புனித ஜெர்த்ரூத்தம்மாள் வாழ்க்கைப்பாதையில் 9 :

ஜெர்த்ரூத்தின் அர்ச்சிப்பில் தேவதாயின் பங்கு தொடர்ச்சி..

ஒருமுறை ஆண்டவரிடம் ஜெர்த்ரூத் “ என் சகோதரரே, மனிதன் பட்ட கடனை அடைப்பதற்காக மனிதனான என் சகோதரரே, உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். நான் உமது தாயாருடைய பணிகளில் காட்டிய குறைபாடுகளை சரிசெய்யவேண்டுமென்று மன்றாடுகிறேன் “ என்றாள். சேசு உடனே எழுந்து தனது தாயை அனுகி அவர் முன் முழந்தாழ்படியிட்டு ஒப்பிடமுடியாத அன்புடன், மரியாதையுடன் தனது தலையைத் தாழ்த்தி தனது மரியாதையை ஜெர்த்ரூத் சார்பாக செலுத்தினார். இவ்வாறு ஜெர்த்ரூத்தின் மன்றாட்டுக்கு இரங்கி ஆண்டவர் தேவதாயின் மீது பக்திபற்றுதல்களை அவளது உள்ளத்தில் வளர்த்தார்.

ஜெர்த்ரூத்தும் தேவதாயின் மீது மனிதன் காட்டும் வணக்கமும் மரியாதையும் எவ்வளவு குறைவு என்பதனையும் ஆண்டவரின் திருஇருதயம் மட்டுமே அந்தக் குறையை நிறைவு செய்யும் எனபதனையும் கண்டுபிடித்தாள். கடவுளின் திருக்குமாரன் தேவதாய் முன் மண்டியிடுவார் என்றால் அந்த தாய்க்கு மனிதனால் எவ்வாறு போதிய அளவு வணக்கம் செலுத்த முடியும் ! இறுதியாக “ சேசுநாதர் மாமரிக்கு கீழ்ப்படிந்திருந்தார்” என்ற வேதாகம வரிகளின் காணமுடியாத ஆழத்தை அவள் ஓரளவு கண்டுபிடித்தாள். அதன்பின்பு தேவதாயை அவள் சேசுவின் திருஇருதயத்தின் அரசி என்று அழைத்தாள்.

ஒருநாள் ஜெர்த்ரூத் தேவதாயின் சுரூபத்திற்கு முன் செபித்துக்கொண்டிருந்தாள். அப்போது பரிசுத்த தமத்திரித்துவத்திற்குமுன் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு லீலி மலராக மாமரி காணப்பட்டார்கள். அந்த லீலி மலருக்கு மூன்று இதழ்கள் இருந்தன. அதில் ஒரு இதழ் பிதாவின் வல்லமையையும், இன்னொரு இதழ் சுதனின் ஞானத்தையும் மற்றொரு இதழ் இஸ்பிரித்து சாந்துவின் தயாளத்தையும் காட்டியது. தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களும் தேவதாயுடன் எந்த அளவுக்கு உறவு கொண்டுருந்தார்கள் என்றால் அவரில் அவர்களுடைய மூச்சு உயிருள்ள வகையில் பிரதிபலித்தது. தேவதாய் ஜெர்த்ரூத்திடம், “ யாராவது என்னை தமதிருத்துவத்தின் லீலி என்று வணங்கினால் பிதாவின் வல்லமையும், சுதனின் ஞானமும், இஸ்பிரித்துசாந்துவின் தயாளமும் என் உள்ளத்தில் நிரம்பி வழியும். அந்த ஆன்மா எப்போது அதன் உடலிருந்து பிரிகிறதோ அப்போது நான் அந்த ஆன்மாவின் முன் என் விண்ணக அழகோடு தோன்றுவேன். அது அந்த ஆன்மாவுக்கு விண்ணகத்தின் முன்சுவையாக இருக்கும்.

அன்றிலிருந்து ஜெர்த்ரூத் தேவதாயின் சுரூபத்தின் மூன் கீழ்கண்ட ஜெபத்தை ஜெபிக்கலானாள்.

“ நித்திய மகிமையுடைய தமதிருத்துவத்தின் லீலி மலரே, விண்ணகத்தின் ரோஜாவே, உம்மை வணங்குகிறேன். உம்மிடமிருந்துதானே விண்ணக அரசர் தோன்றினார். உமது மார்பில்தானே அவர் அமுது உண்டார். அதே அமுதத்தால் எங்கள் ஆன்மாக்களையும் போஷித்தருளும். உமது தெய்வீக வரங்களால் உம்மை வாழ்த்துகிறேன் “.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !