சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 54

ஜெப வாழ்வு

திவ்விய பலிபூசை கிறீஸ்தவ வழிபாட்டின் மிகச் சிறந்த செயல். கடவுளின் அளவற்ற மகிமைக்குத் தக்க தோத்திரம் புரிவதற்கு உகந்த உன்னத ஜெபம் திவ்விய பலிபூசை கிறீஸ்தவர்களின் வழிபாடு மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கையும் கூட அதைத்தான் நடுநாயகமாகக் கொண்டு விளங்க வேண்டும்

மனிதன் அறிவும், அன்பும் கொண்ட சிறந்த படைப்பு ஆதலால் மற்ற உயிரினங்கள் நிறைவேற்றாத கடமைகளை அவன் செய்கிறான். தன் பெற்றோருக்கு பணிவான சங்கை செய்கிறான். தான் செய்த குற்றத்துக்குப் பெரியோரிடமிருந்து மன்னிப்புக் கோருகிறான். உபகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறான். உதவி தரக்கூடியவர்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறான். 

இப்படி அவன் தன்னைப் படைத்த சர்வேசுரனைத் துதித்துப் போற்றவும், அவருடைய சித்தத்துக்கு மாறாகக் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அவருடைய மன்னிப்பைக் கோரவும் கடமைப்பட்டிருக்கிறான். மனித வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் அனைத்தும் கடவுள் உண்டாக்கிக் கொடுத்ததோடு, சகல நன்மைகளையும் அளிக்கும் ஆற்றலும் அன்பும் கொண்டவராதலால், நாம் அவருக்கு நன்றி செலுத்தவும், நமக்குத் தேவைப்படும் உதவி உபகாரங்களைப் பெறுவதற்கு அவரிடம் மன்றாடவும் வேண்டும்

ஆனால் பெற்றோர் பெரியோரை ஒருவன் ஏமாற்றி விடலாம், உள்ளத்தில் ஏற்காமலே புறத்தில் நடக்கும் சர்வேசுரனோ யாவையும் அறிபவர். அகமும், புறமும் வேறு படாத உண்மையுடன் நாம் அவரை அணுக வேண்டும் இப்படி மனதையும், இருதயத்தையும் கடவுள் பால் உயர்த்தி அவரோடு உரையாடுவதே ஜெபம் எனப்படும். 

நம்முடைய எண்ணங்கள், விருப்பங்கள் தேவைகளையெல்லாம் நாம் வெளியிடாமலே அவர் அறிகின்றார். எனினும், நம் கர்த்தரும், கதியும், பேருபகாரியும், தந்தையுமாகிய அவரிடம் நம்முடைய சங்கையையும் சங்கடங்களையும் எடுத்துரைப்பது நமது இயல்புக்கு ஒத்த கடமை; அவருக்குப் பிரியமானது

 கடமை மட்டுமல்ல, சிறப்பாக ஞான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதும்கூட. இவ்வுலக மறுவுலக நன்மைகளைப் பெற ஏற்ற வழி ஜெபமே. தேவ வரப்பிரசாதத்தின்

துணையின்றி நன்னெறியைக் கடைப்பிடிப்பது இயலாத காரியம். தெய்வ பக்தியும், நல்லொழுக்கமும் மானிட வாழ்க்கையைச் சிறப்புறச் செய்கின்றன. அவை இல்லாதவன் அறிவாளி, கலைஞன், கெட்டிக்காரன், புத்திசாலி, திறமை வாய்ந்தவன் என்றெல்லாம் புகழப்பட்டாலும், நல்லவன் என்ற நற்பெயர் பெற மாட்டான்.

 ஆனால் சோதனைகளும் நெருக்கடிகளும் சூழ்ந்த இவ்வுலக வாழ்வில் உண்மையைப் பின்பற்றுவது, அன்பைக் கடைப்பிடிப்பது, கடவுளைப் போற்றிப் புகழ்வது போன்ற நன்னெறி செயல்கள் எளிதான வையல்ல. கடவுளின் வரப்பிரசாத உதவியால்தான் முடியும் அவ்வுதவியோ ஜெபத்தால் பெறப்படுகிறது. ஆதலால்தான் சோர்ந்து போகாமல் எப்போதும் செபம் செய்யவேண்டும் என்று கிறீஸ்துநாதர் போதித்தார் (லூக்கா. 18:1)

தொடரும்...