புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 3 :

உத்தரிக்கிற ஸ்தலத்தைப் புனிதைக்குக் காண்பிக்க ஆண்டவர் சித்தமானார். உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்த புனிதை நடுங்கிப்போனாள். அவள் பார்த்த காட்சிகளை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. நெருப்பும் உண்டு. உறைய வைக்கும் குளிரும் உண்டு. திரவ வடிவில் கரி, பயங்கர நாற்றமுள்ள புகை, பழுக்க காய்ச்சிய இரும்பு, விஷ வண்டுகள் என தண்டனைக்குரிய பயங்கரமான இடம். 

ஆனால் அங்கே ஆச்சரியத்திற்குறிய அமைதியும் உண்டு. “ ஐயோ ஆன்மாக்களே ஏராளமான வேதனைகளை அனுபவிக்கிறீர்கள். ஆனால் அடிபணிந்து அமைதியாக இருக்கிறீர்கள். இதுதான் கடவுளின் திருவுளம் என்று அறிந்துள்ள நீங்கள் அவர் சித்தத்திற்கு உங்களை முழுமையாக உட்படுத்திக்கொள்கிறீர்கள். விரைவில் நீங்கள் ஆண்டவரைக் காணும் காணும் பாக்கியம் பெறுவீர்கள்” என்று புனிதை பரிதாபத்தோடு உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களிடம் கூறினாள்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் புனிதை கண்ட உண்மை என்னவெனில் “ அங்குள்ள ஆன்மாக்களுக்கு பெருந்துணையாக இருப்பது, அவர்களது காவல் சம்மனசுக்களே, யார் யார் தங்களது காவல் சம்மனசை அதிகமாக நேசித்து அவருக்கு கீழ்ப்படிந்து வந்தார்களோ, அவர்கள் அந்த சம்மனசுக்களால் அதிகமான ஆறுதல் அடைகிறார்கள். அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படும் தேவ நற்கருணையே அவர்களுக்கு அதிகமான ஆறுதலைத் தருகிறது. மிகவும் அதிகமாக அவர்களுக்கு உதவுவது ஆண்டவருடைய திருஇரத்தத்தை அவர்களுக்காக ஒப்புக்கொடுப்பதேயாகும்.

இவ்வுலகில் வாழ்ந்தபோது, ஆண்டவரின் திருஇரத்தத்தை ஓயாது பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் வழக்கமுள்ள ஆன்மாக்கள் அங்கு அதிகமான ஆறுதல் பெறுவார்கள்” என்பதாகும். உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பார்க்கவும், அங்குள்ள சில ஆன்மாக்களை அடையாளம் காணவும் பல வாய்ப்புகள் புனிதைக்கு அளிக்கப்பட்டன.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதாப்பட்டணம், தூத்துக்குடி

உத்தரிக்கிற ஸ்தலத்தைக் குறித்து பயப்படத்தேவையில்லை.. அங்கு தேவ ஆறுதல் உண்டு.. அங்கு இருக்கும் ஆன்மாக்களும் புனிதர்களே.. இந்த உலகத்தில் வாழும்போது பாவசங்கீர்த்தணம் மட்டும் செய்து பரிகாரம் செய்யாததால் அங்கு இருக்கிறார்கள். நம் ஜெப தவ திருப்பலி ஒப்புக்கொடுத்தலால் நாம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முடியும். நமக்கு பரிகாரம் செய்ய எத்தனையோ வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறது.. இதோ இந்த வீட்டுச்சிறையையும் நம் பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்கலாம்.. வெயில், மழை, கால்வலி, தலைவலி, உடல்வலி, வேதனை, துன்பம், பேருந்து பயண, இரயில் பயண அசவுகரீகங்கள், வீட்டில் இருக்கும் போது கரண்ட் கட் அசவுகரீகங்கள், சமையல், வேலை, படிப்பு அத்தனையையும் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுக்கலாம்…

நாம் இந்த உலகத்தில் இருக்கும்போதே அடிக்கடி பாவசங்கீர்த்தணம் செய்து இவ்வுலக துன்பங்களை முனுமுனுக்காமல் நம் பாவ பரிகாரமாக ஒப்புக்கொடுத்துவிட்டால் நாம் நேரடியாக மோட்சம் சேர முடியும்.. அப்படியே அங்குள்ள ஆன்மாக்களுக்கும் நாம் உதவி செய்தால் ( நம் துன்பங்களை ஒப்புக்கொடுத்தல், ஜெபமாலையில் பத்து மணிகளாவது ஒப்புக்கொடுத்தல், பங்கேற்கும் திருப்பலிகளில் ஒப்புக்கொடுத்தல்) நம்மால் மோட்சம் சேரும் ஆன்மாக்கள் நமக்கு உதவி செய்வார்கள்..

"ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.” லூக்காஸ் 16: 9

ஆனால் நாம் பயப்படக்கூடிய இடம் ஒன்று இருக்கிறது.. அதுதான் நரகம்.. அதுவும் முடிவில்லா நரகம்.. நரகம் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்க்க ஒரு சிம்பிள் ஐடியா.. “ அங்கே கடவுள் இருக்க மாட்டார் “ அங்கு இருக்கும் நெருப்பை விட, பிசாசுக்களை விட அங்கு கடவுள் இல்லாததே மிகப்பெரிய வேதனையாயிருக்கும்.. ஆறுதல் என்பது மருந்துக்கும் கிடையாது..

அதனால் நாம் சிறுவயதில் இருக்கும்போது பெரியவர்கள் சொல்லுவார்கள்.. “ டேய் அதைச் செய்யாதே.. இதைச் செய்யாதே.. ஆண்டவர் நரகத்தில் அதுவும் கொதிக்கிற எண்ணெய்சட்டியில் தூக்கிப் போட்டுவிடுவார் என்று..

கத்தோலிக்க திருச்சபையில் பிறந்ததில் இருந்து இறக்கும் வரைக்கும் நாம் நரகத்தில் இருந்து தப்பிக்க பலவழிகள், திருவருட்சாதனங்கள், வரப்பிரசாதங்கள் இருக்கிறது ( முக்கியமாக பாவசங்கீர்த்தனம்).. 

நரகத்தில் இருந்து தப்பிக்க பாவசங்கீர்த்தனம், ஜெபமாலை, உத்தரியம் போன்ற எளிதான வழிகள் இருக்கிறது..

நாம கொளுத்துப்போயி அவன் பேச்சைக் கேட்டு, இவன் பேச்சைக் நரகத்திற்கு போனா.. கடவுள் என்ன செய்வார்? திருச்சபை என்ன செய்யும்?

குறிப்பு : ஆண்டவர் பாவசங்கீர்த்தனத்தை ஏற்படுத்திய பின்பு பழைய ஏற்பாடுபடி நாங்க நேரடியா பாவசங்கீர்த்தனம் பன்னிக்கிலாம்னு யாராவது ஏமாத்தினா மாட்டிக்காதீங்க.. ஆண்டவர் அந்த அதிகாரத்தை கத்தோலிக்க குருவுக்குத்தான் கொடுத்திருக்கிறார்.. அதை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை.. உங்களுக்கு புடிச்ச பாதர்கிட்டயோ.. இல்லை பஸ் புடிச்சு வெளியூர் போயி அந்த பாதர் கிட்டயோ.. இல்ல வயசான பாதர்கிட்டயோ.. முழுமையான மனஸ்தாப உள்ளத்தோடு பாவசங்கீர்த்தனம் பன்னி  நரகத்துல இருந்து தப்பிச்சுக்குவோம் ( இப்ப இல்ல.. வாய்ப்பு கிடைக்கும்போதோ… அதை உருவாக்கியோ..)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !