புனித ஜெர்த்ரூத்தம்மாள் வாழ்க்கைப்பாதையில் 2 :

ஏற்கனவே புனிதையின் பெயரில் இரண்டு ஜெர்த்ரூத் இருந்ததால் நமது புனிதை ஜெத்ரூத்தை பெரிய ஜெர்த்ரூத் என்பார்கள். அவர்கள் இருவரையும் விட பெரிய ஜெர்த்ரூத்தான் அதிக பிரபலமானவர்.

இவளது எழுத்துக்களிலிருந்து புனித பெர்நார்து, புனித சாமிநாதர், புனித பிரான்சிஸ் ஆகியோர் மீது இவள் மிகுந்த பக்தி கொண்டிருந்ததாகத் தெரிகிறது. புனித மெக்டில்டா இவளது சகோதரியும், தோழியும், ஆலோசகருமாவார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டு திருச்சபைக்கு மிக முக்கியமான நூற்றாண்டு ஆகும். ஏனெனில் அர்ச். சாமிநாதர் சபையும், அர்ச். பிரான்சிஸ்கன் சபையும் உலகெங்கும் பரவி எண்ணற்ற அர்ச்சிஷ்ட்டவர்களையும், வேதசாட்சிகளையும் உருவாக்கியது இந்நூற்றாண்டில்தான்.  ஹங்கேரி நாட்டு அர்ச். எலிசபெத் தனது அரண்மனையையும் தனது நாட்டையும் புனிதமாக்கியதும் இந்நூற்றாண்டில்தான்.

புனித தாமஸ் அக்வினாசும், புனித பொனவந்தூரும் திருச்சபையின் ஞான திரவியங்களாக இந்நூற்றாண்டில் ஆயினர். புனித லூயிஸ் சேசு நாதரின் அன்புக்கு பலியானார். இந்நூண்டின் பிற்பகுதியில்தான் நமது புனிதை ஜெர்த்ரூத்தம்மாள் தோன்றினார்.

புனித ஆசீர்வாதப்பர் மடம் ஒன்றில் தலைமைச் சகோதரியாக விளங்கிய இப்புனிதை மான்ஸ்பீல்ட் என்ற குறுநிலத்தின் தலைநகரான எடிஸ்பன் என்ற சிற்றூரில் 1222-ம் ஆண்டு ஜனவரி 6-ம் நாள் பிறந்தார். மூன்று அரசர்களை பெத்லகேமுக்கு வழிநடத்திய விண்மீன் போல , ஜெர்த்ரூத்தும் துறவற வாழ்வுக்கு ஒரு விண்மீன் போல இருப்பாள் என்பதால், இவள் மூன்று அரசர்கள் திருநாளில் பிறந்தாள் போலும்.

இவளுக்கு ஐந்து வயது நிரம்பியதும் ரோடர்ஸ்டார்ப் என்ற ஊரிலிருந்த புகழ்பெற்ற  ஆசீர்வாதப்பர் மடத்தில் சேர்க்கப்பட்டாள். இவள் மடத்தில் சேர்ந்த சில நாட்களில் இவளது தங்கை மெக்டில்டாவும் இம்மடத்தில் சேர்ந்தாள்.

அர்ச். ஆசீர்வாதப்பர் தனது சபைக்காக எழுதியுள்ள ஒழுங்கில் பத்தி 59-ல் சிறு குழந்தைகளை அவரது மடத்தில் சேர்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். அதன்படி பக்தியுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆசீர்வாதப்பர் சபை மடத்தில் சேர்க்க முன்வரும்போது அந்தக் குழந்தைகளை மடத்தில் ஏற்றுக்கொள்வது பற்றி அவர் விளக்கியுள்ளார். இது நீண்ட காலம் அச்சபையில் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் பாப்பரசர் மூன்றாம் கிளமென்ட் அந்த வழக்கத்தை நிறுத்தும்படி ஆணையிட்டார். பின்பு திரிதெந்தின் பொதுச்சங்கமும் குழந்தைகளை மடத்தில் சேர்த்துக்கொள்வதை தடை செய்தது.

மடத்திலிருந்த கன்னியர் புனிதையை ஞானத்திலும் அறிவிலும் வளர்த்தனர். ஆன்ம கல்வியுடன் உலகக் கல்வியையும் கன்னியர் இவளுக்கு புகட்டினர். கையால் எழுதிய புத்தகங்களாலும், வாய்மொழியாகவும் மட்டுமே கல்வி பெற முடிந்த அக்காலத்தில் ஜெர்த்ரூத் நன்றாகக் கற்றுத் தேர்ந்தாள் என்பது அற்புதமே. அக்காலத்தில் பரிசுத்த வேதாகமும், திருச்சபையின் தந்தையரின் எழுத்துக்களும் மட்டுமே உண்டு. அவற்றை ஜெர்த்ரூத் நன்கு படித்தாள். அவை அவளின் அறிவுப்பசிக்கும் ஆன்ம முன்னேற்றத்திற்கும் போதாதது போல் காணப்பட்டன. ஆனால் இக்குறைகள் அவள் ஆண்டவர் மேல் கொண்ட எல்லையற்ற  அன்பினாலும் ஆண்டவர் அவளுக்கு அளித்த எல்லையற்ற   ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்டன.

அவளது புண்ணியத்தில் மிகச் சிறந்தது அவளது மாசற்றதனம் ஆகும். இருப்பினும் அவளது விவேகம், பக்தி மற்றும் திறந்த மனது ஆகியவை மடத்திலிருந்த அனைவரையும் ஈர்த்தன. இத்துடன் அவளுக்கிருந்த அரிய புத்திக்கூர்மை அவள் வயதுக்கொத்த பிள்ளைகளைவிட அவளை உயர்த்தியது. மிகக் குறந்த வயதிலேயே இலத்தீன் மொழியைப் சரளமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டாள். அதுமட்டுமல்லாது இலக்கியத்தின் மட்டில் அவள் திகட்டா அன்பு கொண்டாள். அவளது இருதய தூய்மையின் காரணமாக அனைத்தையும் உண்மையாக உள்ளது உள்ளபடியே காணப் பழகினாள். ஆண்டவர் அவளுக்கு அளித்த புத்திக்கூர்மையை தனது ஆன்ம வளர்ச்சிக்கு பயன்படுத்தினாள்.

ஜெர்த்ரூத் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தை அடைந்தாள். ஆண்டவர் அவளை மிகக் கவனமாக பாவத்தின் நிழல்கூட தாக்காதவாறு பாதுகாத்தார். அவரது அன்பு அவளைச் சூழ்ந்துகொண்டது. அர்ச்.ஜெர்த்ரூத்திற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். அவரது திருநாமம் என்றென்றும் போற்றப்பெறுவதாக !.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !