புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நரகம் தவிர்க்க.. பதிவு -11 : இறுதிப்பகுதி

ஓர் ஆன்மா நரகத்திற்கு தீர்வையிடப்படும் காட்சி : ( நம் ஆண்டவர் அர்ச். ப்ரிட்ஜித்தம்மாளுக்கு வெளிப்படுத்தியது)

சர்வேசுவரன் பேசுகிறார் : “ நான் நீதியாசனத்தில் அமர்ந்திருக்க, ஒரு மனிதன் தீர்ப்பிற்காக என் முன் வந்தான். பிதாவின் குரல் முழங்கியது, அவர் அவனிடம், “ நீ பிறவாதிருந்தால் நலமாயிருக்கும்? “ என்றார்.

அவனைப் படைத்தது பற்றி மனம் வருந்தினார் என்பது இதன் பொருளல்ல. மாறாக, அவன் மீது பரிதாபப்பட்டே இவ்வார்த்தைகளைக் கூறினார். இதற்குப் பதில் சொல்லும் விதமாக தேவ சுதனின் குரல் ஒலித்தது:

“ நான் உனக்காக என் இரத்தத்தை சிந்தினேன்; ஒரு கடுமையான தண்டனையை உனக்காக நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் என் இரத்தத்திடமிருந்து நீ உன்னை ஒட்டுமொத்தமாக அந்நியனாக்கிக் கொண்டாய். அதற்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபடி செய்துவிட்டாய் “

ஆடுத்ததாக இஸ்பிரீத்துசாந்துவானவர் பேசினார் : அவனுடைய இருதயத்தில் கொஞ்சமாவது கனிவோ, ஸ்நேகமோ, பிறர் சிநேகமோ இருக்குமா என்று நான் அந்த இருதயத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப்பார்த்தேன். ஆனால் அவனோ பனிக்கட்டி போலக் குளிர்ச்சியாகவும், கல்லைப்போல  கடினமாகவும் இருக்கிறான். அவனைப் பற்றி எனக்கு இப்போது எந்தக் கவலையுமில்லை!”

“ அங்கே மூன்று கடவுள்கள் இருந்தார்கள் என்பது போல மூன்று குரல்கள் ஒலித்தன. ஆனால் என் மனவாளியான உன் ( அர்ச். பிரிட்ஜத்தம்மாள்) நிமித்தமாகவே எங்கள் குரல்கள் வெளியே கேட்கும் விதமாக ஒலித்தன. ஏனெனில் அப்படியில்லையென்றால், இந்தப் பரம இரகசியத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும்.”

அதன்பின் பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து ஆகிய மூவரின் குரல்களும் உடனடியாக மாற்றப்பட்டு இடியாக முழங்கின. “ எந்த விதத்திலும் நீ பரலோக இராச்சியத்திற்கு தகுதியற்றவன் “ என்ற அதிபயங்கர வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டன.

கிருபைதயாபரத்தின் மாதா மவுனமாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய இரக்கம் இப்போது வெளிப்படாதிருப்பதைக் காண்கிறேன். ஏனெனில் தீர்ப்புக்காகக் காத்திருப்பவன் நேசத்தாயாரின் இரக்கத்திற்கு எந்த விதத்திலும் தகுதியற்றவனாக இருக்கிறான்.

இதோ, சகல அர்ச்சிஷ்ட்டவர்களும் ஒரே குரலாகக் கூக்குரலிட்டு இப்படிச் சொல்கிறார்கள் :

“ உமது இராச்சியத்திலிருந்தும், உமது பேரின்பத்திலிருந்தும் நித்தியத்திற்கும் விலக்கப்படுவது அவனுக்குரிய தேவ நீதியாயிருக்கிறது” என்று ! உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள  ஆன்மாக்கள் அனைவரும் அடுத்ததாக, “ உன் பாவங்களைத் தண்டிக்கப் போதுமான கடுமையுள்ள தண்டனை எதுவும் எங்களிடம் இல்லை. நீ அதிகப் பெரிதான வாதைகளை அனுபவிக்க வேண்டியவனாக இருக்கிறாய். அதன் காரணமாக, நீ எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டவனாக இருப்பாய் “ என்கிறார்கள்.

அதன்பின், இதோ, இறுதியாக, தீர்ப்பிடப்பட வேண்டியவனோ, கடுந்திகிலூட்டும் குரலில் இப்படிச் சொல்லிப்புலம்புகிறான் : “ ஐயோ ! ஐயோ! என் தாயின் உதிரத்தில் நான் உருவான நாள் சபிக்கப்படுவதாக!” அவனே இரண்டாவது முறையாகக் கூக்குரலிட்டு, “ என் ஆன்மா என் சரீரத்தோடு இனைக்கப்பட்ட அந்த கணம் சபிக்கப்படுவதாக ! எனக்கு ஒரு சரீரத்தையும், ஆத்துமத்தையும் தந்தவர் சபிக்கப்படுவாராக! “ என்று அலருகிறான். மீண்டும் மூன்றாம் முறையாக அவன் கூச்சலிட்டு, “ என் தாயின் வயிற்றிலிருந்து நான் உயிருள்ளவனாகப் பிறந்த மணி நேரம் சபிக்கப்படுவதாக! “ என்கிறான்.

இதோ அடுத்ததாக, நரகத்திலிருந்து கடும் அச்சமூட்டும் மூன்று குரல்கள் புறப்பட்டு வருகின்றன. அவை அவனிடம் : “ சபிக்கப்பட்ட ஆன்மாவே, முடிவில்லாத மரணத்தை நோக்கி, உருகிய பித்தளையைப் போல இறங்கி எங்களிடம் வருவாயாக” என்கின்றன. அவை இரண்டாவதாக கூக்குரலிட்டு, “ எங்கள் கெடுமதிக்கு திறப்பாக, முற்றிலும் வெறுமையாக இருக்கிற சபிக்கப்பட்ட ஆத்துமமே! எங்களிடம் வா! இங்கே ( நரகத்தில்) உன்னைத் தன் சொந்த வேதனையாலும், கெட்ட புத்தியாலும் நிரப்பாதவன் ஒருவன் கூட எங்களில் இருக்க மாட்டான்” என்கின்றன.

மூழ்குவதும், தொடர்ந்து அமிழ்ந்து கொண்டே இருப்பதும், ஆனாலும் தான் ஓய்வெடுக்கும்படி அடிப்பகுதியை ஒருபோதும் தொடாததுமான கல்லைப்போல பாரமாயிருக்கிற சபிக்கப்பட்ட ஆத்துமமே, வா! நீ பாதளத்தினுள் எங்களை விட அதிக ஆழத்திற்குள் இறங்குவாய். இப்பாதளத்தின் மிகக் கீழான பகுதியை சென்றடையும்வரை, நீ ஒரே நிலையில் ஒருபோதும் நிற்க மாட்டாய் “ என்கின்றன.

இந்த பயங்கரத்திற்குரிய நிர்ப்பாக்கிய ஆன்மாவின் நிலையில் ஒவ்வொருவனும் தன்னையே அடிக்கடி வைத்து சிந்திப்பதும், இந்த நிலையை அடைவதை எப்பாடுபட்டாவது விலக்க அடிக்கடி பிரதிக்கினை செய்வதும் ஆத்துமத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். உலகில் இருக்கும் வரை, பரலோக இராச்சியத்தை மறந்து, மனிதன் உலகப் பெருமைகளையும், செல்வத்தையும், சுக வாழ்க்கையையும், பட்டம், பதவிகளையும் தேடியலைகிறான். 

ஆனால் அவனே தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி, தன் மரணத்திற்குப் பிறகு தான் தமத்திரித்துவ சர்வேசுவரனாலும், கிருபைதயாபரத்தின் மாதாவாலும், சகல சம்மனசுகள், அர்ச்சிஷ்ட்டவர்களாலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பரிசுத்த ஆத்துமாக்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுவதும், நரக அரூபிகளால் கெடுமதியால் வரவேற்கப்படுவதும் எத்தனை பயங்கரமானது என்பதை ஆழ்ந்து தியானிக்க முன்வரவேண்டும்.

உங்கள் ஆத்தும சத்ருக்களோடு துணிவோடு போராடுங்கள். ஆத்துமத்தைக் காத்துக்கொள்ள எதையும் இழந்து போக ஆயத்தமாயிருங்கள்! எதற்காகவும் உங்கள் நேச ஆண்டவரையும், உங்கள் பரிசுத்த மாதாவையும் இழக்காதிருக்கப் போராடுங்கள்..

சேசுவும், மாதாவும் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார்களாக !

நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479 மற்றும் பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !