தேவமாதா யார்? பகுதி-29 : பழைய ஏவாளுக்கும் புதிய ஏவாளுக்கும் உள்ள வித்தியாசம்!

“ ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறு பெற்றவளே “

லூக்காஸ் 1 : 45

ஏவாள் ஓரே வார்த்தையில் பாம்பின் வாயை அடைத்திருக்கலாம்.. என்ன வார்த்தை அது?

பாம்பு என்ன சொல்லியது, “ நீங்கள் அந்த பழத்தின் கனியை சாப்பிட்டால் கடவுள் போல் ஆவீர்கள் “ என்றுதானே சொல்லியது..

அப்போது ஏவாள் என்ன சொல்லியிருக்க வேண்டும்..

“ அட முட்டாப் பாம்பே ! நாங்கள் ஏற்கனவே கடவுளைப் போலத்தானே படைக்கப்பட்டுள்ளோம்.. அவருடைய சாயலும், பாவனையும்தான் எங்களிடம் இருக்கிறதே நாங்கள் இன்னும் ஏன் அவரைப்போல ஆக வேண்டும்..?

எங்களிடம் நன்மையே வடிவான கடவுள் இருக்கிறார். அதனால் நாங்கள் நன்மையை மட்டுமே அறிந்துள்ளோம்.. தீமையை நாங்கள் ஏன் அறியவேண்டும்?

எங்களை சாகடிக்கவா பார்க்கிறாய்? எங்களை கடவுளிடமிருந்து பிரிக்கவா பார்க்கிறாய்.. போ அப்பாலே நாசமா போன சாத்தானே ?” என்று சொல்லியிருந்தால் தேவையில்லாத வம்பு வந்திருக்குமா?

தானும் கெட்டு, ஆதாமையும் கெடுத்து நம்மையும் அல்லவா கெடுத்துவிட்டாள் அந்த ஏவாள்..

ஏவாள் அறிவைப் பயன்படுத்தாமல் ஞானத்தைப் பயன்படுத்தியிருந்தால் தப்பியிருப்பாள்..

அந்த இடத்தில் புதிய ஏவாளான நம் தாய்மரி இருந்திருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்..

முதலில் கடவுளால் விலக்கப்பட்ட மரத்தின் பக்கமே சென்றிருக்க மாட்டார்கள். அந்த பழத்தை சாப்பிட ஆசைப்பட்டிருக்க மாட்டார்கள். பாம்பு பேசினாலும் மாதா என்ன சொல்லியிருப்பார்கள்..

“ என் அப்பா ! பிதா பொய்பேச மாட்டார். அவர் சொன்னதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் அதனால் நான் சாப்பிட மாட்டேன்.. போ அப்பாலே சாத்தானே என்று விரட்டியிருப்பார்கள் “

ஓரு வேளை அந்த பாம்பு சொல்லியதைப் பற்றி அறிய விரும்பினாலும் என்ன செய்திருப்பார்கள்..

அப்பா ! மாலையில் நம்மோடு பேச வருவார்தானே ! அவரிடம் இந்த பாம்பு நம்மிடம் பேசிய சம்பவத்தை அவரிடம் சொல்வோம் என்று அதை விட்டிருப்பார்கள்..

மாதா பிதாவிடம் இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் பிதா என்ன செய்திருப்பார்..

“ அடே ! பாம்பே ! என் மகளையா கெடுக்க பார்த்தாய்.. இப்போதே நீ நாசமாக ஊர்ந்து போய்.. மண்ணை மட்டுமே தின்பாய்” என்று சபித்திருப்பார்..

மாதா ஒரு போதும் தன் அறிவைப் பயன்படுத்தியிருக்கவே மாட்டார்கள்.. ஒருவேளை ஏதும் புரியவில்லை அல்லது புரியாத சம்பவங்கள் அவர்கள் கண் முன்னே நடக்கிறது என்றாலும் அதை தெரிந்து கொள்ள ஆசைப்பட மாட்டார்கள் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்..

இதுதான் ஞானத்தை பயன்படுத்துவரின் செயல்..

இதுதான் பழைய ஏவாளுக்கும் புதிய ஏவாளுக்கும் உள்ள வித்தியாசம்…

ஒரு விசயத்தை இன்னும் பார்க்கவில்லை..

அதாவது ஏவாள் பழத்தை சாப்பிட நான்காவது காரணமான பிரமாணிக்கமின்மை..

அதற்கு முன்னால்..

‘பிரமாணிக்கம்’ என்ற வார்த்தையைப் பார்த்துவிடுவோம்.. அதில் எண்ணவெல்லாம் இருக்கிறது..

1. உண்மை

2. அன்பு

3. நம்பிக்கை

4. கீழ்படிதல்

5. எந்த சூழ் நிலையிலும் விட்டுக்கொடுக்காத தன்மை.

6. அருகில் இல்லாவிட்டாலும் அருகில் இருப்பதாகவே நினைப்பது.

7. கடைசி வரை நிலைத்து நின்றல்.

இவையெல்லாம் சேர்ந்ததுதான் பிரமாணிக்கம் என்ற வார்த்தை..

ஏவாள் அதை இழந்ததால் மாட்டிக் கொண்டாள்..

மாதாவிடம் அது இருந்ததால் கடைசிவரை அலகையால் மாதாவை ஜெயிக்க முடியவில்லை.. என்ன நடந்தாலும் மாதா கடைசி வரை நிலைத்து நின்று ஜெயித்தார்கள்..

பிரமாணிக்கம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம்.. அது ஒரு எழுதப்படாத உடன்படிக்கை..

ஆதாம்- கடவுள், ஏவாள்- கடவுள் – இவர்கள் பிரமாணிக்கத்தை இழந்தார்கள்..

மனுமகன் இயேசு – பிதா, மாதா- கடவுள் இதில் இவர்கள் ஒருபோதும் பிரமாணிக்கம் தவறியதில்லை..

மனிதன்- கடவுள், கணவன்-மனைவி இந்த இருவர் இணைப்பில்..

மனிதன் அடிக்கடி பிரமாணிக்கம் தவறுகிறான்.. இப்போது நாம் சமுதாயத்தில் நாம் பார்க்கிற கணவன்-மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகள், குடும்பத்தில் பிரச்சனைகள் வர காரணமாக இருப்பது கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவர் பிரமாணிக்கம் தவறினாலும் அங்கே பிரச்சனை..

இதில் அவர் ( கணவனோ அல்லது மனைவியோ) பிரமாணிக்கம் தவறினால் தவறட்டும் நான் பிரமாணிக்கம் தவற மாட்டேன் என்று கடைசிவரை நிலைத்து நிற்பவரே வெற்றி பெறுவார்.. இதில் ஒருவர் நிலைத்து நின்றால் கூட குடும்பத்திற்கு கடவுளின் ஆசீர்வாதத்தை கொண்டு வரமுடியும்..

சில குடும்பங்களில் இருவருமே பிரமாணிக்கம் தவறுகிறார்கள்.. சாத்தான் உள்ளே நுழைகிறான்.. குடும்பம் நாசமாக போகிறது..

சரி இப்போது புதிய ஏவாளின் ஈடுகட்டுதலைப் பார்ப்போம்..

மாதாவிடம் கடவுள் வியந்த பண்புகள் என்ன? குணாதிசயங்கள் என்ன? காரியங்கள் என்ன?

முக்கியமாக மாதா மேல் கடவுள் வைத்த நம்பிக்கை என்ன ? கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !