சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 05

அர்ச். சின்னப்பர் சொல்வது போல் அந்தத் திருச்சபை அவருடைய (கிறீஸ்து இராஜாவுடைய) சரீரமாகவும், எல்லாவற்றிலும் எல்லாமுமாக நிறைந்து நிரப்புகிற அவருடைய பூரணமாகவும் இருக்கிறது (எபி.1:23). இந்த இராச்சியத்தில் கிறீஸ்து இராஜாவின் இடமாக இருந்து ஆளுபவர் மனிதரே ஆயினும், அவர்கள் ஆட்சியின் அதிகாரம், முறைமையும் தெய்வீகமானது. 

காணக்கூடிய இந்த அதிபதிகள் காணக்கூடாத இஸ்பிரீத்துவின் வல்லபத்தாலும், தங்கள் தலைமையாகிய கிறீஸ்து இராஜாவின் சம்பூரண வரப்பிரசாத உதவியாலும் தாங்கள் ஆட்சி செலுத்துகிறார்கள். ஆகையால் இந்த தமது இராச்சியத்தை உலகத்துக்கடுத்த இராச்சியமல்ல என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார். ஆனால் இந்த இராச்சியத்தின் அதிகாரிகளும், பிரஜைகளும் மனிதராகையால், இந்த இராச்சியம் உலகத்தில் இருக்கிறது என்று நிச்சயமாய்க் கண்டு கொள்கிறோம் 

இந்த இராச்சியமாகிய திருச்சபையை உலகத்தில் ஸ்தாபிப்பதொன்றே நமதாண்டவர் தமது ஏக அலுவலாக மேற்கொண்டார். இதற்காகவே அவர் சீடர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குத் தமது போதகங்களையெல்லாம் வெளிப்படுத்தினார். தமது பகிரங்க சீவியத்தில் நோயாளிகளை குணப்படுத்தியதும், பேய்களை ஓட்டியது, பாவங்களை மன்னித்ததுமாகிய தமது கிரியைகளினாலும் அந்த சீடர்களுடைய விசுவாசத்தைத் திடப்படுத்தி சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பிரசங்கிக்க அவர்களை அனுப்பினார். 

“பிதா உங்களை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (அரு. 20:21); “அப்படியே நீங்கள் போய் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறதென்று பிரசங்கியுங்கள்” (மத்.10:7).

அந்தத் திருச்சபைக்கு தலைவராய் இராயப்பரை நியமித்து நீ இராயாய் இருக்கிறாய். இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” (மத்.16:18) என்றார் 

மேலும் அந்தத் திருச்சபை என்னும் இராச்சியம் யாவரும் கண்டு சேரும்படியான வெளியரங்க ஸ்தாபனம் என்றும் கூறியிருக்கிறார். “நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள்; பருவதத்தின் (மலையின்) மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்க மாட்டாது” (மத்.5:14), 

இசையாஸ் என்பவர் இதை முன்னமாக தீர்க்கவசனமாய் மொழிந்திருந்தார்: “வரிவேத முடிவு நாட்களில் ஆண்டவருடைய ஆலய மலையானது பர்வதங்களின் சிகரத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும். சகல ஜாதி ஜனங்களும் அதனிடத்துத் திரளாய் ஓடுவார்கள் (இசை. 2:2,3). 

இந்த இராச்சியத்தைச் சேர்ந்தவர்களுக்குள் ஒற்றுமை இருக்கும்படியாகவும் கிறீஸ்து அரசர் பிரத்தியேகமாய் பிதாவை வேண்டிக்கொண்டார். “அவர்கள் எல்லோரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, தேவரீர் என்னை அனுப்பினீரென்று உலகம் விசுவசிக்கவும், நீர் என்னிலும், நான் உம்மிலும் இருக்கிறது போல அவர்களும் உம்மிடத்தில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்” (அரு.17:21)

மேலும் தமது சீடர்களின் போதனையைக் கேட்டு விசுவசித்து, ஞானஸ்நானத்தால் தமது இராச்சியத்தில் வெளியரங்கமாய் வந்து உட்படாதவர்களும் தமது பிரஜைகளாய் இருக்கிறார்கள்; அவர்களுக்கும் தாமே இராஜா என்று காட்ட இந்த ஆட்டுக்கிடையைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என் குரல் சத்தத்தைக் கேட்கும். அப்போது ஒரே ஆட்டுக்கிடையும் ஒரே மேய்ப்பனும் ஆகும்” என்று (அரு. 10:16) சொன்னார். 

கடைசியாக இந்த இராச்சியம் எங்கும் பரவி கடைசி மட்டும் நிலைநிற்கும் என்னும் வாக்குத்தத்தம் அருளிச் செய்தார். சேசுநாதர் பரலோகத்திற்கு எழுந்தருளுமுன் தமது சீடர்களை நோக்கி: “உங்கள் மேல் எழுந்தருளி வரப்போகிற இஸ்பிரீத்து சாந்துவின் வல்லமை நீங்கள் அடைந்து, ஜெருச லேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும், பூமியின் கடைசிமட்டும் எனக்கு சாட்சியாயிருப்பீர்கள்” (அப்.நட.1:8). 

இதோ நான் உலக முடியுமட்டும் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்” என்றும் (மத். 28:20) திருவுளம்பற்றினார்.

இந்த இராச்சியம் பெருகி வளர்ந்து கடைசி வரையில் நீடித்து இருக்கும் என்பதை இசையாஸ் தீர்க்கதரிசியும் கூறியிருக்கிறார். அவருடைய இராச்சியம் மென்மேலும் விஸ்தாரம் ஆகும் அவருடைய சமாதானம் முடிவடையாதிருக்கும்” (இசை. 9:7)

தொடரும்...