ஜெபம், ஜெபமாலை!

தப்பறையின் சம்மட்டியாக அர்ச். சாமிநாதருக்கு ஜெபமாலையைத் தந்த தேவமாதா, இந்த இறுதிக்காலத்தில் நவீனவாதத் தப்பறைக்கு எதிரான சம்மட்டியாக மட்டுமின்றி, மோட்சத்திற்கான வழியாகவும் பாத்திமாவில் அதை நமக்குத் தருகிறார்கள். “பிரான்சிஸம் மோட்சம் செல்வான், ஆனால் அதற்கு முன் அவன் பல ஜெபமாலைகள் சொல்ல வேண்டும்;" "அவனை ஜெபமாலை சொல்லச் சொல்; அப்போது அவன் என்னைக் காண்பான்' என்ற தேவ அன்னையின் வார்த்தைகள் இதை எண்பிக்கின்றன.

ஜெபமாலையால் தீர்க்கப்படாத பிரச்சினை எதுவும் உலகில் இல்லை என்று பாத்திமாவின் சகோதரி லூஸியா கூறுகிறாள். தொடர்ந்து இரு நாட்கள் ஜெபமாலையைக் கைவிடும் ஆன்மா தன் உள்ளத்தில் ஓர் இருளை உணர்கிறது, படிப்படியாக, அந்த இருளுக்குள் அமிழ்ந்திப் போகிறது என்பது உண்மையிலும் உண்மை. எனவே தினமும் 53 மணி ஜெபமாலையாவது தனியாகவோ குடும்பத்துடனோ தவறாமல் ஜெபியுங்கள்.

ஜெபம் ஆத்துமத்தைப் போஷிக்கிறது; கடவுளின் பாதுகாவலைப் பெற்றுத் தருகிறது; சாத்தானின் கண்ணிகளை அறுத்தெறிகிறது; ஆத்தும புண்ணியத்தில் வளரச் செய்கிறது ; பரலோகப் பாதையில் எப்போதும் அதை வைத்துப் பாதுகாக்கிறது. ஜெபம் இல்லாமல் புண்ணிய வாழ்வுக்கு இடமேயில்லை. ஆத்துமம் சோதனைக்கு உட்படாதிருக்கவும், தேவ இஷ்டப்பிரசாதமாகிய தேவ உயிரைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் வாய்ப்பேயில்லை.

அதே சமயம் ஜெபம் இருதயத்திலிருந்து புறப்படுவதும் அவசியமானது. எந்த தியானமு மின்றி, சொல்லும் வார்த்தைகளின் பொருளை சிந்திக்காமல், வெறுமனே உதட்டளவில் ஜெபங்களை மனப்பாடமாகச் சொல்வதால் என்ன பயன்?

வானொலியும் கூட ஆன் செய்ததிலிருந்து பாடிக் கொண்டிருக்கிறது. அதனால் அதற்கு என்ன பயன்? பொருளை உணராமல், பராக்குடன் 153 மணி ஜெபமாலை ஜெபிப்பதை விட, உண்மையான பக்தியோடும், ஆழ்ந்த தியானத்தோடும், கவனத் தோடும் ஒரே ஒரு பத்து மணி சொல்வது எவ்வளவோ மேலானது! இதே முறையில் 153 ஜெபமாலை சொல்ல உங்களால் முடியும் என்றால் நீங்கள் பேறு பெற்றவர்கள்! அதே சமயத்தில் முடியாத எதையும் சேசுவும் மாதாவும் நம்மிடம் கேட்பதுமில்லை. ஜெபம் என்பது தந்தையோடும், தாயோடும் மகன் செய்யும் நேசமிக்க உரையாடலும், நேசப்பரிமாற்றமுமாக இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை தர விரும்புகிறோம். நீ தனி ஜெபம் செய்ய விரும்பினால், 'உன் அறைக்குள் பிரவேசித்துக் கதவைச் சாத்தி அந்தரங்கத்தில் உன் பிதாவைப் பிரார்த் தித்துக் கொள்" என்று திவ்ய கர்த்தர் உனக்கு அறிவுறுத்துகிறார். இதில் நீ உன் பரலோகத் தந்தையோடு உரையாடுகிறாய், அவரோடு உன் நேசத்தைப் பகிர்ந்து கொள்கிறாய். இதில் உனக்குக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஒரு குழந்தையைப் போல உன் விருப்பப்படி வார்த்தைகளை நீ பயன்படுத்தலாம்.

ஆனால் அருங்கொடைக் கூட்டங்களில் நடப்பது போல், பொது ஜெபத்தில் பிறர் கேட்கும்படி, தனி ஜெபம் எதுவும் செய்யலாகாது. திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஜெபப் புத்தகங்களில் உள்ள ஜெபங்கள் மட்டுமே ஜெபக் கூட்டங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். தனி ஜெபம் பொது ஜெபங்களில் கூடாதென்று திருச்சபை விலக்குகிறது. 

இப்பதித வழக்கம் பிரிவினை சபைகளிலிருந்து வந்தது. உன் வார்த்தைகளில் தப்பறை நுழைந்து விடலாம் என்பதும், உன் பேச்சுத் திறமை உன்னில் ஆங்காரத்தையும், தற்பெருமையையும் உண்டாக்கி விடக்கூடும் என்பதுமே இந்த எச்சரிப்பிற்கான காரணங்கள். இன்று திருச்சபையின் மக்களிடையேயும், குருநிலையினரிடையிலும் கூட பரவி விட்ட தவறான வழக்கம் இது. இதை விலக்குவது நம் கடமையாகும். பல சமயங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும் என்றாலும், இதிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு இதை ஏற்றுக்கொள்வதே நீதியானது.