திவ்ய நற்கருணை நாதர் பகுதி-4

ஆ ! மிகவும் மதுரம் பொருந்திய ஆண்டவராகிய இயேசுவே! உமது பந்தியில் அழைக்கப்பட்டு உட்காருவது பக்தியுள்ள ஆத்துமத்துற்கு எவ்வளவோ பெரிதான இன்பமாயிருக்கிறது. அந்தப் பந்தியில் உம்மை மாத்திரமே அதற்கு புசிக்க கொடுக்கப்படுகிறது. “ அதன் இதயத்திற்கு சகலத்தையும் பார்க்க அதிக அன்புள்ளவரும் ஏக நேசருமாகிய நீரேயன்றி வேறென்ன? “

உமது சந்நதியில் அன்பில் மிகுதியால் கண்ணீர் விட்டு அக்கண்ணீர்களால் பக்தியுள்ள மதலேனாளைப்போல் உமது பாதங்களைக் கழுவுகிறது எனக்கும் இன்பமாகவல்லோ இருக்கும். ஆனால் அப்படிக்கொத்த பக்தியில் அந்தப் பரிசுத்த கண்ணீர்ப் பிரவாகமும் எங்கேயிருந்து வரும் ?

ஆம், உமது சந்நிதியிலும் சம்மனசுக்களுக்கு முன்னதாகவும் என் இருதயம் முழுவதும் பற்றியெறிந்து, சந்தோசக் கண்ணீர் சொரிய வேண்டியதுதான். ஏனெனில் தேவ நற்கருணையில் நீர் அப்ப தோற்றத்தில் மறைந்திருந்த போதிலும் அதில் நீர் உண்மையாகவே பிரசன்னமாயிருக்கிறீர். எனக்கு உண்மையாகவே சொந்தமாயிருக்கிறீர்.

ஏனெனில் உமக்குரிய தெய்வீக மகிமை பிரதாபத்தைப் பார்க்க என் கண்கள் தாளாது. உமது மகத்துவத்தின் மகிமைக்கு முன், உலகம் முழுவதும் ஒன்றுமில்லாமையாக் குன்றிப்போகும். ஆதலால் தேவ நற்கருணையில் நீர் உம்மை மறைத்துக் கொண்டிருப்பது என் பலவீனத்தை முன்னிட்டே.

பரலோகத்தில் சம்மனசுக்களால் ஆராதிக்கப்படுகிறவர் எனக்கு மெய்யாகவே சொந்தமாயிருக்கிறார் நான் அவரை ஆராதிக்கிறேன். ஆனால் நான் இன்னும் விசுவாசத்தினால் அவரை தரிசிக்கிறேன். அவர்களோ யாதொர் மறைவில்லாமல் முகமுமாய்த் தரிசிக்கிறார்கள்.

நன்றி : கிறிஸ்து நாதர் அனுசாரம், ஆசிரியர் தாமஸ் கெம்பீஸ்

சிந்தனை : தகுந்த தயாரிப்போடு திவ்ய திருப்பலியில் பங்கேற்று மிகுந்த வணக்கத்தோடும், மரியாதையோடும், பக்தியோடும் முழங்காலில் நின்று நாவில் அவரை வாங்குவோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

திவ்ய நற்கருணை உட்கொண்டபின் திரும்ப திரும்ப ஜெபிக்க வேண்டிய ஜெபம் :

“ என் தேவனே, நான் உம்மை விசுவசிக்கிறேன். நான் உம்மை ஆராதிக்கிறேன். நான் உம்மை நம்புகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன்..

உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதியாதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்க்காகவும், உம்மை நேசியாதவர்க்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்”. 

– பாத்திமா சிறுமிகளுக்கு தேவதூதர் (புனித மிக்கேல் அதிதூதர்) 1916- ஆண்டு கற்றுக்கொடுத்த ஜெபம்.

குறிப்பு : மேலே உள்ள பதிவு மற்றும் சில நாட்களாக வந்த பதிவுகள் அனைத்தும் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய “ அன்னை மாமரியாளுக்கு முழு அர்ப்பண தயாரிப்பு “ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்து நாதர் அனுசாரம், மரியாயின் மீது உண்மை பக்தி, மாதா பரிகார மலர், கடவுள்-மனிதனின் காவியம், பாத்திமா காட்சிகள், ஜெபமாலையின் இரகசியம் இன்னும் பல நல்ல கத்தோலிக்க நூல்களுக்கு தொடர்புக்கு : சகோ.பால்ராஜ் Ph: 9487609983,  சகோ.ஜேசுராஜ் Ph. 9894398144.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !