இயேசுவின் திரு இருதய வணக்க மாதம்.

1835 - ஆம் ஆண்டு முதல், 'ஜூன் மாதம் ' இயேசுவின் திரு இருதய வணக்க மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசுவின் திரு இருதயத் திருநாள் உட்பட இயேசுவின் அதிசயமான மறை பொருளைக் குறிக்கும் அனைத்து விழாக்களும் ஜூன் மாதம் தான் கொண்டாடப்பட்டு வருகின்றன. மானிட மக்களின் அன்பு அர்ச்சனைகளோடு ஜூன் மாத மங்கை, அவரது இதய வாசலில் அமர்ந்து தட்டி நிற்கின்றாள்.

மனிதருள் ஒருவர் இயேசு; அவர் நம் இறைவன், அவருக்கு ஓர் இருதயம். நெருப்பு எரிக்கும், தன்மையைக் குறிப்பது போல் இறை இயேசுவின் இருதயம் அவரது அன்பின் நிறைவைக் குறிக்கும். அளவற்ற, அதிசயமான, களங்கமற்ற, அலை கடலைவிடப் பரந்த, நமக்காகத் தம் உயிரையே தந்த அவ்விருதய அன்பே, இயேசுவின் திரு இருதயப் பக்தியின் பொருளும் குறிக்கோளுமாகும்.

இருதயத்துக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு வணக்கமா! உறுப்புகளுள் சிறந்தது மிக முக்கியத்துவம் வாய்ந்தது இருதயம். பல காலக்கட்டத்தில் மக்கள் தங்கள் அன்பைக் கவர்ந்த தலைவர்களின் இருதயங்களுக்கு மரியாதை கொடுத்து வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என்று சென்னையில் அமரர் அறிஞர் அண்ணாவின் சமாதியில் (கல்லறை) பொறிக்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து தம் மேலான இருதயத்தைத் , தாம் அன்பு செய்த நமக்கு அளித்துச் சென்றார், நம் அன்பு ஆராதனை அனைத்தும் பெற ... நமது பாவங்களைக் கழுவிய அவரது விலை மதிப்பற்ற திரு இரத்தம், 33 ஆண்டுகள் அவரது இருதயக் குழாய்கள் வழி தானே பாய்ந்து சென்று உடல் முழுவதும் பரவி உயிரளித்திருக்கும்! ... எனவே, அவரது இருதயம்' என்ற உறுப்புக்கு முக்கிய மரியாதை, வணக்கம், ஆராதனை செலுத்துதல் பொருத்தமானதே.

இயேசுவின் இருதயத்தை ஆராதிக்கும்போது, மனிதனாய்ப் பிறந்த இறை மகனுடைய இருதயத்தையே ஆராதிக்கிறோம்; இறைவனையே ஆராதிக்கிறோம்.

உணர்ச்சிகளுக்கு உறைவிடம் இருதயம், நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் இருதயம் விரைவாகத் துடிக்கும். துன்பத்திலும் விரக்தியிலும் மந்தமாக நிலைக்கும். அன்பில் அது துரிதமாக பலமாகத் துடிக்கும், கிறிஸ்துவின் பாசத்திலும் நேசத்திலும், அழுகையிலும் வேதனையிலும், கருணையிலும் மன்னிப்பிலும், மற்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உணர்ச்சியிலும் அவரோடு அதிகப் பங்கு கொண்ட அவரது உடலின் அதிமுக்கிய உறுப்பாகிய இருதயத்தை வணங்குவது முறையானதும் தகுதியானதும் ஆகும். மேலும், அவரது இருதயம் தமது தெய்வீகத்தோடு ஒன்றுபட்ட உறுப்பல்லவா ? இயேசுகிறிஸ்து தேவ ஆள்; ஆகையால் அவரது இருதயம் தெய்வீகமானது. எனவே அதற்கு தேவ ஆராதனையும் மகிமையும் உரித்தானவையே.

அவரது இருதயத்தை ஆராதிப்பது, புனிதர்களின் உடல் உறுப்புகளாகிய புனித பண்டங்களை வணங்குவது போன்றதன்று; அல்லது கிறிஸ்துவின் உடலின் மற்ற உறுப்புகளையோ, அவரது திருக்காயங்களையோ வணங்குவது போன்றதுமன்று; இங்கே, அவரது இருதயத்தை வணங்குவதால் இருதயத்தை மட்டுமன்று, அவரது அணை கடந்த அன்பையும் ஆராதிக்கிறோம்.

திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் "இயேசுவின் திரு இருதயம் அவதரித்த வார்த்தையான தேவ ஆளின் இருதயமேயாகும்; அவ்விருதயம் வழியாக, அவர் நம்மை நேசித்த, நேசிக்கின்ற முழு அன்பும் நம் கண்களுக்கு முன் கொண்டுவரப்படுகிறது எனக் கூறுகிறார்.

நமது இருதயத்தை அவரது இல்லமாக்க விரும்புகின்றார், இயேசு. கடவுளுக்குக் கோவில், அரசருக்கு அரண்மனை, அன்பருக்கு இருதயம்.

"அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே" என்று பாடுகின்றார், பராபரக் கண்ணி' பாடலாசிரியர் குணங்குடி மஸ்தான் சாகிபு. (1788-1835) அவர் எழுதிய இந்த பராபரக் கண்ணி பாடல், நம் அன்.ராம் இயேசுவுக்கு நன்கு பொருந்துகிறதல்லவா?

"தட்டுங்கள் திறக்கப்படும்" என்றார் இயேசு. உடைந்த உள்ளம் உரம் பெற, மாசுற்ற) மனதின் மருட்சி நீங்க, இருண்ட இருதயத்தின் இறுமாப்பு நீங்க அவரிடம் செல்வோம். "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், நினையாதொரு போதும் இருந்தறியேன்" என நாமும் சொல்லுமளவில் நம் பக்தியை வளர்ப்போம்.

"வருந்தி சுமை சுமப்போர் என்னிடம் வருக'' (மத். 11: 28) என அழைக்கிறார், அன்பின் கடவுள் ; இயேசு, அவரிடம் செல்வோம். இரக்கம் சிந்தும் தன் இனிய குரலால், வானக இன்பம் தரும் தன் சுடர் விடும் அன்பினால், கருணை பொங்கும் தன் ஊடுருவும் பார்வையால் நமக்கு ஆறுதல் அளிப்பார்.

"என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நான் தாழ்ச்சியும் சாந்தமுமான இருதயமுடையவனாயிருக்கிறேன்" (மத். 11: 29). இருதய ஆண்டவரின் இனிய ஆணை இது.