அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-1

வீரமிக்க விசுவாச வாழ்வு

சேசு : நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?

அர்ச்.சந்தியாகப்பர் & அர்ச்.அருளப்பர் :  “முடியும்”

(மத்தேயு : 20: 22)

அர்ச்.சந்தியாகப்பருக்கு ஆண்டவர் சேசு கேட்ட கேள்வியின் பொருளும் அதற்கு அவர் சகோதரரோடு சேர்ந்து அளித்த பதிலின் பொருளும்ஆரம்பத்தில் விளங்கவில்லை. அதன் பொருள் விளங்காமலே பதில் சொல்லிவிட்டனர். ஆனால் ஆண்டவர் சேசுவின் கொடூர சிலுவை மரணமும் அதற்குப் பின் அவர் உயிர்த்த பின்பும் தான் விளங்கியது...” நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிப்பீர்களா “ என்பதன் பொருள். அவர் குடித்த கிண்ணம் துன்பக்கலம். அவர் மனுமக்களுக்காக மரித்தது போல் நானும் அவருக்காக மரிப்பேன். அவர் கிண்ணத்தில் பருகும்வரை எனக்கு தூக்கம் இல்லை. அதே வேளை அவருக்காக மரிக்கும் வரை.. அவரை அறிவிப்பேன். அதற்காக நான் எத்தனை நாடுகள் சென்றாலும் பரவாயில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் பரவாயில்லை. என்னுடையை இலக்கு ஒன்றே ஒன்றுதான் ஒரே ஒருவர்தான் அவர்தான் சேசு ! சேசு..சேசு..

சுறு சுறுப்பானார் நமது புனிதர்...

அர்ச்.சந்தியாகப்பர் ஜெருசலேம், யூதேயா, கலிலேயா, சமாரியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் வரை சென்று போதித்தார்.. கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தண்ணீர்க் குடுவையை மாட்டிக்கொண்டு ஓய்வில்லாமல்..கால் கடுக்க ஒரு பரதேசி போல் சேசுவுக்காக அலைந்து திரிந்தார்.. வீர விசுவாசத்தோடுபோதித்தார். ஒருவித ஆற்றலோடு காணப்பட்டார். ஆற்றலோடு ஜெபித்தார். எப்போதும் ஆண்டவராகிய சேசுவை நோக்கி கரங்களை குவித்து ஜெபித்துக்கொண்டே இருந்தார்.ஜெபிக்கும் போது அவர் கண்கள் வானத்தை நோக்கியே இருந்தன. சென்ற இடங்களில் எல்லாம் வல்லமையோடும் ஆர்வத்தோடும் ஆற்றலோடும் போதித்தார்..அற்புதங்கள் பல செய்தார்..தனிமையான பயணத்தின் போதும்.. சேசுநாதரை பற்றி போதிக்கும் பல வேளைகளில் அவரோடு சம்மனசுக்கள் காணப்பட்டார்கள்.  நூறு சம்மனசுக்கள் இவரை சூழ்ந்து வர இத்தாலி தேசத்தில் சேசு சுவாமியை அறிவித்தார். எப்போதும் சேசுவுக்காக வேதசாட்சியாக மரிக்க காத்துக்கொண்டிருந்தார்.

அர்ச்.சந்தியாகப்பர் சேசுவின் கிண்ணத்தில் பருக வேண்டும் என்ற ஆவலோடும் ஆசையோடும் இருந்தார்.

அவர் எங்கு சென்றாலும் முதலில் சொல்லும் வார்த்தை “ உங்களுக்கு சமாதானம் உண்டாகுக “ என்பதுதான்.

விவிலியத்தில் அதிகம் பேசாத  அர்ச்.சந்தியாகப்பர் பேசிய ஒன்றிரண்டு இடங்களும் உணர்ச்சி பூர்வமானதும், உணர்வுப் பூர்வமானதும் தான். அதில் என்னைக் கவர்ந்தது மேலே கூறிய சேசுவின் கேள்வியும் அதற்கு அவர் தன் சகோதரனோடு அளித்த பதிலும்தான்.

வீரம், துணிச்சல், கம்பீரம், தூய்மை, அர்ப்பணம், ஆழமான அன்பு, பாசம் மற்றும் கோபம் இவைகள் அனைத்தும் கலந்த கலவைதான் அர்ச்.சந்தியாகப்பர்...

ஜெபம் :  அர்ச்.சந்தியாகப்பரே ! ஒரு காலத்தில் சேசு உம்மைக் கண்டு அழைத்தார் அப்போஸ்தலராக. அவர் அழைத்தவுடன் உம் சகோதரனோடு, தந்தையின் வலைகளை விட்டுவிட்டு அவரை பின் சென்று சேசுவிடம் ஒரு முக்கிய இடத்தை பெற்றுக்கொண்டீர். சேசு சுவாமி மோட்சம் சென்றபின் அவரை கண்டு கொண்டு அவருக்காக எல்லாவற்றையும் துறந்து பசி தூக்கம் பாராமல் சர்வேசுரனுக்காக உழைத்தீர். “ அவரைத் தவிர வேறு தெய்வமில்லை “ என்று எங்கும் நற்செய்தி அறிவித்தீர்.

நாங்களும் புனிதர் உம்மைப்போல சேசுவை கண்டுகொள்ளவும் சேசுவின் கிண்ணத்தில் குடிக்கவும் ஆர்வமாகவும் தயாராகவும் இருக்கிறோம் அதற்கான வலிமையை உம் ஆண்டவர் சேசுவிடம் கேட்கிறோம்.

கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..