மனுமகன் சேசு பாகம் - 05

“ நீரே என் அன்பார்ந்த மகன் ; உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் “

மாற்கு 1 : 11

வார்த்தையான கடவுள் எந்த உன்னத நிலையிருந்து நமக்காக இறங்கி மனதரானார் என்று பார்த்தோம்..

மீண்டும் ஓரு சில அடிப்படைக் கேள்விகள் சின்ன குறிப்பிடத்திலிருந்து..

26. இயேசு என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

 நம்மை இரட்சிக்கிறவர்.

27. ஆகையால் இயேசு கிறிஸ்து நாதர் யார் ?

நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய்ப் பிறந்த சுதனாகிய சர்வேசுவரன்.

நம்மை எதிலிருந்து இரட்சிக்க இயேசு சுவாமி மனிதரானார்?

நரகத்திலிருந்து..

இது எல்லாருக்கும் தெரிந்த பதில்.. சின்ன குழந்தைக்கு கூட தெரியும்..

நரகம் இருக்கிறது என்பது விசுவாச சத்தியம்..

ஆண்டவர் இயேசுவே நேரிடையாக கூறியிருக்கிறார்..

“தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்”

மத்தேயு 13 : 41-42

“ எரிப்பதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள் “ (மத்தேயு 13: 30), நெருப்பில் போடப்படுவார்கள் “, “அவியா நெருப்பில் சுட்டெரிக்கப்படுவார்கள்”, முடிவில்லாத தண்டணை கிடைக்கும்.” (மத்தேயு 25 : 46)

“வெளி இருளில்  தள்ளுங்கள் அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்”

மத்தேயு 22 : 13, மத்தேயு 25 : 30

“ நரகத்தில் வீழ்த்த வல்லவருக்கே அஞ்சுங்கள் “ 

லூக்காஸ் 12 : 5

“ உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்”

மத்தேயு 10 : 28

நரகம் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக பைபிளில் இன்னும் எத்தனையோ இறைவார்த்தைகளை சொல்லிக்கொண்டே போகலாம்..

ஆகையினால் யாராவது “ நரகம் இல்லை “, “ நரகம் என்பது ஒரு நிலை “, “ அது பூமியில்தான் இருக்கிறது” இன்னும் ஏதேதோ தப்பரைகளை சொல்லிக்கொண்டே போனால் அதை நம்பாதீர்கள். அவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்..

இது தப்பரைகளுக்கும், விசுவாச மறுதலிப்புகளுக்கும், வினோத பிரியம் கொண்டு தப்பானதை செய்பவர்களுக்கும் பஞ்சமில்லாத காலம்..

ஆக இயேசு சுவாமி எதற்காக தன்னுடைய மேலான நிலையை விட்டு, மனித குலத்தின் மேல் இரக்கமும், பரிதாபமும் கொண்டு மனிதரானார் என்றால்

நாம் பாவத்தில் அழிந்து நரகம் போகாதபடி நம்மை மீட்க இரட்சகராக இந்த உலகிற்கு வந்தார்..

பொதுப்பணி செய்வதற்கோ, சேவை செய்வதற்கோ வரவில்லை.. அந்த பணியை செய்ய எத்தனையோ ஆட்களை கடவுள் உருவாக்கியிருக்கிறார்.. அதற்காக அவர் வர வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே, நரகத்திலிருந்து மீட்க, பிசாசிடமிருந்து நம்மை மீட்க வந்த இரட்சகர்தான் இயேசு சுவாமி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது..

உலக ரீதியாக சிலர் “ சீர்திருத்த வாதி “ , “ மறுமலர்ச்சி ஏற்படுத்த வந்தவர் “ என்று காட்ட முயற்சி செய்கிறார்கள்..

சீர்திருத்தம்தான், மறுமலர்ச்சிதான் ஆனால் அது ஆன்மாவும், ஆன்மீகமும் சம்பந்தப்பட்ட மறுமலர்ச்சி..

ஆண்டவரே பிலாத்திடம் சொல்லிவிட்டார்.

“ என் அரசு இவ்வுலகை சார்ந்தது அன்று “ ( அருளப்பர் 18 : 36).

கடவுளின் அரசை பூமிக்கு கொண்டு வருவதற்காக நம்மை பாவம் மற்றும் பிசாசிடமிருந்து விடுவித்து விடுதலை அளிக்க வந்தார்.. 

கடவுளே பூமியில் மனிதராக வாழ்ந்ததால் அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கும் , அவர்  நற்செய்தி அறிவிக்க சென்ற இடத்திலும் பலருக்கு பல நன்மைகளும், அதிசயங்கள், அற்புதங்களும் செய்துள்ளார்..

ஆக “ நரகம் “ உண்டு.. உண்டு.. உண்டு..

அந்த நரகத்திலிருந்து நம்மை மீட்க வந்த இரட்சகர் இயேசு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது..

இப்போது பிதாவின் அன்பைப் பார்ப்போம்..

அவரால் படைக்கப்பட்ட மனிதப்படைப்பு அவருக்கு கீழ்ப்படியாமல் கெட்டுப்போய் பாவத்தில் வீழ்ந்தாலும் அந்த படைப்பு பாவத்திலேயே வாழ்ந்து அழிவுருவதை விரும்பாமல் தன்னில் ஒரு ஆளையே மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்பி அவர் இரத்தத்தால் நம்மை மீட்டது எப்பேற்பட்ட விலைமதிக்க முடியாத பேரன்பு..

அந்த அன்பை நாம் ஒரு நாளாவது நினைத்துப்பார்க்கிறோமா?

இந்த சிந்தனைகளோடு கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !