திவ்ய நற்கருணைப் பேழையே ! மரியாயே நீர் வாழ்க ! – முதல் சனி சிந்தனைகள்..

" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே "

" மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர் “

“ இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் “

லூக்காஸ் 1 : 28, 30, 31

மாதா ஆண்டவர் இயேசுவை வயிற்றில் சுமந்தது பத்து மாதங்கள்.. 

கரங்களில் சுமந்தது குறைந்தது இரண்டு வருடங்களாவது இருக்கும்..

பாலகன் இயேசுவோடு வாழ்ந்த காலங்கள் ஒரு 5 அல்லது 6 ஆண்டுகள்..

அதன் பின் சிறுவன் இயேசுவோடு வாழ்ந்த காலங்கள் 12 அல்லது 13 ஆண்டுகள்..

அதன் பின் இளைஞன் இயேசுவோடு வீட்டில் வாழ்ந்த காலங்கள் 30 ஆண்டுகள்..

ஆண்டவர் நற்செய்திப்பணி செய்யும் போதும் அவருக்கு உதவி அவரோடு வாழ்ந்த காலங்கள் மூன்று..

கடைசியில் மீண்டும் நற்கருணைப் பேழையாக கல்வாரி நாயகனை சிலுவையிலிருந்து இறக்கியதும் வியாகுலத்தோடு சீராட்டியதோடு..

சேர்த்தால் அன்னை ஆண்டவர் இயேசுவோடு வாழ்ந்த காலங்கள் 33 ஆண்டுகள்..

அதன் பின் ஆண்டவர் உயிர்ப்பு முதல் திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவியது மற்றும் உலகவிதமான மாதாவின் மரணம் வரை ஆண்டவரை தன் ஆன்மாவின் தாங்கி ஒரு நொடிகூட அவரைவிட்டு விலகாத ஆண்டுகளோடு சேர்த்தால் மொத்தம் 66 ஆண்டுகள்..

அதன் பின்பும்  மாதாவின் காட்சிகள் பலவற்றிலும் பாலன் இயேசுவை கையில் சுமந்தவாறே மாதா காட்சிதருகிறார்கள்..

மாதா ஆண்டவர் இயேசுவை தன் திருவயிற்றில் கருத்தாங்கியது முதல் இன்று வரை மாதா ஒரு திவ்ய நற்கருணைப் பேழையாகவே வாழ்கிறார்கள்..

இது மாதாவுக்கு கிடைத்த எவ்வளவு பெரிய பாக்கியம்… எவ்வளவு பெரிய பொக்கிஷம்.. கடவுள் மாதாவுக்கு கொடுத்த எவ்வளவு பெரிய பாக்கியம்..

“ ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே “ லூக்காஸ் 1 : 49.

மாதாவை இயேசுவைத் தவிர்த்து நம்மால் பார்க்கவே முடியாதே..

இது திவ்ய பிதா மாதாவுக்கு அளித்த எவ்வளவு பெரிய கொடை..

அவ்வளவு பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களை பாவிகள் நமக்காகவும் தாயாகப் பெற்றது நாம் செய்த.. நம் முன்னோர்கள் செய்த பூர்வ ஜென்ம தவமே ஆகும்..

இப்போது மாதா நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்…

உங்களாலும் என்னைப்போல் திவ்ய நற்கருணைப் பேழையாக மாற முடியும்..  எப்போது?

ஓவ்வொரு திருப்பலியிலும் சாதாரண கோதுமை அப்பம் என் மகனாக மாறி உங்கள் நாவில் வந்து உங்கள் வயிற்றுக்குள் வரும்போது..

நான் அவனை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்த போது பெற்ற அனுபவத்தை நீங்கள் ஒரு பத்து நிமிடங்களாவது பெற முடியும்..

அதன் பின் அவரை ஆன்மாவில் தாங்கி உங்கள் ஆயுட்காலம் முழுவதும் என்னைப் போல் திவ்ய நற்கருணைப் பேழையாக உங்களால் வாழ முடியும்…

நீங்கள் அப்படி செய்தீர்கள் என்றால்.. அவனில்/ அவரில் என்னுடைய அனுபவத்தை கண்டிப்பாக உங்களால் பெற்று அனுபவிக்க முடியும்..

செய்வீர்களா?

ஜெபம் : எப்போதும் திவ்ய நற்கருணைப் பேழையாக வாழும் மாமரியே ! மா தவமே ! எங்கள் இராக்கினியே ! தஞ்சமே ! எங்கள் மதுரமே ! மகா பாக்கியமே ! கடவுளின் தாயே ! எங்கள் தாயே ! அம்மா!

அந்த பாக்கியத்தை.. அந்த இனிமையை.. அந்த முடிவில்லா மகிழ்ச்சியை.. வசந்தத்தை நாங்களும் பெற .. நாங்களும் அனுபவிக்க.. எங்கள் விசுவாசத்தையும்.. வீரத்தையும்.. அதிகமாக்கி தகுதியான உள்ளத்தோடும் முழுமையான மரியாதையோடும்.. முழங்காலில் நின்று நாவில் பெற்று அனுபவிக்க எங்களுக்காக மன்றாடும்.. அந்த வரத்தை கண்டிப்பாக பெற்றுத் தாரும் – ஆமென் ..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !