தந்தது. தாவீதின் சங்கீதங்கள் சேசு இரட்சகரைப் பற்றிய முன்னறிவிப்பு செய்திதான்.

உண்மைப் பொருள் ஒன்று அதன் முன்னடையாளத்தை விட சிறந்திருப்பது போலும், ஒரு பொருள் அதன் நிழலை விட மேம்பட்டதாயிருப்பது போலவும் தேவ அன்னையின் ஜெபமாலை தாவீதின் சங்கீதங்களை விட மேலானது. சங்கீதங்கள் இதன் முன்னடையாளமே.

ஜெபமாலையில் வரும் ஜெபங்கள் (பரலோக மந்திரமும், அருள் நிறை மந்திரமும்) மனிதனால் அல்ல. பரிசுத்த தமத்திருத்துவத்தால் இயற்றப்பட்டவை.

நமது அன்னையின் ஜெபமாலை 5 பத்து மணிகளை கொண்ட மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் :

மகா பரிசுத்த திரித்துவத்தின் மூன்று ஆட்களையும் மகிமைப்படுத்துவதற்காக.

சேசுவின் வாழ்வு, மரணம், மகிமை இம்மூன்றையும் சிறப்பிப்பதற்காக.

மகிமை அடைந்துள்ள பரலோக திருச்சபையை மாதிரியாகக் கொள்ளவும், போராடும் பூலோக திருச்சபைக்கு உதவியளிக்கவும், பரிகரிக்கும் உத்தரிக்கிற திருச்சபையின் வேதனையைக் குறைக்கவும்.

தாவீதின் சங்கீதங்கள் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்துதல், இறைவனின் ஒளி பெறுதல், இறைவனுடன் ஐக்கியமாதல் என்ற மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல் ஜெபமாலையிலும் இந்த ஒப்புமையை காட்டுவதற்காக

இறுதியாய், நம் வாழ்நாளில் ஏராளமான வரங்களை நமக்குத் பொழிந்து, மரண நேரத்தில் சமாதானம் தந்து நித்தியத்தில் மகிமையளிக்கும் படியாக..

நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்

“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “ ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை… 

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !