திவ்விய சேசு சிலுவை சுமந்து செல்கிறார்.

தாமே தெரிந்து கொண்ட கிரீடத்தை அணிந்து மகிமையின் அரசர் எருசலேம் நகர் வீதி வழியாய் பவனி செல்கிறார். கல்வாரி மலையில் அவரது சிங்காசனத்தைத் தயாரிப்பர். அதை நோக்கிச் செல்லுகிறார். என்ன கொடிய வாதனை , கொள்ளும் நடை ! சிலுவையின் தாங்கொணாப் பாரத்தினால் தயங்கித் தடுமாறி பற்பல முறை கீழே விழுந்து எழுகிறார் . போகப் போக சன வெள்ளம் பெருகுகிறது . அங்கிருந்து அவச் சொல்லும், பழி வசனமும் அலை அலையாய் ஆண்டவர் மேல் விழுகின்றன . பேயோடு கடைசி முறை போராடி வெற்றிமுடி சூடவே போய்க் கொண்டிருக்கிறார்.

இப்பவனியின் பாதையில் பற்பலர் தோன்றி மறைகின்றார்கள் . அவர்களைப் பார்க்கலாம் . அக்காட்சிகளைப் பற்றி யோசிக்கலாம் . வெரோணிக்காள் பயத்தைப் பாராட்டாமல் கூட்டத்திற்குமுன் பாய்ந்து , இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறார். உடனே கைம்மாறும் பெறுகிறார் . எருசலேம் மாநகர் புண்ணியவதிகள் தனித்தும் கூட்டமாகவும் வந்து ஆண்டவரின் அநியாய அக்கிரம அகோர வாதனையைக் கண்டு கண்கலங்கிக் கதறி அழுகிறார்கள் . சிமியோன் நம்மில் ஒருவனாகத் தோன்றுகிறான் அல்லவா ? வேறு எண்ணங்களும் உதிக்கலாம் . அச்சமயம் அப்போஸ்தலர்களின் எண்ணம் என்ன ? உணர்ச்சி என்ன ? அவர்கள் ஓடி விட்டார்கள் என நாம் அறிவோம் . எங்கே ஓடி இருப்பார்கள் ? இந்நகரில் தான் வீடுகளில் நுழைந்து நடப்பதைக் கதவு இடுக்கு வழியும், ஜன்னல் வழியும் இலேசாய் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் . என்ன யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்பது தான் கேள்வி . இயேசுவின் வலது பக்கம் ஒருவரும் இடது பக்கம் ஒருவரும் வீற்றிருக்க வேண்டும் என்று அர்ச் யாகப்பரும் அருளப்பரும் கேட்ட போது ஆண்டவர் சொன்ன பதில் அவர்களது உள்ளத்தை உறுத்தியிருக்கலாம் . " நீங்கள் கேட்பது யாதென நீங்கள் அறியீர்கள் . நான் பானம் செய்யும் பாத்திரத்தை நீங்கள் பானஞ் செய்ய முடியுமா ? " என்ற கேள்விக்கு " முடியும் " என்றார்களே . ஆனால் அர்ச் யாகப்பர் மட்டும் அன்று அவரது விண்ணப்பத்தைக் கேட்டு சீறி விழுந்த இதர சீடர்களும் ஆண்டவர் தனியே அக்கசப்பான பாத்திரத்தைக் குடிக்க விட்டு ஓடி ஒளிந்தனர்

இயேசு மொழிந்த வேறு புத்திமதியும் அவர்கள் நினைவுக்கு இப்பொழுது வந்திருக்கும் . "யார் யார் தன் சிலுவையைச் சுமந்து என் பின் வராமலிருக்கிறாரோ  அவர் என் சீடனாயிருக்க முடியாது " அவ்வார்த்தை அப்பொழுது கடினமாயிருந்தது . இப்பொழுது முன்னரை விடச் சந்காமாகத் தோன்றியது

எனினும் தாங்கள் தவறினோம் , தங்களுக்குத் தோல்வி என்று மனம் நொந்தனர் . யோசிக்க யோசிக்கத் தங்கள் தவறைப் பெரிதும் உணர்ந்தாலும் தாங்கள் பதுங்கிய இடத்திலிருந்து வெளிவர அவர்களுக்குத் துணிவில்லை . ஆகிலும் பின்னொரு நாள் ஆண்டவருக்கு உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள் .

"எவனாவது என்னைப் பின்பற்றி வர ஆசிப்பானேயாகில் அவன் தன் சிலுவையைத் தினம் தினம் தூக்கிக் கொண்டு என் பின் வருவானாக " என்றது யாவருக்கும் பொருந்தும் . விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாவரும் தங்கள் வாழ்நாளில் சிலுவையைச் சுமந்தாக வேண்டும் . நல்ல மனதோடு தூக்கிச் சென்றால் நித்திய மகிழ்ச்சி அவர்களை வரவேற்கும் . வேண்டா வெறுப்பாய் தூக்கிச் செல்வது நித்திய கேட்டுக்குள் அவர்களை இறக்கி விடும் . பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வுத் தளம் வெவ்வேறு துன்பங்களாலும் பாவங்களாலும் சிலுவைகளாலும் பாவப்பட்டிருக்கிறது . இயேசுவோடு பாவத்தின் சிலுவையைத்தான் சுமந்து செல்கிறோம் . தவறி விழுவோமேயாகில் சிலுவையின் கீழ் இயேசு விழுந்ததை நினைவுற்று விழும் ஒவ்வொரு முறையும் மிகவும் ஆழ்ந்த மனஸ்தாப வரத்தை நமக்குப் பெற்றுக் கொடுக்கிறார் என்பதை உணர வேண்டும்.

சிலுவையின் பாதையில் தம் மகனைச் சந்தித்தாரே தேவ தாய் , அவரது வியாகுலப் பெருக்கை அறியக் கூடியவன் யார் ?

இக்காலத்தில் வேத விரோதிகளால் பறித்துக் கொண்டு போகப்படுகிறார்களே மக்கள் , அவர்கள் படும் பாட்டை நினைக்கும்போதே தாய்மார்களின் மனம் நடுங்குகிறது . சில சமயம் அதைச் சகிக்க முடியாதென்றே நமக்குத் தோன்றுகிறது .மகனின் பாடுகளைக் கண்ட மாமரி எவ்விதம் மனம் உடைந்திருக்க வேண்டும் .நமதாண்டவர் செய்ததை நன்றாய்க் கண்டறிந்தவர் தேவதாய் ஒருவரே . அவர் யாருக்காக இந்தக் கொடிய பாடுகளை அனுபவித்தார் என்றும் அவருக்குத் தெரியும் (கன்னித்தாய் உலகின் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடும் ) யாருக்காக இயேசு பாடுபடுகிறார் என்றறிந்து அதை ஏற்றுக் கொண்டார் . அவர் கிறிஸ்துவின் தாய் , கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் தாய் . அவர் வழியாகத்தான் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆனோம்.