உத்தரியம் - பாகம் 10 - உத்தரியத்தின் வாயிலாக கடலின் கடும் சீற்றத்தில் இருந்து காப்பற்றப்பட்ட கப்பலும் மனம் மாறிய பிரிவினை சபை போதகரும்.

1845-ஆம் ஆண்டின், கோடை காலத்தின் கடைசியில் ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற “பெருங்கடலின் அரசன்” (King of Ocean) என்ற ஆங்கிலேயக் கப்பலானது கடுமையான் புயற்காற்றின் நடுவில் சிக்கிக் கொண்டது. காற்றும் கடலும் அக்கப்பலை பயங்கரமாக அலைக்கழித்தன.

அக்கப்பலில் பிரிவினை சபையினைச் சேர்ந்த போதகரான, திரு.பிஷேர் (Mr. Fisher)  தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். மரணம் நெருங்கிக்கொண்டிருந்த அவ்வேளையில், தனது குடும்பத்தினர் மற்றும் சக பயணிகளோடு கடவுளின் இரக்கத்திற்காகவும் அவரது மன்னிப்பிற்காகவும் மன்றாட, மிகவும் கடினப்பட்டு கப்பலின் மேல் தளத்திற்கு வந்து செபித்துக் கொடிருந்தார்கள்.

அக்கப்பலில் அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த ஜான் மெக்கலிப் (John McAuliffe) என்ற இளைஞன் கப்பல் பணியாளனாக இருந்தான். நிலைமையின் தீவிரத்தினை உணர்ந்த அவன், தனது மேல்சட்டையினைத் திறந்து, தான் அணிந்திருந்த உத்தரியத்தினை கழற்றி ஆர்பரித்துக் கொண்டிருந்த கடலினை நோக்கி சிலுவை அடையாளம் வரைந்து, கடலினுள் எறிந்தான். அந்த உடனே காற்றும், கடலும் அடங்கியது. அதன் பின்னர் கப்பலின் மேல் தளத்தினை தொட்ட ஒரே அலையானது அவன் எறிந்த அவனது உத்தரியத்தினை கொண்டு வந்து போட்டது.

இந்நிகழ்வுகளை எல்லாம் துவக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அப்போதகர், அவனது செயல்களின் வாயிலாக விளைந்த அற்புதத்தினையும் கண்டார். அப்போதகர் அவ்விளைஞனிடம் அதனைக் குறித்து கேட்டறிந்த பொழுது, அவன் அவருக்கு பரிசுத்த தேவதாயாரைக் குறித்தும்,   உத்தரியத்தினைக் குறித்தும் அவருக்கு தெளிவாக் விளக்கினான். அப்போதகரும், அவரது குடும்பத்தினரும் மிகவும் மனம் மகிழ்ந்து கப்பல் கரையினை அடைந்ததும், கத்தோலிக்க திருச்சபையினில் இணைந்து நமதன்னையின் உத்தரிய பாதுகாப்பினை ஏற்றுக்கொண்டார்கள்.

****சிந்தனை****

நாம் வாழும் ஒவ்வொரு கணமும் நமதான்மாவிற்காக இருவர் போராடுகின்றனர். முதல்வர், தனது சாயலாக உள்ள ஆன்மா எப்படியாவது தன்னிடம் வந்து சேரவேண்டுமென ஏங்கித் தவிக்கும் கடவுள், இரண்டாமர் எப்படியாவது கடவுளின் சாயலைக்  கொண்ட ஆன்மாவினை நரக நெருப்பினும் வீழ்த்த நினைக்கும் சாத்தான்.

சாத்தான் நமக்காக, நம்மை கடவுளிடமிருந்து பிரித்துச் செல்ல, நமது உடல் உலக மாயை போன்ற கண்ணிகளை வைத்து காத்துக் கொண்டிருக்கின்றான். நாமும் அது தெரியாமல் அல்லது தெரிந்தே  விளக்கினைத் தேடி ஓடும் விட்டில் பூச்சிகள் போன்று அகன்னியில் சிக்கித் தவிக்கின்றோம்.

நாம் கடவுளுக்குரிய வழியில் நடந்து அவரைச் சென்றடைய, நமக்கு எண்ணற்ற அருள் வரங்களையும், அருட்கருவிகளையும், அருளடையாளங்களையும் தந்து உதவுகின்றார். நமதன்னையின் வாயிலாக அவரை சென்றடைய, அவர் நமகளித்த மிகச் சிறந்த அருளடையாளத்தில் ஒன்று தான் உத்தரியம்.

இதன் வாயிலாக நமதன்னை நம்மை அவரது திருக்குமாரனுடன் எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுகிறார். பாவங்களின் வாயிலாக பிரிந்து சென்ற தனது ஆன்ம குழந்தைகளை, உத்தரியத்தின் வாயிலாக அவர்களை மீட்டெடுத்து தனது தலைச்சன் பிள்ளையிடம் (இயேசு கிறிஸ்து) கொண்டு சேர்க்கின்றார்.

பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் நாமும் அன்னையின் உத்தரியத்தினை மகிழ்வோடும் விடா முயற்சியோடும் அணிந்து கொண்டு அன்னையின் பாதுகாப்பினை உறுதி செய்யத் தயாரா????   

சேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!!!!!