இடைவிடா சகாயமாதா

இடைவிடா சகாயமாதா அற்புத திருப்படத்தின் சுருக்கமான வரலாறு:

இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் பரிசுத்த நற்செய்தியாளரான லூக்காஸ் வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது.

ஆனால் இதில் இடம் பெற்றுள்ள அர்ச்சியசிஷ்ட மிக்கேல் அதிதூதர், அர்ச்சியசிஷ்ட கபிரியேல் அதிதூதர் மற்றும் பைசன்டின் முறை கிரேக்க எழுத்துக்கள் அர்ச்சியசிஷ்ட லூக்காஸின் ஓவியத்தில் இல்லாததால் அதைத் தழுவி இவ்வோவியம் கீழ்த்திசை கலைப் பண்பிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்தஓவியமானது கி.பி.1325-1480 ஆண்டுகளுக்குள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். கீரிட் தீவிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் வருகைக்குப் பிறகு, உரோமையில் பல அற்புத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேவதாய் ஒரு சிறுமிக்குக் காட்சியளித்தது அவற்றுள் ஒன்றாகும். தேவதாய் அந்தச் சிறுமியிடம், தனது அற்புத ஓவியமானது உரோமையில் உள்ள புனித மரியன்னையின் பேராலயத்துக்கும் புனித யோவான் லாத்தரன் பேராலயத்துக்கும் இடையே அமைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள்.

இவ்விரு பேராலயத்துக்குமிடையே புனித மத்தேயுவின் ஆலயம் அமைந்திருந்தது. புனித அகுஸ்தீன் சபைக்குருக்கள் அதைக் கண்காணித்து வந்தனர். இந்த ஆலயத்தின் பீடத்துக்குமேல் அந்தப் புனித படம் ஸ்தாபிக்கப்பட்டது.

மூன்று நூற்றாண்டுகளாக (1499-1798) இந்த அற்புதப் படம், புனித மத்தேயு ஆலயத்தில் வணங்கப்பட்டு வந்தது. கிரீட் தீவில் இப்படத்திற்கு என்ன பெயர் வழங்கப்பட்டது என்பதை நாமறியோம். ஆனால் உரோமையில் 'இடைவிடாசகாயத்தாய்' எனும் பெயரில் அழைக்கபட்டது. ஏனெனில் தேவதாய் அந்த சிறுமிக்கு அளித்த காட்சியில், தனது படம் மக்களின் வணக்கத்துக்கு உரியதாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தபோதுதான் 'இடைவிடா சகாய மாதா' என்று தெரிவித்தார்கள். அன்றிலிருந்தே நாம் அவ்வன்னையை 'இடைவிடா சகாயமாதா' அல்லது 'சதா சகாயமாதா' என்றழைத்து வருகிறோம்.

1798ஆம் ஆண்டு புனித மத்தேயுவின் தேவாலயம் பிரஞ்சுக்காரரின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. அதைக் கண்காணித்து வந்த புனித அகுஸ்தின் சபைக் குருக்கள் இந்தப் படத்தை அன்மையில் இருந்த ஒரு துறவற மடத்துக்கு மாற்றினார்கள். அதன்பின்னர், போஸ்தெருவா நகரில் உள்ள புனித மரியன்னையில் 'செபக்கூடம்' எனப்படும் தங்கள் செபக்கூடத்தில் அமைத்தனர். அங்கு 1866 வரை இந்தப் படம் மறைந்திருந்தது.

இந்நிலையில் அழிக்கப்பட்ட புனித மத்தேயுவின் பழைய ஆலயம் இருந்த இடத்தில் இரட்சகர் சபைக்குருக்களால் புனித அல்போன்சா ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டது. இறைவனது கருணை நிறைந்த பராமரிப்பின் பயனாக இந்த அற்புதப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.

புனித பாப்பரசர் 9-ம் பத்திநாதர் இந்தப் படத்தின் வரலாற்றை அறிந்து, அவருடைய கட்டளையின் பேரில் 1866ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள் திருப்பவனியாக எடுத்துவரப்பட்டு புனித அல்போன்சா ஆலயத்தில் மறுபடியும் மகிமைக்குரிய அதன் பழைய இடத்திலேயே நிறுவப்பட்டது. அதன் பாதுகாப்பையும் இரட்சகர் சபைக் குருக்களிடம் ஒப்டைத்தார்.

அந்த சமயத்தில்தான் இந்தப்படத்துக்குரிய வணக்கத்தை உலகெங்கும் பரப்பும்படி இடைவிடா சகாயத்தாயை அனைத்துலகும் அறியும்படி செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். அன்றுமுதல் இரட்சகர் சபைக்குருக்கள் தம் சிரமீது கொண்டு தம்மால் இயன்ற அளவு முயன்று, இந்தப் பக்தியைப் பரப்பிவருகின்றனர்.

படத்தின் விளக்கம்:

இந்தப்படத்தில் நான்கு உருவங்களும் பைசைன்டின் முறை கிரேக்க எழுத்துக்களும் காணப்படுகின்றன. அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாள், இறைமகன் குழந்தை இயேசு, அர்ச்சியசிஷ்ட மிக்கேல் அதிதூதர், அர்ச்சியசிஷ்ட கபிரியேல் அதிதூதர் ஆகிய நால்வருமாவர்.

அன்னை கன்னிமரியாள் சிகப்புநிற மேலாடையையும் கருநீல நிற மேல் அங்கியையும் அணிந்திருப்பதைக் காண்கிறோம். அன்னையின் முக்காடிட்ட உடையில் அழகிய நட்சத்திரமும் அதன் அருகில் நட்சத்திர வடிவில் சிலுவையும் காணப்படுகின்றன.

அன்னையின் தலையில் எட்டு முத்துக்கள் பதித்த கிரிடமும், அதன் வழியாக வரும் கதிர்களும் கிரிடத்தை அலங்கரிக்கின்றன. தலையைச் சுற்றி காணப்படும் வட்ட வடிவிலான புனிதர்களை குறிக்கும் கதிர் வடிவிலான தட்டானது, தங்க ஆபர்ணங்களுடன் வடிவமைப்பு செய்யப்பட்ட ஓவியம் சில படங்களில் காணப்படவில்லை.

அர்ச்சியசிஷ்ட மிக்கேல் அதிதூதரின் (இடது) கையில் ஈட்டியும், கோலும், கடற்பஞ்சும், கிண்ணத்தில் புளித்த திராட்சை இரசமும் உள்ளன. இவை இயேசுவின் பாடுகளை நினைவுகூறும் பொருட்களாக அமைந்துள்ளன.

அர்ச்சியசிஷ்ட கபிரியேல்(வலது) அதிதூதரின் கையில் சிலுவை உள்ளது. இச்சிலுவையானது, இயேசு கிறிஸ்து படப்போகும் பாடுகளைக் குறித்துக்காட்டுகிறது.

குழந்தை இயேசு, பச்சை நிறத்தில் மேலாடையையும், சிகப்பு நிறத்தில் இடைக் கச்சையையும், அரக்கு நிறத்தில் அங்கியையும் அணிந்திருப்பதைக் காணலாம். குழந்தை இயேசுவின் இடது காலில் காலணியோடு இருப்தையும் வலது கால் காலணி கழன்று தொங்கிக் கொண்டிருப்தையும் காணலாம். யூதபாரம்பரியத்தில் பாதங்களை காட்டுவது என்பது, மனித இயல்பை வெளிப்படுதுவதாகும். இங்கே இறைமகன் மனிதனாக அவதரிப்பதைக் குறித்துக்காட்டுகிறது.

மீட்பின் மறைபொருள்:

இந்தப் படமானது அழகு நிறைந்த காட்சிப்பொருளாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல், கிறிஸ்தவ கோட்பாடுகளையே உள்ளடக்கிய ஆழமிக்க விசவாச மறைபொருளை உள்ளடக்கியதாகும். இந்தப்படத்தில் காணப்படும் உருவங்களும், பொருட்களும் கடவுள் நம்மோடு இருந்து நமது துன்பத்திலும் நம்மை எப்படி வழிநடத்துகிறார் என்பதையும், அன்னை கன்னிமரியாளின் பரிந்துபேசுதலும், கடவுளின் மாட்சியும், அதிதூதர்களின் பாதுகாவலையும் நமக்குத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

கடவுள், தம் வாக்குத்தத்தத்தின்படி இறைமகன் இயேசு, அன்னை கன்னிமரியாள் வழியாக இந்த உலகில் அவதரித்ததையும், அத்தூய மகன் தம் அன்னையை, சிலுவையின் அடியில் சீடர் அருளப்பரிடம், "இதோ உம் தாய்" என்று நம் அன்னையாக கொடுக்கின்றார். இத்தகைய மாட்சிமையைப் பெற்ற கன்னிமரியாய் இப்படத்தின் பெரும் பகுதியைக் கொண்டிருந்தாலும், இப்படத்தின் மையமாக அமைவது இயேசு கிறிஸ்துவே!

இயேசுவின் கையும், அன்னை கன்னிமரியாளின் கையும் இணைந்திருக்கும் விதமானது, "இயேசுகிறீஸ்துவே உலகின் மீட்பர்" என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது. அன்னை கன்னிமரியாள், இறைமகன் இயேசுவையே மீட்பராகச் சுட்டிக்காட்டுகின்றாள். இறைமகன் இயேசு இங்கே செம்மரியாக சுட்டிக் காட்டபடுகின்றார்.

படத்தின் அமைப்பும், தோற்றமும், அன்னையின் சோகம் படிந்தமுகம் மற்றும் படத்தில் காணப்படும் பொருட்கள் யாவும் இயேசுவின் துன்பம் கலந்த பாதையில், சிலுவைச்சாவு வரை செல்லவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வண்ணமாய் அமைகின்றன.

அதேவேளையில் குழந்தை இயேசுவின் தளர்ச்சி அடையாத முகமும், தம் சாவின் வழியாக மாட்சியுடன் உயிர்த்து வெற்றி கொள்வேன் என்பதை தங்கநிற பின்னணியும், ஒளிக்கதிர்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன.