பாத்திமா காட்சிகள் பகுதி- 20

மாதாவின் இரண்டாம் காட்சியின் பகுதியும் அதன் பின் நிகழ்ந்த சம்பவங்கள்... 

இரண்டாம் காட்சிக்கு குழந்தைகள் செல்வதற்குள் தங்கள் குடும்பத்தினரின் (நம்பிக்கையின்மையால்) ஏச்சுக்கும், பேச்சுக்கும், கிண்டலுக்கும், ஊராரின் கேலிப்பேச்சுக்கும் குழந்தைகள் ஆளானார்கள். குறிப்பாக லூசியா. அது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது... லூசியாவுக்கு அதற்குமுன் தன் குடும்பத்தினரால் கிடைத்திருந்த கடைக்குட்டி செல்ல பாசம் எல்லாம் நின்று போய்விட்டது. இந்த பத்து வயதில் லூசியா தன் குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டாள். லூசியா மாதாவைப் பார்த்ததாக பொய் சொல்வதாக அவள் தாய் மரிய ரோஸா கருதினாள். அதனால் அவள் பங்குத் தந்தையை சந்தித்து பேசினாள். பங்குத் தந்தை அனுமதியளித்த பின்பே அவளை கோவா தா ஈரியாவுக்கு அனுப்பினாள். பிரான்சிஸ், ஜஸிந்தாவின் பெற்றோர் அவர்களை அதே நாளில் பக்கத்து ஊர் மாட்டுத்தாவனிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்..

லூசியா வேறு பல பிரச்சனையையும் சந்தித்தாள்.. இச்செய்தி கேட்டு  பலர் பல ஊர்களிலிருந்தும் லூசியாவின் வீடு தேடி வந்தார்கள். இதை எதையுமே அவள் எதிர்பார்க்கவில்லை. இது லூசியாவிற்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. இது அவள் குடும்பத்தினருக்கு எரிச்சலை மூட்டியது. எப்படியோ லூசியா அழுகையும் கண்ணீருமாக கோவா தா ஈரியா நோக்கி நடந்தாள்.. அவளை வந்திருந்த சிறு கூட்டம் பின் தொடர்ந்தது.. பிரான்சிஸும், ஜஸிந்தாவும் அவளோடு சேர்ந்து கொண்டனர்.. லூசியாவின் முகம் அழுகையால் வீங்கி கண் சிவந்திருந்தது.

“ அழாதே லூசியா, சர்வேசுவரன் நமக்குத் துன்பங்களை அனுப்புவதாக சம்மனசு சொன்னாரே. நிச்சயம் அது இதுதான். அதனால்தான் நீ துன்பப்படுகிறாய். கடவுளுக்கு நிந்தை பரிகாரமாகவும், பாவிகளை மனந்திருப்புவதற்காகவும் இதை நீ அனுபவிக்கிறாய் “ என்றாள். இதைக்கேட்ட லூசியா தெளிவடைந்தாள்..

இனி காட்சிக்கு சென்று விடுவோம்.. கோவா தா ஈரியா.. அங்கேயும் ஏற்கனவே ஒரு கூட்டம் வந்திருந்திருந்தது..

மரியா கரெய்யா என்ற பெண் லூசியாவிடம்,

“ மாதா வருவதற்கு இன்னும் அதிக நேரமாகுமோ?”  என்று கேட்டாள்.       “ இல்லை இன்னும் அதிக நேரமாகாது “ என்று லூசியா பதில் கூறினாள்.

எல்லாரும் சேர்ந்து ஒரு 53 மூன்று மணி ஜெபமாலை சொன்னார்கள். ஜெபமாலை முடிந்ததும் முன்பு ஜெபம் வாசித்த பெண் மாதா பிராத்தணை சொல்ல ஆரம்பித்தாள். அதற்கு நேரம் இல்லை என்று கூறி லூசியா தடுத்த லூசியா உடனே எழுந்து,

“ ஜஸிந்தா ! அதோ நம் அம்மா வருகிறார்கள். அதோ வெளிச்சம் “ என்றாள்.

மூன்று குழந்தைகளும் அந்த அஸின்ஹேரா மரத்தருகே ஓடினர். கூட்டம் அவர்கள் பின்னால் நகர்ந்து சென்றது. எல்லோரும் அங்கிருந்த புல்லிலும், கல்லிலுமாக முழங்காலிட்டனர். லூசியா ஜெபிக்கும் பாணியில் கரங்களை கூப்பி,

“ அம்மா, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் ? “ என்று கேட்டாள்.

“ அடுத்த மாதம் 13-ம் நாள் நீங்கள் இங்கு வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்ல வேண்டும். நீ வாசிக்க கற்றுக்கொள். நான் வேறு என்ன விரும்புகிறேன் என்பதை பின்னால் சொல்வேன் “ என்று அன்னை கூறினார்கள்.

இதன் பின் ஒரு குறிப்பிட்ட நோயாளியை குணமாக்கும்படி லூசியா கேட்டதற்கு,

“ அவள் தன் வாழ்க்கையை திருத்திக்கொள்வானால், இந்த ஆண்டில் குணமடைவாள் “ என்று பதிலளித்தார்கள் நம் அன்னை.

“  நீங்கள் எங்களை மோட்சத்திற்கு கொண்டு செல்லுங்களம்மா “ என்றாள் லூசியா.

அதற்கு : “ ஆம். ஜஸிந்தாவையும், பிரான்சிஸையும் சீக்கிரம் அங்கு எடுத்துக்கொள்வேன். ஆனால் நீ கூடக் கொஞ்சக்காலம் இங்கே இருக்க வேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி சேசு உன்னை பயன்படுத்த விரும்புகிறார். உலகத்தில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த சேசு ஆசிக்கிறார்.” என்றார்கள் மாதா.

“ நான் தனியாகவா இங்கு இருக்க வேண்டும் ? “ என்று துயரத்தோடு கேட்க,

“ இல்லை மகளே, அது உனக்கு துன்பமாயிருக்கிறதா? திடம் இழந்து போகாதே. உன்னை விட்டு ஒரு போதும் நான் செல்ல மாட்டேன். என் மாசற்ற இருதயம் உன் அடைக்கலமாகவும், சர்வேசுவரனிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும் வழியாகவும் இருக்கும்.”

இவற்றைக் கூறிய பின், “ தேவ அன்னை தன் கரத்தை விரித்து, அவர்களை சூழ்ந்திருந்த அந்தப் பேரொளியை இரண்டாம் தடவையாக எங்களுக்குள் பாய விட்டார்கள். அவ்வொளியில் நாங்கள் சர்வேசுவரனுக்குள் மூழ்கி இருக்கக் கண்டோம். ஜஸிந்தாவும், பிரான்சிஸும் விண்ணோக்கி சென்ற ஒளியிலும், பூமியின் மீது பாய்ந்த ஒளியில் நானும் இருந்தோம். நம் அன்னையின் வலது உள்ளங்கையின் முன் முட்களால் சூழப்பட்ட ஒரு இருதயம் இருந்தது. அம்முட்கள் அவ்விருதயத்தை ஊடுறுவிச்சென்றன. மனுக்குலத்தின் பாவங்களால் நிந்திக்கப்படும் மரியாயின் மாசற்ற இருதயம் அது என்றும், இவற்றிற்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்கள் உணர்ந்தோம் “ என்று லூசியா உரைத்தாள்.

லூசியா தொடர்ந்து கூறுவது : ஜூன் மாதம் நம் அம்மா எங்களிடம் ஒரு இரகசியம் கூறினார்கள் என்று நாங்கள் குறிப்பிட்டது இதைத்தான். இந்தத்தடவை நாங்கள் இதை நாங்கள் இரகசியமாகக் காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனால் அவ்வாறு செய்யும்படி கடவுளால் தூண்டப்பட்டதாக உணர்ந்தோம்.”

கடவுளுக்குள் மூழ்கியிருந்த காட்சி மறைய, தேவ அன்னை மட்டும் ஒளி சூழ காணப்பட்டார்கள். பின் அவர்களும் அம்மரத்தை விட்டெழுந்து கீழ்த்திசையில் மறைந்தார்கள். அப்போது அம்மரத்தின் உச்சி இலைகள் மாதாவின் ஆடையால் இழுக்கப்பட்டவைப்போல் கிழக்கு நோக்கி வளைந்ததை அங்கு நின்ற சிலர் கண்டார்கள். அவை மீண்டும் நிமிர்வதற்கு சில மணி நேரங்கள் ஆயின.

லூசியா கீழ்த்திசை நோக்கியே சற்று நேரம் நின்றாள். “ அவர்களை இப்போ காணமுடியவில்லை. அவர்கள் மோட்சத்திற்குள் நுழைகிறார்கள். இதோ கதவுகள் சாத்தப்படுகின்றன “ என்று லூசியா கூறியதாக மரியா கரெய்யா என்ற பெண் கூறியுள்ளாள்.

அங்கு கூடியிருந்த மக்கள் ஆச்சரியத்தால் நிறைந்தார்கள். தேவ அன்னையை யாரும் காணவில்லை. ஆனால் மிக அற்புதமான நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது பற்றி நிச்சயமாயிருந்தார்கள். சிலர் குழந்தைகளிடம் பல கேள்விகள் கேட்டார்கள். சிலர் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். சிலர் அஸின்ஹெரா மரத்தின் மேற்கிளைகளை கொய்யத் தொடங்கினார்கள். தேவ அன்னையால் தொடப்பட்ட இலைகளை விட்டுவிட்டு அடிப்பகுதி இலைகளை கொய்து கொள்ளும்படி லூசியா கூறாவிட்டால் மரமே மொட்டையாகியிருக்கும்.

கூட்டம் கலைய ஆரம்பித்தது. சிலர் ஜெபமாலை சொல்லிக்கொண்டே திரும்பினார்கள். சிலர் மாதாவின் பிராத்தனையை சொல்லிச்சென்றார்கள்.. லூசியாவும் மற்ற இருவரும் வீடு திரும்ப மணி நான்கு ஆகிவிட்டது. அவர்களை ஆயிரம் கேள்விகள் கேட்டு குடைந்து எடுத்துவிட்டது ஒரு கும்பல். அவர்கள் கேட்ட பல அவசியமற்ற கேள்விகள் குழந்தைகளை மிகவும் புண்படுத்தின. சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனமாயிருந்தார்கள். இன்னும் சில கேள்விகளுக்கு “ அது இரகசியம். நாங்கள் பேசக்கூடாது “ என்று மட்டும் கூறி சும்மா இருந்தார்கள். ஆட்கள் அகன்ற பின்புதான் குழந்தைகள் விடுதலையோடு திரும்ப முடிந்தது..

நன்றி : பாத்திமா காட்சிகள், மாதா அப்போஸ்தலர்கள் சபை. பாத்திமா காட்சிகள் நூல் மற்றும் சிறந்த கத்தோலிக்க நூல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள  Ph. 0461-2361989, 9487609983, 9487257479

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !