மனுமகன் சேசு பாகம் - 24

“கூட்டத்தை அனுப்பியதும் செபிக்க தனியாக மலை மீது ஏறினார். இரவாயிற்று; அங்கு தனித்திருந்தார்”
மத்தேயு 14 : 23

எதுவெல்லாம் தவம்..?

மேலே உள்ள இறைவார்த்தையை கவனியுங்கள்.. இங்கேயும் இயேசு சுவாமி ஜெபிக்கிறார்.. ஜெபிப்பதோடு மட்டுமல்லாமல் தனித்திருக்கிறார்..

இதில் இயேசு ஜெபித்தார் என்பது நமக்கு தெரியும்.. இதில் அவர் செய்ததில் எதுவெல்லாம் தவம் என்று பார்ப்போம்..

மலை மீது ஏறியது.. அதில் அவருக்கு இருந்த அசவுகரீங்கள் தவம்..

அவர் தனியாக இருந்தது தவம்.. அதுவும் இரவில் இருந்தது தவம்.

ஒரு மலையில் தனியாக.. அதுவும் இரவில் இருப்பது தவமில்லாமல் வேறென்ன?

கரடு முரடான மேடு பள்ளங்கள் இருந்த இடத்தில் தனிமையாக பேச்சுத்துணைக்குக் கூட ஒருவருமில்லாமல் இருப்பது தவமில்லாமல் வேறென்ன?

சென்ற பகுதியில் பார்த்த இறைவார்த்தையை இந்த பகுதியில் தியானிப்போம்..

“ அவர் பகலிலோ கோயிலில் போதிப்பார். இரவிலோ ஒலிவத்தோப்பு மலைக்குச் போய் வெட்டவெளியில் தங்குவார்”
லூக்காஸ் 21 : 37

பாருங்கள் இங்கே அவர் வெட்ட வெளியில் தங்குவார் என்று பார்க்கிறோம்..

தனிமை.. கரடு முரடான தரை.. வெட்டவெளி.. சில நேரங்களில் இரவு முழுக்க ஜெபம்.. அந்த இரவுப்பொழுதில் அடிக்கும் காற்று எப்படி இருக்கும்?

பிறக்கும் போதே ஓட்டை ஒடுசல் மற்றும் நாலுபக்கமும் திறப்பு இருந்த மாட்டுத் தொழுவத்தில் குளிர் காலம் உச்சத்தில் இருந்த போது நள்ளிரவில் பிறந்தவர்தானே..

பிறக்கும்போதே தவம் செய்து கொண்டு பிறந்தவர்தான் நம் மாபரன் இயேசு..

அப்போதே குளிரைத் தாங்கி டிரையினிங்க் எடுத்தவர் இப்போது இந்த கரடு முரடு தரையையும், காட்டுக்காற்றையும், வெட்ட வெளியையும், யாரும் இல்லாதா தனிமையையும் எளிதாக தாங்குகிறார்..

நம்முடைய படுக்கைகள் எத்தகைய வசதி உள்ளதாக இருக்கிறது என்று ஒருமுறை யோசித்துப்பார்ப்போம்..

மாபரனின் படுக்கையையும் யோசித்துப்பார்ப்போம்.. அங்கே படுக்கையையே இல்லை.. முதலில் தீவனத்தொட்டியில் படுத்தார்..

இங்கே வெட்டவெளியில் படுக்கிறார்.. மொத்தத்தில் அவர் இறக்கும் வரை படுக்கையை பயன்படுத்தியதே இல்லை..

குழந்தையாய் இருந்தபோது அவர் பயன்படுத்திய தேவதாயின் மடி, முந்தானை, முக்காடு, அவர்களின் தோல்ப்பட்டை, புனித சூசையப்பரின் மடி மற்றும் தோல்ப்பட்டையைத் தவிர..

புனித ஜான் மரியவியான்னியின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது அவர் மரக்கம்புகளை, கட்டைகளை விரித்து (அதுவும் சமதளமில்லாமல்) அதில் படுத்து தூங்கினார் என்று பார்க்கிறோம். அவர் உறங்குவதே கொஞ்ச நேரம்தான் அதுவும் படுக்க மரக்கொம்புகள்..

எல்லாம் இயேசு சுவாமியின் முன்னுதாரனம் மற்றும் ரோல் மாடலை அவர் பயன்படுத்தியதால்..

நாமோ படுக்க சொகுசுகளைத் தேடுகிறோம்..

மேலும் இயேசு சுவாமி அப்படி தனிமையாக இருக்கும்போதெல்லாம் அந்த கொடிய சிலுவை மரணம் அவர் கண்களுக்கு முன்னால் வராமலா இருந்திருக்கும்..?

அப்போது அவர் எப்படி வேதனைப்பட்டிருப்பார்..

நாம் பிறந்தோம்.. வளர்ந்தோம்.. வாழ்கிறோம் ஒரு நாள் எப்படியும் இறக்கத்தான் போகிறோம்.. அந்த நாள் எப்போது வரும் என்று நமக்குத்தெரியாது..

ஆனால் இயேசு சுவாமிக்கு அப்படியா?

அவர் பிறந்ததே நமக்காக இறக்கத்தான்.. அதுவும் எத்தகைய மரணம் என்பதும் அவருக்குத் தெரியும்.. அது எப்போது என்றும் அவருக்குத் தெரியும்..

அப்படியானால் அவர் மரணம் அவர் கண் முன்பாக வரும்போது அவர் அவஸ்தைக்குள்ளாகி வேதனைப்படுவதும் தவம்தானே..

நாம் வேதாகமத்தில் அவர் கெக்தமெனித் தோட்டத்தில் இரத்தவியர்வை வியர்த்த ஒரு சம்பவத்தைத்தான் பார்க்கிறோம்..

கடவுள் மனிதன் காவியத்தில் அவர் தன் பாடுகளை நினைத்து பல முறை இரத்தவியர்வை வியர்த்தார் என்று பார்க்கிறோம்…

அப்படியானால் நம் இயேசு சுவாமி தவத்தோடு பிறந்து.. தவத்திலே வாழ்ந்து.. தவத்தோடே மரித்தார் என்பதே சரி..

தவம் என்றால் காட்டில் போய் செய்வது மட்டுமல்ல.. வெள்ளிக்கிழமைகளில் ஒருசந்தி இருப்பது மட்டுமல்ல.. அதுவும் தவம்தான்.. ஆனால் அது மட்டும் தவமல்ல..

நம்முடைய ஒவ்வொரு அசவுகரீகங்களும் தவமே..

ஆண்டவர் இயேசு வாழ்ந்த சூழ்நிலையையும், நாம் வாழும் சூழ்நிலையையும் ஒப்பிட்டுப்பார்த்து நம் வாழ்க்கையில் தவத்தின் பங்கு எவ்வளவு என்று யோசிப்போம்.. ஆண்டவரின் வாழ்க்கையை தியானிப்போம்..

அந்த சிந்தனைகளோடு கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !