சேசுநாதர்சுவாமி பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக.

ஜெத்சமெனி. ஒலிவத் தோப்பு. சேசுவுக்குப் பின் கைப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு, இராயப்பரும் செபதேயுவின் இரு குமாரர்களும் துரிதமாய் நடக்கிறார்கள்.

அவர்கள் ஒலிவத் தோப்பின் மண்மேடு வளையங்களில் முதல் மேட்டின் ஓரத்தை அடைகிறார்கள். சேசு அவர்களைப் பார்த்து : "நில்லுங்கள். இங்கே எனக்காகக் காத்திருங்கள் - நான் ஜெபிக்கும் வேளையில். ஆனால் உறங்கி விடாதீர்கள். நீங்கள் எனக்குத் தேவைப் படக் கூடும். இதை நான் பிறர்சிநேகத்திற்காகக் கேட்கிறேன். ஜெபியுங்கள். உங்கள் குரு மிகவும் தளர்ந்திருக்கிறார்.''

ஏற்கெனவே சேசு மிகத் தளர்வான நிலையில் இருக்கிறார். தாங்க முடியாத அளவுக்கு பாரம் சுமத்தப்பட்டிருக்கிறார். கூட்டங்களில் பேசிய, முகவடிவான, வலிமையுள்ள, ஒரு அரசனின் கண்களைக் கொண்ட, அமைதியான புன்னகை பூக்கும், எதிரொலிக்கும் அழகிய குரலைக் கொண்ட வீரமுள்ள சேசு இப்பொழுது எங்கே? அவர் இப்போதே மூச்சற்றவர் போல் காணப்படுகிறார். நிறைய அழுதுள்ள ஒருவனைப் போலிருக்கிறார். அவர் குரல் களைத்துச் சோர்ந்திருக்கிறது.

சேசு அவர்களை விட்டுச் செல்கிறார். மூவரும் விழித்திருக்கவும், ஏராளமாய் விழத் தொடங்கியிருக்கிற பனியை மாற்றவும் ஒரு சிறு நெருப்பை மூட்டுகிறார்கள். சேசு அவர்களுக்கு எதிர்ப்புறமாய்த் திரும்பி கிழக்கு நோக்கி நடக்கிறார். அவருடைய கண்கள் அகலமாய் விரிந்தும் ஆழமாகப் புதைந்தும் தெரிகின்றன. தலை கவிழ்ந்தபடியே அவர் ஏறிச் செல்கிறார். இடைக்கிடையே ஒரு பெருமூச்சுடன் முகத்தை நிமிர்த்துகிறார். அப்படிச் செய்யக் கஷ்டப்படுகிறார் என்று தெரிகிறது. மூச்சு வாங்குகிறார். மிகவும் துயரமான தம் விழிகளால் அமைதியாயிருக்கிற ஒலிவத் தோப்பை சுற்றிலும் பார்க்கிறார். சில மீட்டர் தூரம் ஏறியபின் ஒரு மண்மேட்டு வளைவைச் சுற்றி நடக் கிறார். அவர் ஒரு பெரிய பாறாங்கல் வரையிலும் நடந்து போகிறார்.

சேசு அங்கே நிற்கிறார். கீழே நிலவொளியில் எல்லாம் வெண்மை யாகக் காட்சியளிக்கும் பட்டணத்தை அவர் பார்க்கவில்லை. மாறாக, அவர் அதற்குத் தம் முதுகுப்புறம் காட்டும்படி திரும்பி நின்று, தம் கரங்களை சிலுவை வடிவமாய் விரித்து ஆகாயத்தை நோக்கி முகத்தை உயர்த்தி ஜெபிக்கிறார். இடையிடையே ஒரு நெடுமூச்சு - ஒரு தெளி வான வார்த்தை. அவர் சொல்வது ஒரு சங்கீதமல்ல, பரலோக மந்திர மல்ல. அவருடைய அன்பிலிருந்தும், தேவையிலிருந்தும் எழுகிற ஜெபம் அது. தம் பிதாவுடன் அவருடைய உண்மையான உரைய பாடலாக அது உள்ளது. எனக்குப் புரிகிற சில வார்த்தைகளிலிருந்து இதை நான் கண்டுபிடிக்கிறேன் : "நீர் அறிவீர்.... உமது குமாரன் நான் ..... எல்லாம். ஆனால் எனக்கு உதவி புரியும்..... நேரம் வந்து விட்டது. நான் இனி உலகிற்குச் சொந்தமல்ல... மீட்பராக இருந்து, மனிதன் உம்மை திருப்தி செய்யச் செய்தருளும். வார்த் தையானவர் உமக்குக் கீழ்ப்படிதலுள்ளவரானார்... உம் விருப்பப் படி.... அவர்கள் மேல் நீர் இரக்கமாயிருக்கும்படி கேட்கிறேன் .... அவர்களை நான் இரட்சிப்பேனா? அதையே உம்மிடம் கேட்கிறேன். இதை நான் விரும்புகிறேன் : அவர்கள் உலகத்திடமிருந்தும், சரீரத்திடமிருந்தும், பசாசிடமிருந்தும் காப்பாற்றப்பட வேண்டும்..... பிதாவே! உம்மால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தன் ஆத்துமத்தை அசுத்தப்படுத்த விரும்பினான். அந்த அசுத்தத்தை என் துயரத்திற்குள்ளும், என் இரத்தத்திற்குள்ளும் நான் போட்டு விடுகிறேன். அதனால் உமக்குப் பிரியமாயிருக்கிற அழிவுற முடியாத ஆவியின் கருப்பொருள் மீண்டும் முந்திய நிலைக்குக் கொண்டுவரப்படும்படியாக.... அது எங்கும் இருக் கிறது. அவனே இன்று மாலையில் அரசனாயிருக்கிறான்..... அரசமாளிகை யிலும், வீடுகளிலும், போர்ச் சேவகர் நடுவிலும் தேவாலயத்திலும்.... பட்டணம் அவனால் நிரம்பியுள்ளது. அது நாளை நரகமாயிருக்கும்.''

சேசு திரும்பி, பாறையில் முதுகைச் சார்த்தி, சாய்ந்தபடி கைகளைக் கட்டிக் கொள்கிறார். ஜெருசலேமைப் பார்க்கிறார். அவருடைய முகத்தில் மேலும் மேலும் துயரம் அதிகரிக்கிறது. அவர் மெல்லக் கூறுகிறார்: "பட்டணம் முழுவதும் பாவத்தால் நிரம்பியிருக்கிறது. அங்கே நான் எத்தனை பேரை குணப்படுத்தினேன்! எவ்வளவு பேசி யிருக்கிறேன்! எனக்குப் பிரமாணிக்கமாயிருப்பதாகக் காணப்பட்டவர்கள் எங்கே?" சேசு அழுகிறார். சில கண்ணீர்த் துளிகள் அவர் முகத்திலிருந்து தரையில் விழும்போது பிரகாசிக்கின்றன. பின் அவர் நிமிர்ந்து கைகளை விடுவித்துக்கொண்டு தம் தலைக்கு மேலாக கரங்களைக் குவித்து, அவை சேர்ந்திருக்கிறபடியே அசைக்கிறார்.

சேசு இப்பொழுது புறப்பட்டு மூன்று அப்போஸ்தலர்களிடமும் வருகிறார். அவர்கள் மூவரும் குச்சிகளால் எரியும் நெருப்பைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அரை உறக்கமாயிருக்கிறதை அவர் காண்கிறார். இராயப்பர் ஒரு மரத்தின் அடியில் சாய்ந்து, கரங்களை மார்பில் சார்த்தியபடி, ஆழ்ந்த உறக்கத்தின் முதல் மயக்கத்தில் தலையை ஆட்டுகிறார். யாகப்பர் தன் சகோதரனுடன் நிலத்திலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் மர வேரில் அதன் கரடுமுரடு அதிகம் தாக்காதபடி மேல் வஸ்திரத்தை விரித்து உட்கார்ந்திருக்கிறார். அவர்கள் இராயப்பரைப் போல் வசதியாயில்லாவிட்டாலும், அவர் களும் தூங்கி வழிகிறார்கள். யாகப்பர் அருளப்பரின் தோளில் தலை சாய்த்திருக்கிறார். அருளப்பர் யாகப்பரின் தலையை நோக்கித் தம் தலையைச்ச் சாய்ந்திருக்கிறார். உறக்க மயக்கம் அவர்களை அசைவறச் செய்துள்ளது.

''உறங்குகிறீர்களா? ஒரு மணி நேரம் மட்டும் உங்களால் விழித் திருக்கக் கூடாமல் போயிற்றா? எனக்கு உங்கள் ஆறுதலும், ஜெபமும் எவ்வளவு தேவையாயிருக்கின்றன!

மூவரும் திடுக்கிட்டபடி விழித்துக் கொள்கிறார்கள். அவர்கள் முற்றிலும் குழம்பிப் போயிருக்கிறார்கள். கண்களைக் கசக்குகிறார்கள். தங்களுடைய அஜீரணத்தைக் குறை சொல்லி சாக்குப்போக்கை முணுமுணுக்கிறார்கள். "இனி நாங்கள் சத்தமாக ஜெபிப்போம். இனி உறங்க மாட்டோம்' என்கிறார்கள்.

"சரி, ஜெபியுங்கள். விழித்து தயார் நிலையில் இருங்கள். உங்கள் நலனுக்காகவும்தான்.'' சேசு மறுபடியும் போகிறார்.

அவர் அதிக மெதுவாகவும், கூனியபடியும் தம் பாறைக்குப் போகிறார். தம் கரங்களைப் பாறையில் ஊன்றியபடி முழங்காலிடு கிறார். அதன்பின் ஜெபிக்கவும் தியானிக்கவும் மீண்டும் தொடங்கு கிறார். அவருடைய தியானம் உண்மையிலே துயரமாயும், துயரத்தை விட அவஸ்தை நிறைந்ததாயும் இருக்க வேண்டும். அதைக் காண்பது அவருடைய அவஸ்தையில் பங்கெடுப்பதாகிறது. அவர் ஜெருசலே மைக் காட்டி சயிக்கினை செய்கிறார். பின் மறுபடியும் கரங்களை வானத்தை நோக்கி தமக்கு உதவி கேட்பது போல் எழுப்புகிறார்.

தமக்கு வெப்பமாயிருப்பது போல் தம் மேல் வஸ்திரத்தை அகற்று கிறார். அவருடைய கண்கள் தம் வாதையைத் தவிர வேறெதையும் காணவில்லை. எல்லாமே அந்த வேதனையை அதிகரிப்பதாகவே உள்ளன. அவருடைய தாயால் நெய்யப்பட்ட அந்த மேல் வஸ்திரம் கூட. அதை அவர் முத்தமிட்டுச் சொல்கிறார்: மன்னியுங்கள் அம்மா, என்னை மன்னியுங்கள்' என்று. தாயின் அன்பால் நெய்யப்பட்ட அந்தத் துகிலிடம் மன்னிப்புக் கேட்பது போலிருக்கிறது... அந்த மேல் வஸ்திரத்தை மீண்டும் அணிகிறார். கொடிய வேதனைக்கு உள்ளாகிறார். தாம் இருக்கிற நிலையை விட்டு வெளியேறும்படி ஜெபிக்க விரும்புகிறார். ஆனால் ஞாபகங்களும் கவலையும், சந்தேகங்களும், துயரங்களும் அவர் ஜெபத்துடனேயே அவரிடம் திரும்பி வருகின்றன .... அது ஒரு நிலச்சரிவு போல்.... அவரது சுவிசேஷ போதக வாழ்வு அவர் முன் தோன்றிக் கடந்து செல்கிறது .... துரோகியான யூதாஸைத் திரும்பவும் அவர் கண்முன் கொண்டு வருகிறது.

அவர் தம் அவஸ்தையை மேற்கொள்வதற்காக இராயப்பருடை யவும், அருளப்பருடையவும் பெயர்களை உரக்கச் சொல்கிறார். ஆனால் அவர்கள் வரவில்லை. அவர் மறுபடி அவர்களைக் கூப்பிடு கிறார். அவர் எதையோ கண்டு பயங்கரப்படுவது போலிருக்கிறார். எதையென்று தெரியவில்லை.

பின் அவர் எழுந்து ஓடி வருகிறார், இராயப்பரும் இரு சகோ தரர்களும் இருக்கிற இடத்திற்கு. அவர்கள் நிம்மதியாய் நீறு பூத்து விட்ட நெருப்பைச் சுற்றி உறங்குவதைக் காண்கிறார். "இராயப்பா, உன்னை நான் மூன்று முறை கூப்பிட்டு விட்டேன். இன்னுமா உறங்கு கிறாய்? நான் எவ்வளவு வேதனைப்படுகிறேன் என்று உனக்குத் தெரிய வில்லையா? ஜெபி. சரீரம் வென்று விடாதிருக்க - உங்களில் யாரையும் அது மேற்கொள்ளாதபடி ஜெபியுங்கள். உள்ளம் விரும்புகிறது. மாம்சம்தான் பலவீனமாயிருக்கிறது. எனக்கு உதவுங்கள்...'' அவர் சொல்கிறார்: "நான் உணருகிற அவஸ்தை என்னைக் கொல்கிறது. ஆம். உண்மையாகவே என் ஆத்துமம் மரணமட்டும் துயரமாயிருக்கிறது....'' அவர் உண்மையிலே சாகப் போகிற மனிதனைப் போலிருக்கிறார், மிகச் சஞ்சலமாக மிகுதியான தனிமை யிலே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் தேம்பியழுவது போலிருக்கிறது .....

மறுபடியும் அவர் தம் கரங்களை சிலுவை வடிவமாய் விரித்து நின்றபடி ஜெபிக்கிறார். அதன்பின் முன்போல் முழங்காலிட்டு அவர் முகம் அந்தப் பூக்கள் மேல் கவிழ ஜெபிக்கிறார். அவர் சிந்தனை வசப்பட்டு மவுனமாகிறார்..... பின் சத்தமாய் முனகவும் அழவும் தொடங்குகிறார். தம் குதிங்கால்களில் அமர்ந்து சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். வர வர கூடுதல் வேகமுள்ள கவலையுடன் தம் பிதாவைக் கூப்பிடுகிறார்......

அவர் கூறுகிறார்: “ஓ! இந்தப் பாத்திரம் மிகவும் கசப்பாயிருக்கிறது. என்னால் முடியாது! என்னால் முடியாது! அது என் பலத்துக்கு மேற் பட்டது. நான் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் இதைத் தாங்க இயலாது ..... பிதாவே! உம் குமாரனிடமிருந்து அதை அகற்றும்! என் மேல் இரங்கும்!....'' இதன்பின் அவர் தம்மையே சுதாரித்துக்கொண்டு சொல்கிறார்: "பிதாவே, நான் கேட்பது உம் சித்தத்திற்கு எதிராயிருந்தால் என் குரலைக் கேட்க வேண்டாம். நான் உம்முடைய மகன் என்பதை நினைக்காதீர். உம் ஊழியன் என்று நினையும். என் மனதின்படியல்ல, உம் சித்தப்படியே ஆகட்டும்.''

அப்படியே சற்று நேரம் இருக்கிறார். பின் அவரிடமிருந்து அமுக்கப் பட்ட ஒரு அழுகுரல் எழுகிறது. அவர் தலையை நிமிர்த்துகிறார். மிகவும் கலவரமடைந்து காணப்படுகிறார். ஒரு கணம்தான். அதற்குள் தடாரென்று தரையில் விழுகிறார். அவர் முகம் மண்ணில் கிடக்கிறது. அந்நிலையிலே இருக்கிறார். உடைந்து சிதறிப் போன மனிதன் - உலகின் எல்லாப் பாவங்களாலும் மிகையான பாரஞ்சுமக்கிறவர் - பிதாவின் முழு நீதியாலும் தாக்கப்பட்டுக் கிடக்கிறார். இருளால் நசுக்கப் பட்டிருக்கிறார். கொடிய, மிகவும் அஞ்சத்தக்கதான, கடவுளால் கைவிடப்படுதல் எனும் பயங்கரத்தால் நசுங்கிப் போயிருக்கிறார்.... அதுதான் ஆன்மாவின் மூச்சு தடைப்பட்டுத் திணறுதல். 

சிறைச்சாலையாகிய இந்த உலகத்தில் உயிரோடு புதைக்கப்படுதல். நமக்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக உணரமுடி யாத நேரம் அது. அது சங்கிலியால் கட்டப்படுவது. வாயடைத்து இறுக்கப்படுவது, நம் ஜெபங்களாலேயே திருப்பி எறியப்படுவது, அவை கூரிய முனைகளோடும், நெருப்புடனும் நம் மேலேயே திரும்ப விழுகின்றன. அது மூடப்பட்டுள்ள மோட்சத்தை முட்டுவதாகும். அதை நம் குரலோ அல்லது நம்முடைய அவஸ்தையின் உருவமோ ஊடுருவித் திறப்பதில்லை. அது "கடவுளின் அனாதையாக" இருப்பது. அது பைத்தியமாதல், அவஸ்தைப்படுதல், இத்தனை காலமும் ஏமாற் றப்பட்டு விட்டோம், கடவுளால் வெறுத்து ஒதுக்கப்பட்டோம் என்ற எண்ணம். தீர்ப்படைந்து விட்டோம் என்ற நினைவு. அது நரகம்!...

சேசு முனகுகிறார். அவர் மரண அவஸ்தையிலிருப்பவரின் அழு குரலில் : "இல்லை !..... இல்லை !.... தூரப் போ..... என் பிதாவின் சித்தம்! அவர் சித்தமே! அவரது சித்தமே வேண்டும்.... பிதாவே உமது சித்தம். உம் சித்தமே, என் சித்தமல்ல..... வீண்..... என் ஆண்ட வர் ஒருவரே. மகா பரிசுத்த சர்வேசுரன். ஒரே சட்டம் : கீழ்ப்படிதல். ஒரே அன்பு: மீட்பு.... இல்லை. எனக்கு இப்போது தாய் இல்லை. என்னிடம் இனி உயிர் இல்லை. எனக்கு எந்த அலுவலும் கிடையாது.... பசாசே! நீ என் தாய் மூலமாகவும், என் உயிர் மூலமாகவும் என் தெய்வீகம் மூலமாகவும் என் அலுவலின் மூலமாகவும் என்னை வீணாக சோதிக் கிறாய். மனுக்குலமே என் தாய். அதற்காக நான் சாகும் அளவிற்கு அதை நான் நேசிக்கிறேன். என் உயிரை எனக்குக் கொடுத்தவர் அதைத் திருப்பிக் கேட்கிறார். எல்லா உயிரினங்களுக்கும் அவரே உந்ந்த எஜமானர். அவரிடமே என் உயிரைத் திரும்பத் தருகிறேன். இந்தப் பரிகாரத்தை என் தெய்வீகம் செய்யக்கூடுமாதலால் நான் அதை வலியுறுத்துகிறேன். என் அலுவலை என் மரணத்தால் நான் நிறைவேற்றுகிறேன். என் கடவுளாகிய ஆண்டவரின் சித்தத்தைச் செய்ய வேண்டுமென்பதைத் தவிர எனக்கு வேறெந்தக் கடமையும் இல்லை. மூன்றாம் முறையும் சொல்கிறேன் : "பிதாவே, கூடுமானால் இப்பாத்திரம் என்னை விட்டு நீங்கட்டும். ஆனால் உம்ய சித்தப்படியே ஆகட்டும். என் சித்தப்படியல்ல.'' சாத்தானே ஓடிப் போ. நான் சர்வேசுரனுக்குச் சொந்தமானவன்.''

இதற்குப் பின் : "தேவனே! தேவனே! தேவனே!'' என்று மூச்சு வாங்கியபடி சொல்வது தவிர அவர் வேறொன்றும் பேசவில்லை. ஒவ்வொரு தடவை தம் இருதயம் துடிக்கும் போதும் அப்படிக் கூப்பிடுகிறார். ஒவ்வொரு இருதயத் துடிப்பிலும் இரத்தம் வெளியே கொட்டுகிறது. அவர் தோள் மீதிருக்கிற துணி இரத்தத்தால் நனைகிறது. அந்த இடத்தில் நிறம் கருமையாகிறது. தெளிவான நிலா வெளிச்சம் அந்த இடத்தில் பட்டாலும், அது அப்படித் தெரிகிறது.

அப்போது அவருடைய சிரசுக்கு மேலாக ஒரு மீட்டர் உயரத்தில் ஓர் அதிக ஒளியுள்ள வெளிச்சம் காணப்படுகிறது. அது எவ்வளவு ஒளியாக உள்ளதென்றால் இரத்தத்தால் பாரமாகியுள்ள அவருடைய அலை போன்ற தலைமுடியின் ஊடாகவும் அவருடைய கண்களில் படரும் இரத்தத் திரையினூடாகவும் அவ்வொளியை சாஷ்டாங்க மாகக் கிடக்கும் சேசு பார்க்க முடிகிறது. அவர் தலையை உயர்த்து கிறார்..... சந்திரன் அவருடைய பரிதாபமான முகத்தில் பிரகாசிக்கிறது. சம்மனசின் ஒளி அதிகம் பிரகாசமாக அதில் படுகிறது. அவ்வொளி வெள்ளிக் கோளின் வெண்-நீல வைர வெளிச்சம் போலிருக்கிறது. சேசுவின் மயிர்க் கால்களிலிருந்து கசியும் இரத்தத்தில் அவருடைய பயங்கர அவஸ்தை புலப்படுகிறது.

அவருடைய கண்புருவம், முடி, மீசை, தாடி எல்லாம் இரத்தம் தெளிக்கப்பட்டு இரத்தம் மூடியிருக்கிறது. அவருடைய சென்னி யிலிருந்து இரத்தம் துளிர்க்கிறது. கழுத்தின் நரம்புகளிலிருந்து ஒழுகுகின்றது. கரங்கள் இரத்தம் வியர்க்கின்றன. அந்த சம்மனசின் வெளிச்சத்தை நோக்கி அவர் கைகளை நீட்டும் போது, அவருடைய அகன்ற சட்டைக் கைகள் முழங்கை நோக்கி பின்னுக்கு இழுக்கப் பட்டு அவருடைய முன்னங்கைகளில் இரத்தம் வியர்த்திருப்பதைக் காண முடிகிறது. இரத்தத்தால் சிவந்திருக்கிற அவர் முகத்தில் வடிகிற கண்ணீர் இரண்டு கோடுகளாகத் தெரிகின்றது.

சேசு தம் மேல் வஸ்திரத்தை எடுத்து தம் கரங்களையும் முகம், கழுத்து, முன்னங்கைகளையும் துடைக்கிறார். ஆனால் இரத்த வியர்வை தொடருகிறது. அந்தத் துணியால் பல தடவை அவர் தம் முகத்தில் அழுத்தி ஒற்றுகிறார். ஒவ்வொரு தடவை அவர் இடம் மாற்றி ஒற்றும்போது, இரத்த அடையாளம் அந்த இருண்ட சிவப்புத் துணியில் தெளிவாகத் தெரிகிறது. துணி ஈரமாயிருப்பதால் கறுப்பு போல் காணப்படுகிறது. தரையிலுள்ள புல் இரத்தத்தால் சிவந்திருக்கிறது.

சேசு மயக்கமுறும் தருணத்தில் இருப்பதாகக் காணப்படுகிறார். மூச்சு முட்டுவது போல் அவர் தம் அங்கியை கழுத்துப் பக்கத்தில் அவிழ்த்து விடுகிறார். தம் கரத்தை இருதயத்திலும் பின் சிரசிலும் வைத்து, காற்று வீசுவது போல் அதை முகத்துக்கு முன்பாக அசைக் கிறார். அவருடைய வாய் பாதி திறந்திருக்கிறது. மண்மேட்டு வளையத்தின் ஓரமாக பாறையின் பக்கம் தம்மையே இழுத்துக் கொண்டு போய், முதுகை பாறையில் சாய்க்கிறார். கைகள் உடல் வாக்கில் தொங்குகின்றன. தலை மார்பில் சாய்ந்திருக்க, அவர் செத்தவர் போலாகிறார். எந்த அசைவும் இல்லை.

சம்மனசின் ஒளி மெல்லக் குறைந்து, பின் தெளிந்த நிலா வெளிச்சத்தில் கரைந்து மறைகிறது. சேசு தம் கண்களைத் திறக்கிறார். தம் சிரசை சிரமத்துடன் தூக்கி சுற்றிலும் பார்க்கிறார். அவர் தனியே இருக்கிறார். அவருடைய அவஸ்தை குறைந்துள்ளது. ஒரு கையை நீட்டி தரையில் புல்லில் போட்ட மேல் வஸ்திரத்தை இழுத்தெடுத்து, முகத்தையும், கரங்களையும், கழுத்தையும், தாடி தலை முடியையும் துடைக்கிறார். மண் மேட்டு வளைவின் ஓரத்தில் வளர்ந்து பனி நீரால் நனைந்திருந்த பெரிய இலை ஒன்றை எடுத்து தம்மைச் சுத்தம் செய்கிறார். முகத்தையும் கரங்களையும் அதைக் கொண்டு ஈரப்படுத்தி, மீண்டும் தம்மைத் துடைக்கிறார். இப்படியே வேறு இலைகளையும் பறித்து பல தடவைகள் துடைத்து, அந்த பயங்கர இரத்த வியர்வை யின் அடையாளங்கள் இல்லாதபடி செய்கிறார். அவருடைய அங்கியின் தோள்பாகம், முழங்கை மடிப்புகள், கழுத்து, இடுப்பு, முழங்கால்கள் ஆகிய இடங்களில் இரத்தக் கறை உள்ளது. அதை அவர் பார்த்து தலையை அசைக்கிறார். தம் மேல் வஸ்திரத்தையும் பார்க்கிறார். அது மிக அதிகமாய் நனைந்துள்ளது. அவர் அதை மடித்து, அந்தச் சிறு பூக்களின் அருகில், ஒரு தொட்டில் போல் பாறை குழிந் துள்ள இடத்தில் வைக்கிறார்.

பலவீனத்தினால் மிக கஷ்டத்துடனே சுற்றித் திரும்பி முழங்காலிடு கிறார். கைகளையும், தலையையும் அந்த மேல் வஸ்திரத்தின் மேல் வைத்தபடி ஜெபிக்கிறார். பின் பாறையில் ஊன்றிக் கொண்டு எழுந்து நிற்கிறார். இன்னும் சற்றுத் தள்ளாடிக்கொண்டே சீடர்களிடம் போகிறார். அவர் முகம் மிகவும் வெளிறியிருக்கிறது. ஆனால் அதில் கலக்கமில்லை. அது மரண வெளிறுதலுடனும், வழக்கத்திற்கு அதிக மான துயரத்துடன் இருந்தாலும், தெய்வீக அழகு நிரம்பியிருக்கிறது.