ஆண்டவர் இயேசுவின் தலைமுறை இப்படி ஆரம்பிக்கிறது..
தொடக்கமும் முடிவுமில்லா சுதனாகிய சர்வேசுவரன் மானிட மகனான இயேசுவின் தலைமுறை இப்படி ஆரம்பிக்கின்றது..
வானம், பூமி, கண்டங்கள், அண்டங்கள் கொள்ள முடியாதவர் நமக்காக.. நம்மை மீட்க மனுவுருவாக தலைமுறைக்குள் அடங்கிய ஆண்டவர் இயேசுவின் தலைமுறை அட்டவனை இப்படி ஆரம்பிக்கின்றது..
“தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது:”
மத்தேயு 1 : 1
ஆண்டவர் இயேசுவின் தலைமுறை ஆணில் ஆரம்பித்து பெண்ணில் முடிகிறது..
இப்படி ஆரம்பிக்கிறது..
“ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார். யாக்கோபுக்கு யூதாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள்.”
மத்தேயு 1 : 2
இப்படியே போய்க்கொண்டிருக்கிறது..
எப்படி முடிகிறது..
“யாக்கோபுக்கு மரியாளின் கணவரான சூசை பிறந்தார்”.
மத்தேயு 1 : 16
ஆண்களின் தலைமுறை முடிவிற்கு வந்துவிட்டது.
“ இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்”
மத்தேயு 1 : 16
மரியாயிடம் உலக மீட்பர் இயேசு கிறிஸ்து பிறந்தார்..
மரியாயிடம் மட்டும் பிறந்தார்.. பெண்ணிடம் பிறந்தார்..
“ஆனால், காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக்கொள்வதற்காக,
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார்”.
கலாத்தியர் 4 : 4-5
“பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்”.
ஆதியாகமம் 2 : 22
முதல் அமல உற்பவத்தில் படைக்கப்பட்ட இரண்டாவது ஆளுக்கு கடவுள் வைத்த பெயர் ‘ பெண் ‘
அந்த பெண்ணிற்கு ஆதாம் வைத்த முதல் பெயர். ‘ மனுஷி ‘
“ஆதாம்: இவள் என் எலும்புகளின் எலும்பும் மாமிசத்தின் மாமிசமுமாய் இருக்கிறாள்; இவள் மனிதனிடத்தினின்று எடுக்கப்பட்டவளாதலால் மனுசி எனப்படுவாள் என்றான் “.
ஆதியாகமம் 2 : 23
முதல் பாவம் நுழையும் முன் ஆண் பாலை ‘ ஆண் ‘ என்றும், பெண் பாலை ‘ பெண்’ என்றுமே அழைத்தார் கடவுள்..
ஆக முதல் பெண் அமல உற்பவியே..
பாவம் வந்த பின்.. அதாவது பாவம் செய்த பின் அவளுக்கு ஆதாம் இரண்டாவதாக பெயர் வைக்கிறார்..
“பின் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்;”
ஆதியாகமம் 3 : 20
ஏவாள் தன் ‘ பெண் ‘ என்ற தகுதியை, பட்டத்தை இழந்ததால் அவளுக்கு வேறு ஒரு பெயர் வைக்கப்படுகிறது..
அப்படியானால் அந்த பெண் என்ற தகுதியை/பட்டத்தைப் பெற இன்னொரு அமல உற்பவமாக உதிக்க எதிர் காலத்தில் ஒரு பெண் வரப் போகிறாள் என்பதை இச்சம்பவம் முன்னறிவிக்கின்றது..
அதுதான் மீட்பரை நமக்குப் பெற்றுத்தர கடவுளால் மீண்டும் அமல உற்பவியாக படைக்கப்பட்ட முழுமையான பெண்தான் ‘மாதா’..
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்..
இயேசு சுவாமி மாதாவைப் பார்த்து கல்வாரியிலும், கானாவூரிலும் “ பெண்ணே” என்று அழைத்துவிட்டாராம்..
வார்த்தையான சர்வேசுவரனான சுதன் தான் படைத்த பெண்ணை… எந்த சூழ்நிலையிலும் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் மாதாவிடம் பெண்ணிற்கு உண்டான அத்தனை தகுதியும் எப்போதும் மங்காமல் இருக்கும்போது கடவுள் என்ற முறையில் மாதாவை “ பெண்ணே ! “ என்றுதானே அழைப்பார்..
மாதா, கடவுளால் “ பெண்ணே “ என்று அழைக்கப்பட்டால் அது மேன்மைக்குரிய பெருமையே தவிர சிறுமையல்ல..
இயேசு சுவாமி மாதாவை மானிட மகன் என்ற முறையில் “ அம்மா” என்று அழைப்பதும், கடவுள் என்ற முறையில் “ பெண்ணே “ என்று அழைப்பதும் பொருத்தமானதும், சரியானதும், உண்மையானதுமே..
இந்த மாதா என்ற ‘பெண்’ முக்காலமும், எக்காலமும் போற்றுதற்குரியவரே..
இப்போது இன்னொரு மறையுண்மையைப் பார்க்கப் போகிறோம்..
முதல் பெண் ஏவாளாகி உயிர் வாழ்வோர் எல்லோருக்கும் தாயாக இருக்கும்போது.. அந்த தகுதியை, பொறுப்பை ஆண்டவர் இயேசு அவளிடம் இருந்து எடுக்கிறார்.. அகற்றுகிறார்.. அந்த பொறுப்பை, தகுதியை தன்னுடைய தாயான மாமரிக்கு தான் சிலுவையில் இருக்கும்போது கொடுக்கிறார்..
கூடுதல் பொறுப்பு மாதாவிற்கு கொடுக்கப்படுகிறது.. “ அம்மா! அல்லது பெண்ணே ! இனி நீ எனக்கு மட்டும் தாயல்ல.. அதாவது கடவுளுக்கு மட்டும் தாயல்ல.. இனி உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாய் நீ ! நீ ! நீ மட்டும்தான்” என்கிறார் நம் ஆண்டவர்..
இதில் முக்கியமான மறை உண்மை எதுவென்றால் மாதா பெண் என்ற தகுதியை இழக்காமல், தாய் என்ற தகுதியையும் பெற்றதால் புதிய ஏவாளாகவும் இருக்கிறார்கள்..
பெண்ணும் மாதாவே ! புதிய ஏவாளும் மாதாவே ! அமல உற்பவியும் மாதாவே ! நித்திய கன்னியும் மாதாவே ! நித்தியத்திற்கும் கடவுளுக்கும் தாய் மாதாவே ! நித்தியத்திற்கும் உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாய் மாதாவே !
மாதாவின் அருமை, பெருமைகள், மான்புகள் அளவிட முடியாது.. அதிகமாக சொல்லிவிட்டோம் என்று யாரும் நினைத்துவிட முடியாது.. எனென்றால் அது கூட கடுகை விட சிறிதே..
நன்றி : வேதாகம மேற்கோள் விளக்கம், வாழும் ஜெபமாலை இயக்கம்..
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !