சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 46

1913 ம் வருடம் ஏப்ரல் மாதம் சிலி நாட்டு மேற்றிராணிமார்கள் ஒன்றுசேர்ந்து எழுதிய நிருபம் இப்பக்தி முயற்சியைப் பகிரங்கமாய் அங்கீகரித்தது. அதற்கடுத்த மாதம் சந்தியாகோ அதிமேற்றிராணியார் தம்முடைய குருக்கள் இப்பக்தி முயற்சியை பயன்படுத்த ஏற்பாடு செய்தார். அதிவிரைவில் ரியோ டி ஜெனீரோவின் கர்தினால், பிரேசில் நாட்டில் ஒன்பது பேர் அர்ஜெண்டினா நாட்டில் மூன்று பேர், பெரு நாட்டில் மூன்று பேர், ஆகப் பதினைந்து மேற்றிராணிமார்களும், நியூயார்க் அதிமேற்றிராணியார், ஜெருசலேம் நகர் பிதாப்பிதா ஆகிய இத்தனை திருச்சபை அதிகாரிகள் தங்கள் எல்லைகளில் அந்த பக்தியைப் பரப்பலானார்கள்

1914 ம் வருடம் ஏப்ரல் மாதம் 26-ம் தேதியன்று, இப் பக்தி முயற்சியின் காரணத்தையும், நோக்கத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டிக் கர்தினால் பில்போ என்பவர் நிருபமொன்று விடுத்தார். இந்நிருபம் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, பெல்ஜியம், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரேசில், பெரு, சிலி, ஈக்வடார், உருகுவே, கொலம்பியா பொலிவியா, அர்ஜெண்டினா, ஓசியானியா, ஆசியா ஆகிய உலகத்தின் நாலாதிசைகளிலும் உள்ள நாடுகளின் கிரீடமணிந்த ஞான அதிகாரிகளால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது இவ்வதிகாரிகளுள் கர்தினால்மார் எத்தனை பேர்! அதிமேற்றி ராணிமார்கள் எத்தனை பேர்! மேற்றிராணிமார் எத்தனை பேர்

இதற்கு மேல் 1915-ம் வருடம் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி பரிசுத்த பிதா 15-ம் ஆசீர்வாதப்பர் தாமே இவ்வுந்நத அப்போஸ்தலக் கிரிகையை மனப்பூர்வமாய் ஆசீர்வதிப்பது, இதை ஆரம்பித்தவரான சங். மத்தேயோ க்ராலி மோயேவே சுவாமியவர்களுக்குக் கடிதம் மூலமாய்த் தெரிவிக்கலானார்

குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் சடங்கில் விசேஷம் ஒன்றுமில்லாமல் இருந்தாலும் அச்சடங்கு மனதில் ஆழமாய்ப் பதியக்கூடாது. முன்னதாகவே தீர்மானித்துக் கொண்டு காலத்தில் எவ்விடத்தில் நேச திரு இருதயம் சிம்மாசனம் வகிக்கப் போகிறதோ, அவ்விடத்தில் குடும்பத்தார் ஒன்று கூடுவர் குருவானவர் திரு இருதயப் படத்தையோ, சுரூபத்தையோ மந்திரிப்பார். அதன்பின்னர் குடும்பத்தாருடைய விசுவாசப் புண்ணியத்தின் வெளியரங்க அத்தாட்சியாகும் விசுவாசம் சத்தியங்கள் அடங்கிய விசுவாச மந்திரத்தை அனைவரும் பக்தியுடன் உரத்த சத்தமாக உச்சரிப்பார்கள்.

குருவானவர் அக்குடும்பத்திற்காக ஒரு விசேஷ ஜெபம் சொல்வார். குடும்பத்தார் கூடியிருந்து சிறப்பிக்கும் போது அவர்களைவிட்டுப் பிரிந்து போன மரித்த உற்றார் பெற்றோருக்காகவும், பிரிந்து உள்ள உறவினர் களுக்காகவும் 1 பர, 1 அருள், 1 திரி. சொல்லி வேண்டிக் கொள்வது நலம். இதன்பிறகு தகப்பனாராவது தாயாராவது சேசுவின் திரு இருதயச் சுரூபத்தை அல்லது படத்தைக் குருவானவரிடம் இருந்து பெற்று, சிங்காரித்து வைத்திருக்கும் பீடத்தில் ஸ்தாபிக்கவே, எல்லோரும் முழந்தாட் படியிட்டுப் பின்வரும் ஜெபத்தைப் பக்தி விநயத்துடன் சொல்லித் தங்கள் குடும்பத்தைக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்பார்கள்.

தொடரும்...