மனுமகன் சேசு பாகம் - 17

பரிசுத்த வார சிந்தனைகளாக..

“ இதோ ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.- உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும்.- இதனால் பலருடைய உள்ளங்களிலிருந்து எண்ணங்கள் வெளிப்படும் “ என்றார்.

லூக்காஸ் 2 : 34-35

இந்த இறைவசனங்களை தியானிக்கும் முன்..

லூக்காஸ் 2 அதிகாரத்தில் இறை வசனங்கள்  21-முதல் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்..

முதலில் குழந்தையின் பெற்றோர் என்று வரும்.. அதன் பின் ஒரு இடத்தில் குழந்தையின் தாயும், தந்தையும் என்று வரும்..

குழந்தையின் விருத்த சேதனத்தின் போதும், குழந்தையை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போதும் மாதாவும், சூசையப்பரும் சேர்ந்துதான் அந்த கடமைகளை செய்கிறார்கள்.. சிமியோன் அவர்களுக்கு ஆசீர் கூறும் வரை.. ஆனால் அதன் பின் பாலனைப் பற்றிய அறிவிப்பின்போதும், பாடுகளைப் பற்றிய அறிவிப்பின்போதும் மாதா தனியாகப் பிரிக்கப்படுகிறார்.. இதை நாம் நன்றாக கவனிக்கலாம்..

பாலன் இயேசுவோடு மாதா மட்டும்தான் இணைக்கப்படுகிறார்…

இதை நாம் வேதாகமத்தில் இன்னொரு இடத்திலும் பார்க்க முடியும்..

புனித மத்தேயுவும் இயேசுவின் தலைமுறையை அட்டவணைப் பற்றி சொல்லிக்கொண்டு வரும்போது சூசையப்பர் வரை இணைத்துக் கொண்டு வந்தவர்.. கடைசியில் புனித சூசையப்பரிடமிருந்து இயேசுவைப் பிரித்து 

மாதாவோடு மட்டும் இணைத்து..

“ இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார் “

மத்தேயு 1 : 16

ஆக அவரும் சூசையப்பரிடமிருந்து மாதாவைப் பிரித்து மரியாயிடம் இயேசு பிறந்தார் என்று முடிக்கிறார்..

அதே நிகழ்வுதான் இங்கும் நடக்கிறது..

இயேசுவோடு மாதா மட்டுமே தொடர்பு படுத்தப்படுகிறார்.. ஏனென்றால் அது  இரத்தத் தொடர்பு..

தந்தையில்லாமல் தாயிடம் மட்டுமே பிறந்தார் இயேசு சுவாமி..

ஒருவிதத்தில் ஆண்டவர் இயேசுவுக்கு தாயும், தந்தையும் தேவ மாதா மட்டுமே..

மேலே உள்ள இறைவார்த்தை பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் மாதாவை பார்த்து மட்டும் சொல்லப்படுகிறது..

இங்கேயும் பரிசுத்த ஆவியானவரின் தலையீடு இருப்பதை நாம் நன்றாகப் பார்க்கலாம்..

மாதா சம்பந்தப்பட்ட நிறைய இடங்களில் பரிசுத்த ஆவியானவர் உடனிருப்பதை  வேதாகமத்தில் நாம் பார்க்க முடியும் (இதை பிரிவினை சபையினர் கவனிக்க..)

ஆக..

வார்த்தையான சர்வேசுவசுவரன்.. மனுவுருவெடுக்க கடவுள் மாதாவை மட்டும் தேர்வு செய்தது எவ்வளவு புனிதம் மிக்க, பெருமை மிக்க, மகிமை மிக்க, மகிழ்ச்சிக்குரிய விசயம்..

தேவ சுதன் மானிட மகனாக மாதா மட்டும் தனது சரீரத்தையும் இரத்தத்தையும் கொடுத்தது எவ்வளவு பெரிய பாக்கியம்..

சேசுவுக்கும் மாதாவுக்கும் உள்ள தொடர்பை.. இணை பிரியாத பந்தந்தை..

நாம் நினைக்க நினைக்க.. சிந்திக்க சிந்திக்க.. தியானிக்க தியானிக்க..   நம் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு பரிசுத்தமான உணர்வு, மகிழ்ச்சி, உவகை பொங்கிப் பெருக்கெடுப்பதை நம்மால் உணர முடியும்.. அதை அனுபவிக்கவும் முடியும்..

கடவுளுக்கு மட்டுமே சொந்தமான மாதா நமக்கும் சொந்தமாக இருப்பது நமக்கு எப்பேர்பட்ட பாக்கியம்.. சந்தோசம்…மகிழ்ச்சி..

மாதா வாழ்த்தப்படும்போது தேவ சுதன் வாழ்த்தப்படுகிறார்.. மகிமைப்படுத்தப்படுகிறார்.. தேவ சுதன் வாழ்த்தப்படும்போது மாதாவும் வாழ்த்தப்படுகிறார்.. மகிமைப்படுத்தப்படுகிறார்..

இந்த இடத்தில் மகா பாக்கியம் பெற்ற மகா பரிசுத்த சூசையப்பரை குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்து செல்லலாம்.

பாலன் இயேசுவுக்கும் புனித சூசையப்பருக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை..

அதே போல் தேவ மாதாவுக்கும் புனித சூசையப்பருக்கும் எந்த விதமான நேரடித் தொடர்பும் இல்லை..

ஆனால்..

பாலன் இயேசுவையும், தேவ தாயையும் பாதுகாக்கும் பொறுப்பை பிதாவான சர்வேசுவரனும், பரிசுத்த ஆவியான சர்வேசுவரனும் புனித சூசையப்பரிடம்தான் ஒப்படைத்திருந்தார்கள்..

பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமல்ல அவர்களுக்கு உணவு, உறைவிடம் கொடுத்து அவர்களைப் பேணும் வேலையும் புனித சூசையப்பரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது..

சர்வேசுவரனையும், சர்வேசுவரனுடைய தாயாரையும் பாதுகாக்கும், பராமரிக்கும் பொறுப்பு சாதாரன பொறுப்பல்ல..

அந்த நம்பிக்கை சாதாரன நம்பிக்கை அல்ல..

பிரமானிக்கத்தின் மொத்த உருவம் புனித சூசையப்பர்..

தாழ்ச்சியின் மொத்த உருவம் புனித சூசையப்பர்..

கடவுளின் நம்பிக்கை நட்சத்திரம் புனித சூசையப்பர்..

நல்ஒழுக்கத்தின் மொத்த உருவம் புனித சூசையப்பர்..

துறவு வாழ்க்கையின் ஆரம்பமும், முழுமையும் புனித சூசையப்பர்..

சூசையப்பர் பெற்ற பாக்கியத்தையும், அவரின் தாழ்ச்சியையும், பரிசுத்தத்தையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை..

இன்னும் நிறைய பேருக்கு புனித சூசையப்பரின் மகிமையையும், வல்லமையும் தெரியவில்லை..

தேவ மாதா எத்தகைய மகிமைக்குரியவர்.. புனித சூசையப்பர் எத்தகைய மேன்மைக்குரியவர்  என்பதை அறிய அல்லது அளவிட ( நம்மால் முடியாத காரியம் ஆயினும்) கடவுளின் மீட்புத்திட்டத்தில் அவர்கள் வகித்த பங்கு, பெற்ற பொறுப்பு , செய்த அளப்பரிய பணி இவைகளே அவர்களுக்கு அளவு கோல்கள்..

இயேசு சுவாமியை வைத்தே இவர்களை அளவிட முடியும்..

இந்த பரிசுத்த வாரத்தில் திருக்குடும்பத்தின் மேன்மையை இன்னும் இன்னும் அதிகம் தியானிக்க வேண்டும்..

நம் குடும்பத்தை திருக்குடும்பத்திடம் ஒப்படைத்து அவர்கள் துணையை நாட வேண்டும்..

அவர்களின் பிரமாணிக்கத்தை நாமும் நம் குடும்பங்களில் கடைப் பிடிக்க வேண்டும்..

அவர்களின் குணாதிசயங்கள் நம் குடும்பங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்..

இந்த தியான சிந்தனைகளை சிந்தித்தவாறு,

“இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்”

என்ற சிந்தனைகளை கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !