இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 14-ம் ஸ்தலம்: இயேசு தெய்வத்தை அடக்கம் செய்கிறார்கள். நமக்காக அடிபட்டு, மிதிபட்டு, காயப்பட்டு, அவமானப்பட்டு இன்னும் எத்தனையோ சொல்லொன்னா வேதனைகளை அனுபவித்த மாபரனின் திருச்சரீரம் சற்றே துயில் கொள்கிறது.
நம் தலைவரின் தற்காலிக உறக்கம் இது. நமக்காக கடினமாக உழைத்தார், நன்மைகள் செய்தார், நற்செய்தி அறிவித்தார், புதுமைகள் செய்தார், குருட்டு வழிகாட்டிகளையும், சத்தியத்தை விட்டு விட்டு சட்டத்தை பிடித்தித்துக் கொண்டிருந்தவர்களையும் எதிர்த்தார். அதற்காக அதாவது நன்மைக்காக பல இன்னல்களை சந்தித்தார். ஓய்வு நாளிலும் நன்மை செய்தார். உண்மையை உரக்க கூவினார், யாரிடமும் முகத்தாட்சண்யம் பார்க்கவில்லை. யாருக்கும் ஜால்ரா போடவில்லை. யாருக்கும் பயப்படவும் இல்லை. நேருக்கு நேர் தவறைச் சுட்டிக்காட்ட தயங்கியதும் இல்லை.
“உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே உலகிற்கு வந்தேன் “ என்று கூறினார். உண்மைக்கு சாட்சியம் கூறினார்.
இறுதியில் நம்மை பாவத்திலிருந்தும், நித்திய நரகத்திலிருந்தும் மீட்க கல்வாரி பாடுகளை சந்தித்து தன் திருஇரத்தத்தை சிந்தி இன்னுயிரை ஈந்து நம்மை மீட்டார். இப்போது துயில் கொள்கிறார். எந்த தண்டனை தீர்ப்பையும் ஏற்கத்தேவையில்லாதவர் எல்லாத்தண்டனையையும், தீர்ப்பையும் ஏற்று அத்தனையையும் நமக்காக செய்த அலுப்பினால் சிறிது ஓய்வு எடுக்கிறார். ஓயாமல் உழைத்தவர், ஓய்வில்லாமல் உழைத்தவர், ஓய்வு நாளிலும் உழைத்தவர் கல்லரையில்தான் ஓய்வு எடுக்கிறார்.
இப்போது ‘ஆண்டவர் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு’ நமக்குத் தரும் செய்தி என்ன?. மனிதனாக பிறந்தது ஆண்டவரே ஆனாலும் அவர் கல்லறைக்குத்தான் செல்ல வேண்டும். அதுவும் எதையுமே எடுத்துக்கொண்டு செல்ல முடியாது என்று மரித்தும் நம் தேவன் நமக்கு போதிக்கிறார்.
ஆனால் நாம் வாழ்வதற்குள் பொன்னை சேர்க்க வேண்டும், பொருளைச் சேர்க்க வேண்டும், சொத்தை சேர்க்க வேண்டும், சுகபோக வாழ்க்கை வாழவேண்டும்... இன்னும்... இன்னும்... நம் ஆசைக்கு அளவே இல்லை. ஒரு ஆசை நிறைவேறினால் இன்னொரு ஆசை முளைத்து விடுகிறது. பிறகு மனம் அதில் சென்றுவிடுகிறது..” ஆண்டவர் நமக்கு கொடுத்தது போதுமென்ற மனம் நம்மிடம் இல்லை. இப்படி வாழும் காலம் முழுவதும் செல்வம் பின்னால் அழைகிறோம். முடிவில் எல்லாம் இருந்தும் எல்லாவற்றையும் தொலைத்து வாழ்கிறோம்.
ஆண்டவரின் வார்த்தை “எந்த ஒரு மனிதனாலும் செல்வத்திற்கும், கடவுளுக்கும் ஊழியம் செய்ய முடியாது”.
மேலும் உலகச் செல்வம் செல்லரித்துப்போய் விடும் என்கிறார்.. ஆனாலும் நாம் செல்வம் சேர்க்க வேண்டும். அது எந்த செல்வம் ? விண்ணகச் செல்வம்.. பரலோகச் செல்வம்.. பூச்சிகளும், புழுக்களும் அரிக்க முடியாத செல்வம்... அதைத்தான் நாம் சேர்க்க வேண்டும்.. நம் ஆண்டவர் இதைத்தான் சேகரிக்க சொன்னார்.. ஆனால் அதை விட்டுவிட்டு பூலோக செல்வங்களுக்கு பின்னால் அலைகிறோம்..ஓடுகிறோம்...அதற்காக சிலர் பாவம் செய்யத்தயங்குவது இல்லை. ஏன் ஆன்மாக்களை இழக்கக்கூட தயங்குவதில்லை...
நம் மண் தேடி வந்த புனித சவேரியார் அரன்மனையையும், எல்லா உலகச் செல்வங்களையும், ஏன் புகழையும் விட்டு விட்டு வந்தார்...
“ ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கினாலும் தன் ஆன்மாவை இழந்தால் வரும் லாபம் என்ன “ என்ற நம் கல்வாரி மாபரனின் வார்த்தையால் நம் மண் தேடி வந்தார் “ அவருக்கு நம்மைத் தேடி வரவேண்டிய அவசியம் என்ன?
சரி நாம் விண்ணகச் செலவங்களை சேகரிக்க நாம் எவற்றையெல்லாம் அடக்கம் செய்ய வேண்டும்..
“ பேராசை, பொன்னாசை, மண்ணாசை, பொருளாசை, கோபம், அகங்காராம், பொறாமை, தற்பெருமை, அவதூறு, கோல் சொல்லுதல், பழிவுணர்சி, மன்னிக்காத தன்மை, வரட்டு கவுரவம், கீழ்ப்படியாமை, இன்னும் பல,
பலபேரை ஆட்சி செய்யும், “ மது, புகை, போதை, தீய நடத்தை, தீய சிந்தனை, தீச்செயல் இன்னும் பல,
மேலே உள்ள இரண்டு வகைக்கும் பாவம் பொதுவானது, ஏன் அதில் சாவன பாவங்களும் இருக்கலாம்..
இப்பழக்கங்களை அடைக்கம் செய்தால்தான் நம் ஆன்மாவில் தூய்மை, பிறர் சிநேகம், தாழ்ச்சி, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், அர்ப்பணம் என்ற செடிகள் முளைக்கும்..
அடக்கம் செய்யப்படவேண்டியவைகள் அடக்கம் செய்யப்பட்டு முளைக்க வேண்டியவைகள் முளைத்தால்தான் நம் மனதில் ஒரு அழகான அற்புதமான வாசனை வீசும் அழகு தோட்டம் உருவாகும். அந்த தோட்டத்தை உருவாக்க நமக்காக பாடுகள் பட்டு தன்னையே தந்த இறைவனிடம் மன்றாடுவோம்..
எங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி...எங்கள் பெயரில் தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !