தேவமாதா யார்? பகுதி-10 : யூதித் ஆகமத்தில் மாதா!

யூதித் ஆகமத்தில்  நாம் இப்போது பார்க்கப்போகிற பகுதியில் ஒவ்வொரு வார்த்தையிலும் மாதாவின் முன் அடையாளங்கள் நிறைய வெளிப்படும் அதற்கு முன் இந்த பகுதி ஒரு மீட்பின் முன் அடையாளம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

பிதாவாகிய சர்வேசுரன் இஸ்ராயல் மக்களுக்கு விடுதலை கொடுக்கும்போதேல்லாம்.. பின்னால் வரக்கூடிய நிலையான, நிரந்தரமான விடுதலையான மீட்பின் திட்டத்தை முன் அறிவித்தும் அந்த விடுதலை எப்படி நிகழு இருக்கிறது என்பதை குறிக்கும் காரியங்களையும் அதை ஒட்டியே நடத்துகிறார்..

முன்னால் ஒரு பகுதியில் கெதயோனின் கம்பளப்பகுதியை பார்த்தோம்.. ஏன் பின்னால் வரக்கூடிய நிகழ்வான தாவீது கோலியாத் என்ற அரக்கனை வீழ்த்துவதில் கூட மீட்பின் முன்னறிவிப்பு இருக்கிறது..

மேலும் பல அரசர்களை வீழ்த்தி இஸ்ராயேல் மக்களுக்கு  நேச பிதா பெரிய வெற்றிகளைக் கொடுக்கும்போதெல்லாம் மீட்பின் அடையாளங்கள் வெளிப்பட்டிருக்கிறது..

யூதித் ஆகமத்திற்கு செல்லும் ஆதியாகமத்தை பார்த்துவிட்டு செல்வோம்..

“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.” ஆதியாகமம் 3 :15

மீட்பின் திட்டம் என்ன? 

அலகையின் பிடியில் பாவத்தில் இருக்கும் மக்களை மீட்டு அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச்செல்வது.. அதற்கு முன்வரை அடைக்கப்பட்டிருந்த மோட்சத்தைத் திறப்பது..

அதோடு அலகையை ஒழித்துக்கட்டுவது..

மீட்பர் யார் ? இயேசு கிறிஸ்து.. மக்களை மீட்கப்போவது யார் ? இயேசு கிறிஸ்து… ஆனால் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படப்போவது யார்? ஒரு பெண். யார் அந்த பெண்? மாதா.

அலகையின் தலையை இயேசு ஆண்டவர் நசுக்கினாலும்.. தேவமாதா நசுக்கினாலும் இரண்டும் ஒன்றுதான். ஏனென்றால் இயேசு ஆண்டவர் வார்த்தையான சுதனாக அலகையின் தலையை நசுக்கவில்லை மாதாவின் மகனாக மானிட மகனாகவே நசுக்கினார்.. ( நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்).

ஆனால் இந்த காரியத்தை மாதா செய்தால் பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.. அதற்கும் காரணம் இருக்கிறது.. பிசாசு ஒரு பென்ணை வைத்து உலகில் பாவத்தைக் கொண்டு வந்ததால்.. பிதாவும் ஒரு பெண்ணை வைத்துதான் அதன் கதையை முடிப்பார்..

பிசாசோடு சரிசமமாக நின்று போரிட ஆண்டவர் விரும்ப மாட்டார்.. அதை அவர் செய்தால் பிசாசு தோற்றாலும் அதற்கு வெற்றியே.. அதை பின்னால் பார்க்கலாம்..

இப்போது வெற்றி மங்கை யூதித்திற்கு வருவோம்..

யூதித் எப்படி அசீரியப்படைத் தலைவனான ஒலொபெர்னெசின் தலையை வெட்டினால் என்று யூதித் ஆகமத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.. நாம் இப்போது பார்க்கக்கூடிய வேதாக வசனங்களை மட்டும் தியானிப்போம்..

“ இதோ, அசீரிய படைத்தலைவனான ஒலொபெர்னெசின் தலை !”

“ அங்கேதான் நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை ஒரு பெண்ணின் கையால் சாகடித்தார்”

“ ஆண்டவருடைய அடியாளாகிய என்னை அவர் மாசுபடாமல் காத்ததுமன்றி, யாதொரு பாவ மாசுமின்றி என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தார்”

“அவர் வெற்றி கொண்டதையும், என்னைக் காப்பாற்றியதையும், உங்களை விடுதலை செய்ததையும் பற்றியே நான் மகிழ்ச்சிகொள்கிறேன்”

யூதித் 13 : 19,20,20

இங்கே பாருங்கள் தலையை வெட்டியது யூதித். ஆனால் என்ன சொல்கிறாள்? அது கடவுளின் வெற்றி என்று சொல்கிறார்.. உண்மைதான்..

இப்போது “உனக்கும் பெண்ணுக்கும்.. “ பகுதியை தியானித்தால் அங்கு கடவுள் வெற்றி பெற்றாலும் அது மாதாவின் வெற்றியே..

“ ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே “

யூதித் 13 : 21

அப்படியே மாதாவின் புகழ்ச்சிப்பாடலை நினைத்துப்பாருங்கள்..

“ ஏனெனில் வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார் அவர்தம் பெயர் புனிதமாமே” 

லூக்காஸ் 1: 49

“ நம் முன்னோருக்கு அவர் சொன்னதுபோலவே ஆபிரகாமிற்கும் அவர் வழி வந்தோருக்கும் என்றென்றும் இரக்கம் காட்ட நினைவு கூர்ந்து தம் அடியானாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்”

லூக்காஸ் 1 : 55

யூதித்  குறித்த பகுதி நான் சொல்லவில்லை புனித அந்தோணியார் அவர் பிரசங்கத்தில் சொல்லியிருக்கிறார்.. மேலும் பல புனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

தொடர்ச்சியை அடுத்த பகுதியில் கடவுளுக்கு சித்தமிருந்தால் பார்க்கலாம்..

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..

ஜெபிப்போம்..ஜெபிப்போம் ஜெபமாலை..

நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !