ஜெபமாலை யார் சொல்லிக்கொடுத்த ஜெபம் ? ஜெபமாலை பைபிளில் இருக்கிறதா?

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே! என்ற ஆண்டவர் இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தை நம் வாழ்க்கையாக்குவோம் 

 “ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே ! “

சகலத்தையும் படைத்த சர்வேசுவரனை நம் தந்தாய் அழைப்பது எத்தனை சுகமாய் இருக்கிறது.. வானத்தையும், பூமியையும் படைத்த மூவூலக அரசரை நம் அப்பா என்று அழைப்பது எவ்வளவு ஆனந்தம். நம்மைப் படைத்து நம்மைக் காப்பாற்றி வரும் இறைவனை நம் பிதாவே என்று அழைப்பது எத்துனை பேரின்பம். செங்கடலை பிளந்து, மன்னாவை பொழிய செய்து, பாரவோன் மன்னனிடமிருந்து காப்பாற்றி இஸ்ராயேல் மக்களை வழி நடத்திய சர்வ வல்லமை படைத்த கடவுளை நம் அப்பா என்று அழைக்க அவர் கொடுத்த உரிமையோடு நாம் சொல்லும்போது நமக்கு எத்துனை பாதுகாப்பு இருக்கிறது...

“ உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக ! “

கடவுளுடைய திருநாமம் எப்பேர்பட்ட திருநாமம்... எப்பேர்ட்ட மகிமைக்குரிய திருநாமம் அந்த திருநாமத்தை நம்முடைய நாவிலிருந்து வரும் சொல்லால் அர்ச்சிக்கப்பட வேண்டுவது எப்பேர்பட்ட பாக்கியம். அவர் திருநாமம்தானே ! நம்மை பல வித ஆபத்துக்கள் இடையூறுகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது. “ இயேசுவின் இரத்தம் ஜெயம் “ “இயேசு “ என்று நாம் ஆபத்தில் இருக்கும் போதும் சாதாரனமாக இருக்கும் போது அடிக்கடி உச்சரிக்கும் போது அதன் இனிமையை தெய்வீக மதுரத்தை நம்மை சுவைக்காமல் இருக்க முடிகிறதா என்ன?

“ உம்முடைய இராஜ்ஜியம் வருக ! “

கடவுளுடைய இராஜ்ஜியத்தை அன்போடு எதிர்பார்த்து அதை வருக என்றல்லவா அழைக்கிறோம்.. ஏன் மனித இராஜ்ஜியத்தைத்தான் பார்க்கிறோமே.. அது ஏமாற்றம் நிறைந்த இராஜ்ஜியம், மக்களுக்கு நன்மை செய்யாத இராஜ்ஜியம், அது ஒரு சுய நலமான இராஜ்ஜியம், மக்களை கொடுமைப்படுத்தும், வதைக்கும் இராஜ்ஜியம், குழப்பம் நிறைந்த இராஜ்ஜியம், முக்கியமாக நன்மைகள் செய்யாத இராஜ்ஜியம்..( நம் அருகில் இருக்கும் இராஜ்ஜியத்திலிருந்து உலகம் முழுவதும் உள்ள மனித இராஜ்ஜியங்களை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்) ஆனால் கடவுளின் இராஜ்ஜியம் அப்படி பட்டதா? தனக்கென எதுவுமே வைக்காமல் அத்தனையையும், ஏன் தன்னையே தாரை வார்க்கும் இராஜ்ஜியம்; நன்மைகளால் மட்டுமே நிறைந்த இராஜ்ஜியம்.. தீமை செய்யத்தெறியாத இராஜ்ஜியம்.. அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த இராஜ்ஜியம்; உறுதியான யாரும் உடைக்க முடியாத வலிமை வாய்ந்த இராஜ்ஜியம். அந்த இராஜ்ஜியம் வர ஜெபித்தல் எவ்வளவு இன்றியமையாதது.. பேய்களின் இராஜ்ஜியத்தை கலைத்து விட்டு ஆண்டவர் இயேசுவின் இராஜ்ஜியத்தைக் கேட்பது எவ்வளவு நல்ல விசயம்.. ஆண்டவருடைய இராஜ்ஜியம் உலகத்தில் மட்டுமல்ல நம் ஆன்மாவிலும் வர வேண்டும்.

“ உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக !”

இங்குதான் நம் அனைவருக்குமே இடிக்கும்...  என் விருப்பம் அதுதான் நடக்க வேண்டும்.. நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் எனக்கு நடக்க வேண்டும்.. என்று நம் விருப்பு வெறுப்புகளில் நீந்துவதால்தான் நிம்மதி; சந்தோசம் மருந்துக்கும் கிடைக்க மறுக்கிறது. அதை ஆண்டவர் அறிந்திருப்பதால்தான், “ சகோதரனே ! சகோதரியே ! உன்னுடைய விருப்பத்தைத் தேடாதே..அது உருப்படாதது.. என்னுடைய விருப்பத்தை தேடு அது உன்னுடைய விருப்பத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறந்தது உயர்ந்தது “ என்று சொல்லிக்கொடுத்துள்ளார். சர்வேசுவரனுடைய விருப்பம் நம் விருப்பமாக அமைய அவரை நாம் வேண்டுவது எவ்வளவு பேரின்பம்.. நமக்கு நன்மை தரும் மன்றாட்டு..

“ எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்...”

“ அய்யா கடவுளே ! எங்களுக்கு சாப்பாடு போடுமய்யா.. எங்களுக்கு மட்டுமல்ல. இந்த நேரத்தில் யார் யார் பசி பட்டினியால் வாடுகிறார்களோ.. அவர்களுக்கும் இன்று சாப்பாடு போடும் சாமி ! “ எத்தனை உயர்ந்த மன்றாட்டு..அடுத்தவருக்காகவும் ஜெபிக்கும் மன்றாட்டு.. 

இது வயிற்று உணவை மட்டுமல்ல.. ஆன்மீக உணவையும் கொடுக்கும்.. இன்று என் ஆன்மா பாவத்தில் விழாதிருக்க எனக்கு தேவையான உணவும், சிலுவையும் தாரும் என்று கேட்கும் ஜெபம். உணவாக திவ்ய நற்கருணை நாதரையும், அன்றாட திவ்ய திருப்பலியில் பங்கு கொள்ள முடியாதவர்கள் “ ஆசை நன்மையும் “ கேட்கும் ஜெபம். இந்த வரிகளை உச்சரிக்கும்போது இது எப்பேர்பட்ட வரப்பிரசாதமாக நமக்கு இருக்கும்.

“ எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும் “

“ஆண்டவரே எங்களை மன்னியும்” என்று கேட்கிறோம். அதுவும் எப்படி நாங்கள் எங்களுக்கு யார் யாரெல்லாம் ‘கெடுதல், கேடு, தீமை’ செய்தவர்களோ அவர்களை நாங்கள் மன்னிப்பது போல் எங்களை மன்னியும் “ நாம் நமக்கு கெடுதல் செய்தவர்களை மன்னிக்கிறோமா? நாம் மன்னிக்கவில்லை என்றால் நம் பாவங்கள் என்னவாகும். அது மன்னிக்கப்படுமா? மன்னிக்கப்படாது. “ மன்னிப்பு “ என்ற வார்த்தையின் மகத்துவத்தைப்பற்றி நம் ஆண்டவர் நமக்கு கிளாஸ் (வகுப்பு) எடுக்கிறார். ஆண்டவரின் உவமையை நாம் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்..

“ பத்தாயிரம் தாலந்துகள் கடன் பட்ட பெரிய பாவிகளாகிய நம்மை அரசன் என்ற நம் கடவுள் மன்னிக்கிறார். ஆனால் நம்மிடம் நூறு வெள்ளிக்காசுகள் கடன் பட்ட நம் சகோதரர்கள், நண்பர்களை நாம் மன்னிக்காது போனால் நமக்கு என்னவாகும் என்பதை அந்த உவமையிலேயே ஆண்டவர் சொல்லிவிட்டார்… ஆகையால் நாம் மன்னிக்கப்ட ஆண்டவரிடம் வேண்டுவது எவ்வளவு சாலச்சிறந்தது..

“ எங்களை சோதனையில் விழ விடாதேயும் “

எங்களுக்கு வாழ்க்கையில் சோதனைகள், கஷ்ட்டங்கள், இடையூறுகள், இன்னல்கள் என்று எத்தனையோ வரும். அதில் நாங்கள் விழுந்து விடாமல் அவற்றிலிருந்து எங்களைக் காப்பாற்றும்.. அதை எங்களுக்கு வர விடாமல் செய்தருளும், வந்தாலும் அவற்றைப் போக்கி அதிலிருந்து எங்களை காப்பாற்றும் சுவாமி “ என்று கேட்கிறோம். இதை விட பெரிய ஜெபம் என்ன இருக்கு?

“ எங்களை தீமைகளிலிருந்து இரட்சித்தருளும் “

“ உலகம், சரீரம், பசாசு “ இவற்றால் நாம் வதைக்கப்படும் போது நம்முடைய ஆன்மாவை நாம் இழந்து விடாமல் இருக்க. கடவுளிடம் .ஜெபிக்கிறோம். ஆன்மாவுக்கு எதிராக உலகம் தன் செல்வம், பொருள், பகட்டு, பதவி, புகழ் இவற்றால் நம்மிடம் ஆசை காட்டும் போதும், சரீரம் சொகுசு, நல்ல சாப்பாடு, மது, போதை என்று சரீரத்து இன்பம் தருவதை மட்டுமே நாடி நம்மை பாவத்தில் தள்ளாதிருக்கவும், நம் ஆன்மாவை களவாட ஆயிரம் கண்ணிகளை விரித்து, எந்த நேரத்தில் யாரை விழுங்கலாம் என்று புனித இராயப்பர் சொல்லியதைப்போல் அலையும் சாத்தானிடமிருந்து எங்களை காப்பாற்றும் வல்லமையுள்ள எங்கள் கடவுளே “ என்று கேட்கும் ஜெபம் எவ்வளவு பெரிது..வல்லமையுள்ளது..

“ஆமென்”

மேலே நான் கேட்ட மன்றாட்டுக்களையெல்லாம் “ அப்படியே தந்து விடுங்கள் “ எனக்கு அப்படியே ஆகட்டும் என்று கேட்கிறோம். தனது ஆழ்ந்த தாழ்ச்சியால் நம் தேவ மாதா “ ஆகட்டும்” என்று சொன்னது போல் “ ஆமென்.. எனக்கு அப்படியே ஆகட்டும் “ என்று கேட்கிறோம்.. இதை விட பெரிய ஜெபம் என்ன இருக்கிறது..

ஆகவே பரலோக மந்திரத்தை நம் வாழ்க்கையாக்கிவிட்டால் நம் வாழ்க்கை சுலபம்..

இந்த பரலோக மந்திரத்தை நம் வாழ்க்கையாக்கி நமக்கு மோட்சம் உறுதி… செய்வோம் – ஆமென்

பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர் அதாவது தூய தமத்திருத்துவமும், கடவுளின் தாயும், உலகத்தின் தாயும், நம் தாயுமான தேவமாதாவும் நம் மேல், நம் ஆன்மாவிம் மேல் உள்ள அக்கறையில் கற்றுக்கொடுத்த ஜெபங்கள் அடங்கிய ஜெபமாலையை நாள் தோறும் ஜெபிப்போம்...குடும்பமாக ஜெபிப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !