புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 8 :

பரம பிதாவோடு உரையாடல் தொடர்கிறது..

“ஆண்டவருடைய பரிசுத்ததனம்”

உண்மையில் புனிதைக்கு இப்பரிசுத்ததனத்தை நெருங்குவது முடியாத காரியமாகவே தோன்றியது. பின்பு பிள்ளைக்குரிய நம்பிக்கையெல்லாம் ஒன்று திரட்டி,

“ ஓ நித்திய பிதாவே, என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன். உம்மிடம் நான் கேட்க மாட்டேன். நான் உமது வார்த்தையானவரிடம் செல்வேன். எனக்காக இதனை உம்மிடம் கேட்குமாறு நான் அவரிடம் சொல்வேன். ஏனெனில் நீர் அவரை மிகவும் அதிகமாக நேசிக்கிறீர். அவர் கேட்கும் எதையும் நீர் ஒருபோதும் மறுக்க மாட்டீர். நான் அவரது இரத்தத்தை உம் கண்முன் வைப்பேன் “ என்றாள் புனிதை.

புனிதையின்  இந்த நம்பிக்கையில் பரம பிதா மகிழ்ந்தார்.

“ எனது  இந்த பரிசுத்ததனத்தை நீ விரும்பினால், இப்பூவுலகிலோ, விண்ணுலகிலோ உள்ள எதன் மீதும் நீ பற்றுதல் வைக்ககலாகாது. எந்த படைப்பின் மீதும் பற்றுதல் வைக்கலாகாது. எனது தெய்வீகம் தவிர பிற அனைத்து ஆசைப் பற்றுதல்களையும் நீ தூக்கி எரிய வேண்டும். ஏனெனில் அது பரிசுத்ததனத்தை அடைவதை தடுத்துவிடும் “ என்று புனிதையிடம் பிதா கூறினார்.

புனிதை மறுமொழியாக,

“ அப்படியானால் பரம பிதாவே, இந்த பரிசுத்ததனத்தை தேவரீர்தாமே வைத்துக்கொள்ளும். ஏனெனில், நீர் ஒருவரே அதைக் காப்பாற்ற முடியும். என்னிடம் தந்தால் ஒருவேளை நான் அதனை கறைப்படுத்தி விடுவேன்.  நான் சாகும்போது அதனைத் தாரும் “ என்றாள்.

அதற்குப் பிதாவானவர், “ மகளே, என் வார்த்தையானவரின் பத்தினியே, உனது மரண வேளையில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் உனக்கு அதனைத் தர விரும்புகிறேன். ஆனால் அதற்கு உன்னைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் “ என்றார்.

இந்தப் பரிசுத்ததனத்தை அடையும் வழிகளை ஆண்டவர் கூறுகிறார் :

ஓரு ஆன்மா தனது விருப்பம், சுய நேசம் இவற்றிற்கு மரிக்க வேண்டும். தனக்கென்று விருப்பு, வெறுப்பு, சுய மனது போன்றவற்றை வைத்திருத்தல் ஆகாது. மாறாக அதன் கவனம், அன்பு, ஆசை, புத்தி, நினைவு ஆகிய அனைத்தும் என்னை நோக்கியே இருக்க வேண்டும். 

இரண்டாவது, ஆன்மா தனது நினைவு, பாசம், ஆசை அனைத்தையும் எப்போதுமே பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து எண்ணங்களும், ஆசைகளும் எப்போதும் என்னை நோக்கியே இருக்க வேண்டும். இவற்றை மாசு படுத்தும் எந்தக் காரியத்தையும் மனதிலும், இருதயத்திலும் நுழைய அனுமதிக்கலாகாது.

மூன்றாவது சரீர சுத்தமும், தூய்மையும் அவசியம். அதாவது, பரிசுத்த கன்னிமையை மிகப் பெரிய திரவியமாக மதித்துப் போற்றிப் பேணிப் பாதுகாத்து வரவேண்டும். இந்தப் பரிசுத்த கன்னிமை வழியாக நீயும் பிற துறவிகளும் எனது பரிசுத்ததனத்தில் பங்கு பெற் முடியும். ஆனால், அதே வேளையில் உங்களை நான் படைத்த போது உங்களுக்கு நான் தந்த மாசற்றத்தனத்தை மீண்டும் பெற முயற்சிக்க வேண்டும்.

நான்காவது, பரிசுத்த தாழ்ச்சி. இந்த மிகப்பெரிய புண்ணியம் இல்லாத ஆன்மாவில் வேறு எந்தப் புண்ணியங்கள் இருந்தாலும் அந்த ஆன்மாவால் என்னை மகிழ்விக்க முடியாது. பரிசுத்ததனம் தாழ்ச்சியின் தாய். தாழ்ச்சி பரிசுத்ததனத்தின் தாய். தாழ்ச்சி என்ற புண்ணியம் எனது கண்களுக்குமுன் மதிப்பு மிக்கது. அது பயன் உள்ள புண்ணியம். வல்லமையுள்ள புண்ணியம். ஓர் ஆன்மா, ஒரு வேளை தனது கன்னிமையை இழந்திருந்தால்கூட, அந்த ஆன்மா தாழ்ச்சியோடு இருந்தால் பரிசுத்ததனம் என்ற புண்ணியத்தை அடைய முடியும்.

ஆண்டவர் அவரது உறுதி மொழியை நிறைவு செய்தார். அவரது பரிசுத்ததனத்தை புனிதைக்கு அளித்தார். அப்போது புனிதையே வியந்து கூறினாள்:

“ ஓ எல்லையற்ற பரிசுத்ததனமே, என்மீது உம்மையே பொழிந்தருளும். கூடுமானால் என்னோடு பிறரும் இந்தப் பரிசுத்ததனத்தில் பங்கேற்கச் செய்யும். அவ்வாறாயின் நான் இன்னும் மகிமையடையேன்.”

ஆண்டுகள் பல கடந்த பின்பு அவளது மரணத்திற்கு முன்பு தன்னுடன் இருந்த ஒரு சகோதரி ஒருவரிடம், “ என்னை இன்னும் ஒருமுறை வாழ்ந்திட ஆண்டவர் அனுமதிப்பாராயின், இதுவரை எப்படி வாழ்ந்தேனோ அப்படியே வாழ்வேன். ஏனெனில், எனது வாழ்வில் ஆண்டவரின் மகிமையைத் தேடாத எந்த ஒரு செயலையும், அது சிறியதோ அல்லது பெரியதோ நான் செய்யவே இல்லை” என்றாள்.

உண்மையில் புனிதை இவ்வுலகில் வாழ்ந்தாள். ஆனால் அவளது கண்கள் ஆண்டவரின் பரிசுத்ததனத்தை நோக்கியே நிலை கொண்டிருந்தன.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479, சகோ. ஜேசுராஜ் 9894398144.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !