சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 43

சேசுவின் திருஇருதய படத்தை சித்தரிப்போர் சேசுவின் திரு இருதயத்தை இருவித சாயல்களில் வரைகிறார்கள். ஒன்றில், அக்கினிச் சுவாலையினூடே திரு இருதயத்தை வரைந்து, முள்முடி ஒன்றால் அதை வளைந்து ஒரு சிலுவையில் முகடேற்றிச் சிறப்பிக்கிறார்கள் மற்றொன்றில், சேசுநாதர் தமது நெஞ்சைத் திறந்து, இருதயத்தைக் காண்பிக்கிற விதமாகச் சித்தரிக்கிறார்கள். 

இவ்விரு சாயல்களையும் திருச்சபை அங்கீகரித்த போதிலும், இரண்டாவது சித்திரத்தையே அதிகமாக மதிக்கிறது. ஏனெனில் இதுவே திரு இருதயம் சேசுவின் அளவற்ற சிநேகத்தின் அறிகுறியென நுணுக்கமாகக் காட்டுகிறது. நாம் நாளடைவில் பார்த்து வரும் திரு இருதயச் சுரூபங்களின் அல்லது படங்களின் வழியாய்ச் சேசுநாதர் தமது ஜீவியத்தையும், அன்பின் அறிகுறிகளையும் நமக்கு விளக்கிக் காட்டுகிறதாகத் தோன்றுகிறது. 

திரு இருதய சுரூபத்தை அல்லது படத்தை நமது கண்களால் ஒரு தடவை உற்று நோக்குவது சேசுவின் சிநேகத்தைப்பற்றி நாம் வாசிக்கக் கூடிய புத்தகங்களைப் பார்க்கிலும் ஆழமானது. சேசுவின் திரு இருதயத்தின் சாயல் அஞ்ஞானிகள் தலை குனிந்து வணங்கும் உணர்ச்சியற்றதும், விருப்பமற்றதுமான விக்கிரகங்களுக்கு ஒத்ததல்ல. கணக்கற்ற அஞ்ஞானிகள் அவ்வுயிரற்ற சிலைகளை வணங்கித் தோத்தரிக்கிறார்கள். 

ஆனால் அச்சிலைகளிடமிருந்து ஒரு அன்புள்ள வார்த்தையையாவது, சிநேக அறிகுறியையாவது பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை அளவற்ற விதமாய்ச் சிநேகித்து அவர்களுக்காக மாத்திரமே அடித்துக் கொண்டிருக்கும் ஒரு இருதயத்தினை அறியார்கள்

சேசுவின் திரு இருதயச் சுரூபங்களும் படங்களும் மிக ஏராளமான வரப்பிரசாதங்களையும், ஆசீர்வாதங்களையும் கொண்டுவருவதால், சகல கத்தோலிக்கக் குடும்பங்களும் ஒரு திரு இருதயச் சுரூபத்தையாவது படத்தையாவது, பகிரங்கமாக தங்கள் வீடுகளில் ஸ்தாபிப்பது சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதே. 

தினந்தோறும் இச்சுரூபத்தின் அல்லது படத்தின் முன்னால் தாய் தகப்பனும், பிள்ளைகள் சகலரும் முழந்தாட் படியிட்டு பக்தி உருக்கத்தோடு ஜெபித்தும், தங்களை முழுவதும் அத்திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்தும் வருவார்கள் என்றால், நாளடைவில் தங்கள் குடும்பத்தில் உண்டாகும் மாற்றங்களைக் கண்கூடாய்க் கண்டறிவார்கள். சீக்கிரத்தில் தாங்கள் வேதக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிறதையும், நாசரேத்தூரின் திருக்குடும்பத்தில் விளங்கிய புண்ணியங்களைக் கைப்பற்றுவதையும், சேசுவின் திரு இருதய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதையும் அவர்கள் பார்த்து மகிழ்வார்கள்

தொடரும்...