ஐம்புலன்களின் வேதனை

ஐம்புலன்களின் வேதனை விசேஷமாய் 

(1) அவியாத நெருப்பு மற்றும் கடுங்குளிர், 

(2) காரிருள், 

(3) அவநம்பிக்கை, 

(4) மனச்சாட்சியின் கடும் உறுத்தல், 

(5) பசாசுக்களுடன் இருத்தல், 

(6) சபிக்கப்பட்டவர்களின் தொடர்பு, 

(7) பசி, தாகம், 

(8) நித்தியத் துன்பம் ஆகியவற்றில் அடங்கியுள்ளது.

நரக நெருப்போடு ஒப்பிடும்போது நம் உலக நெருப்பு குளிர்ந்த காற்றுக்கு ஒப்பானது. மேலும் இவ்வுலக நெருப்பைப் போல அது எரித்து சாம்பலாக்குவதில்லை. அழித்து விடாமலே கொடூரமாக வாதிக்கிறது.

நெருப்பில் பழுக்கச் சிவந்த ஓர் இரும்புக் கம்பியை ஒரு சில கணங்கள் மட்டும் கரத்தால் இறுகப் பற்றிப் பிடிப்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று சற்று கண்களை மூடி தியானித்துப் பார்! என்ன உணர்கிறாய்? உச்சியிலிருந்து பாதம் வரை ஒரு கொடூர வேதனையின் அதிர்வு பாய்ந்து செல்கிறது. உள்ளங்கையின் தோலும், மாம்சமும் கருகுகின்றன. சதை பொசுங்கும் நெடி வீசுகிறது. கையை விட்ட பின்னும், பல நாட்களுக்கு இந்தத் தீப்புண் தரும் கொடிய வேதனை உறங்கவும் விடாமல் அலைக்கழிக்கிறது. ஒரு சில கணங்கள் இவ்வுலக நெருப்பின் வாதையைத் தாங்கும் எண்ணத்திற்கே உடல் நடுங்குகிற மனிதா, நித்தியத்திற்கும் தேவ கோபத்தால் மூட்டப்படும் நரக நெருப்பின் வாதையை எப்படி எதிர்கொள்வாய்?

அது கூட வேண்டாம். ஒரு மெழுகுவர்த்திச் சுடரின்மீது உன் சுட்டு விரலை ஒரு சில விநாடிகள் அசையாமல் வைத்திருக்க உன்னால் முடியுமா? அதோ, பூமியின் ஒரு எரிமலைத் திறப்பிலிருந்து வெடித்துப் பொங்கிப் பெருகி வருகிற எரிமலைக் குழம்பைப் பார்! அதில் ஒரு சில கணங்கள் “மிதந்து கொண்டிருக்க” நீ சம்மதிப்பாயா? இந்த நினைவு உன்னை நடுநடுங்கச் செய்கிற அதே வேளையில், கோடானுகோடி ஆண்டுகள், இதை விட மிகக் கொடூர மான நரக நெருப்பில் மூழ்கியிருப்பது பற்றி ஏன் நினையா திருக்கிறாய்? அப்படியே நினைத்தாலும், அந்த நினைப்பு உன்னை நடுங்கச் செய்வதில்லையே, ஏன்? சாவு இப்போ தெல்லாம் வராது என்ற அசட்டுத் துணிச்சல்தான் காரணம்!

“நரக நெருப்பின் அகோர வெப்பம் எவ்வளவு பெரிதா யிருக்கிறதென்றால், உலகம் முழுவதும் நெருப்பால் சூழப் பட்டாலும், அந்த நெருப்பின் வெப்பம், நரக நெருப்பிற்கு முன் ஒன்றுமற்றதாயிருக்கும்” என்று அர்ச். பிரிட்ஜித்தம்மாள் கூறுகிறாள். "பூமியிலேயே அனைத்திலும் அதிக அச்சம் தரும் நெருப்பு, நரக நெருப்பிற்கு முன்னால் நிஜ நெருப்புக்கு முன் வைக்கப்பட்டுள்ள நெருப்பின் படத்தைப் போல் இருக்கும்" என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

"தேவ நீதியின் கோபத்தினால் மூட்டப்பட்ட நரக நெருப்பு நரக பாதாளத்தின் அடி முதல் உச்சிமட்டும் தணலாய் எழும்பி, கொழுந்து விட்டெரிந்து, மேலே தாவி, புகை திரண்டு, சுடாமல் சுட்டு, தணியாமல் கொதித்து, சுட்ட பொருளும் சாம்பலாகாமல் வேக, பாவிகளின் உடலுக்குள் பாய்ந்து, எங்கும் குடைந்து அறிவுள்ள நெருப்புப் போல் அந்தந்த உடல் உறுப்புகள் செய்த பாவத்துக்குத் தக்கபடி, அவற்றைச் சுட்டு, உள்ளிருந்து வெளியே, கண், காது, வாய் வழியாய்ப் புறப்பட்டு, சரீரத்தை எப்பக்கத் திலும் துன்பப்படுத்தும்" என்று மன்ரேசா கூறுகிறது.

அர்ச். தமியான் இராயப்பர் உலகத் தன்மையான ஒருவனைப் பற்றிப் பேசுகிறார். அவன் கேளிக்கைகளிலும், உல்லாசங்களிலும் மட்டுமே தன் நேரத்தைப் போக்கி வந்தான். தன் ஆத்துமத்தைப் பற்றி சிந்திக்கும்படி அநேகர் அவனுக்கு அறிவுரை கூறியும் அவன் கேட்கவில்லை. பரிசுத்த சுவிசேஷத் தில் கூறப்படும் பணக்காரனைப் போல வாழ்ந்தால், அவனது முடிவுதான் தனக்கும் கிடைக்கும் என்ற எச்சரிப்பிற்கும் அவன் செவிசாய்க்கவில்லை. 

சாகும்வரை பாவத்திலேயே வாழ்ந்த அவன் இறந்த போது, கடவுளால் சபிக்கப்பட்டு நரகம் சென்றதை ஒரு வனவாசி கண்டார். ஓர் அக்கினித் தடாகத்தின் நடுவே அவர் அவனைக் கண்டார். அது கடலைப் போல பெரிதாயிருந்தது. அதில் மூழ்கடிக்கப்பட்டிருந்த எண்ணற்ற மனிதர்கள் கடுந்திகிலோடு அலறியபடி இருந்தனர். கரையை அடைய அவர்கள் முயன்றபோது, இரக்கமற்ற பறவை நாகங்களும், பசாசுக்களும் அவற்றைத் தடுத்து விரட்டின. அவை அவர்களைப் பிடித்து அந்த அக்கினிப் பெருங்கடலின் ஆழத்திற்குள் அவர்களைத் தூக்கி வீசின.

மிகக் கொடூரமான, பெரும் அச்சத்திற்குரிய நெருப்பினால் அவர்கள் வாதிக்கப்படுகிறார்கள். இந்த நெருப்பு உலக நெருப்பை விட பல கோடி மடங்கு அதிக வீரியமுள்ளது. உலக நெருப்பு மனிதன் பயன்படுத்தும்படியாகவும், அவனது நன்மைக்காகவும் சர்வேசுரனால் உண்டாக்கப்பட்டது. ஆனால் நரக நெருப்போ, கெட்டுப்போன சம்மனசுக்களைத் தண்டிப்பதற்கான கடவுளுடைய கருவியாக ஏற்படுத்தப்பட்டது. அதன் அகோரத்தை விவரிக்க மனித மொழிகளில் வார்த்தைகள் இல்லை.

“இந்தக் கடும் வேதனை அவர்களை வெறி கொள்ளச் செய்கிறது, அந்த வெறி நாம் கற்பனை செய்யவும் முடியாத பலத்தை அவர்களுக்குத் தருகிறது. நரகத்தின் கோபவெறியைத் தன்னுள் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பற்றி நாம் பரிசுத்த சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். அவன் எவ்வளவு பலமுள்ளவனாக இருந்தான் என்றால், பெரிய இரும்புச் சங்கிலிகளையும் கூட துண்டு துண்டாக உடைத்து விடக் கூடியவனாக அவன் இருந்தான்'' (மாற்கு 5:4) என்று அர்ச். உரோமை பிரான்செஸ் கூறுகிறாள்.

இதே புனிதை நரகத்தில் அசைவற்ற நரக நெருப்பை யல்ல, மாறாக, நெருப்பும் கந்தகமும் கலந்து ஆறாகப் பாய்ந்து கொண்டிருந்ததும், தான் செல்லுமிடமெல்லாம் ஆத்துமங் களை வீசியெறிந்து கொண்டிருந்ததுமான ஒரு பெரும் நெருப்பாற்றைக் கண்டாள்.

தமது நரகக் கனவில் அர்ச். தொன் போஸ்கோ கண்ட காட்சி: “எனக்கு முன், ஒரு மிக விஸ்தாரமான குகை போன்ற ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது. அது படிப்படியாக பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு, தொலை தூர மலைகளின் குடல் களுக்குள் மறைந்து போனது. அவை எல்லாமே நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருந்தன. 

ஆனால் அவற்றினுடையது குதித்து விளையாடும் தீநாக்குகளைக் கொண்டுள்ள உலக நெருப்பே அல்ல. அந்தக் குகை முழுவதும் - சுவர்கள், கூரை, தரை, இரும்பு, கற்கள், மரம், நிலக்கரி எல்லாமே - ஆயிரக் கணக்கான டிகிரி சென்ட்டிகிரேட் வெப்பத்தில் வெண்மை யாகத் தகதகத்துக் கொண்டிருந்தன. இருந்தும் அந்த நெருப்பு எதையும் சாம்பலாக்கவில்லை, எதையும் சுட்டெரித்து அழித்து விடவில்லை . அந்தக் குகையில் நிலவிய பயங்கர உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.”

“சமுத்திரத்தில் திரியும் மீன், உயர தண்ணீர்மேல் மிதந்தாலும், அடியில் தரைமட்டும் போனாலும், இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ, எந்தப் பக்கம் சென்றாலும், தண்ணீரால் சூழப்பட்டு, தண்ணீரில்தான் இருக்கும். ஆகாயத்தில் பறக்கும் பட்சி, எந்தத் திசையிலே பறந்தாலும், அதைத் தாங்கும் ஆகாயம், அது போகுமிடமெல்லாம் அதைச் சூழ்ந்து பரவி நிறைந்திருக்கும். அது போலவே பாவியும் நரகத்தில் எந்தப் பக்கம் போனாலும், என்ன செய்தாலும், அக்கினி மத்தியில் மூழ்கியிருப்பான்... 

பாவி தன் பசியை ஆற்ற உண்பதும் தீ; தன் தாகம் தீர்க்க குடிப்பதும் தீ; பாவி தன் உடையாய் உடுப்பதும் தீ; அவன் படுக்கும் பாயாய் இருப்பதும் தீ; அவன் உள்ளிழுக்கும் சுவாசமும் தீ, அவனுள்ளிருந்து வெளி வரும் ஆவியும் தீ. இந்தக் கொடிய அக்கினிக்குள் இருக்க யார் சம்மதிப்பார்?” என்கிறது மன்ரேசா.