புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவ இரகசியங்களைச் சிந்திப்பதின் இலாபம்.

கிறிஸ்துவினுடைய ஒரே நோக்கம் உத்தமத்தனத்தைத் தேடிப் போவதாம் ."பிரியமான குழந்தைகளைப் போல கடவுளைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள் " என்று அர்ச் சின்னப்பர் சொல்லவில்லையா ? எவ்விதம் பின்பற்றுவது ? இயேசுநாதரைக் கண்டு பாவிப்பதில் ; "நானே வழி "என்றார் கிறிஸ்துநாதர் . அர்ச் கிரகோரியார் ஒரு உவமை சொல்லுகிறார் . ஓவியன் படம் தீட்டும்போது, தன்yகண் எதிரே ஒரு மாதிரியைக் கொண்டு அதைப் பார்த்துத் தன் தூரிகையைக் கையாளுகிறான். அதுபோலவே இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் கையாள வேண்டும் . அவரது புண்ணியங்களையும் தன் மனக்கண் முன் நிறுத்தி , அவரை ஓயாமல் உற்று நோக்கி தன் ஆத்துமமாகிய திரையில் இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் சித்தரிக்க வேண்டும் .அதற்கு செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைச் சிந்திப்பது சுலபமான வழி

நமது ஈடேற்ற அலுவலில் தேவ தாய்க்கு அதிக கவலை . ஆதலால் செபமாலை சொல்லுகையில் இயேசுவின் சீவியத்தைச் சிந்திக்கும்படி பற்பல அர்சிஷ்டவர்களைத் தூண்டினார். இதனால் கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஆராதித்து மகிமைப்படுத்துவார்கள் , தங்கள் வாழ்க்கையையும் அவருடைய வாழ்க்கையையும் ஒத்திருக்கச் செய்வார்கள் என்பது அவரது எண்ணமும் ஆசையும் .

பெற்றோர்கள் சொல்லுவதையும் செய்வதையும் குழந்தைகள் கவனித்து அவர்களைப் போல - சில சமயம் தங்களுக்குத் தெரியாமலே - நடக்கப் பிரயாசைப்படுகிறார்கள் . ஒரு தொழில் கற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆசிரியர் செய்வதைப் போல் செய்யத் தேடுவான். அதே போல் செபமாலை செய்யும் தேவதாயின் மக்கள் திருத்தாயும் சேயும் செய்வது போல ஒவ்வொன்றையும் செய்யத் தேடுவார்கள் . ஆதலால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்க்க வேண்டும் .

இறைவன் பொழிந்த கிருபைகளை மறக்க வேண்டாமென்று முன்காலத்தில் மோயீசன் இஸ்ராயேலருக்குக் கற்பித்திருந்தார் . தம் வாழ்க்கையையும் , மரணத்தையும் , உத்தானத்தையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கண் முன் எப்போதும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இயேசுநாதர் எவ்வளவு அதிகாரத்தோடு சொல்லக் கூடும் . ஒவ்வொரு தேவ இரகசியமும் அவருடைய நன்மைத்தனத்தையும் நம் ஈடேற்றத்தின் மேல் அவருக்குள்ள ஆவலையும் காட்டுகிறது .அவர் நம் ஆத்துமத்தின் பத்தா; நமது நேசர் ; அவரது அன்பை நாம் மறக்காமலிருக்க வேண்டும் என்பது நியாயம் அல்லவா?

அவரது வாழ்க்கையில் எல்லாம் முக்கியமானவை , அவரது அன்பை மகாத் துலக்கமாய் அவரது பாடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன . எப்பக்தி முயற்சியினால் அவருக்கு அதிக மகிமை வருவிக்கக் கூடும் என்று முத் ஆஞ்செலா ஒரு நாள் இயேசுவைக் கேட்டாள். வந்த பதில் என்ன ? "மகளே என் காயங்களைப் பார் ". பின்னர் சிரசிலும் மற்ற இடங்களிலும் அவர் பட்ட காயங்கள் யாவற்றையும் காட்டி "உன்னுடைய ஈடேற்றத்திற்காக நான் இவைகள் யாவற்றையும் அனுபவித்தேன் . நான் உனக்குக் காட்டிய அன்புக்கு நீ என்ன கைம்மாறு செய்வாய்  ? " என்றார் ஆண்டவர் . திவ்விய பூசை தானே அவரது மரணமும் பாடுகளும் . ஆதலால் தான் திவ்விய பூசை தமத்திருத்துவத்திற்கு அளவிறந்த மகிமையை அளிக்கிறது . பூசை நேரத்தில் மோட்ச வாசிகளுக்கும் சம்மனசுக்களுக்கும் மகா சந்தோசம்

தேவ ரகசியங்களை தியானித்து செய்யும் செபமாலையும் இறைவனுக்கு அளிக்கும் தோத்திரப்பலி எனலாம் . இயேசுவின் வாழ்க்கையை , பாடுகளை , மரணத்தை செபமாலை நினைப்பூட்டுகிறதன்றோ? இத்தகைய தியானம் மனிதனின் மனதை இளக்கி, மனஸ்தாபத்தை எழுப்பி , மனமாற்றுதளுக்குக் காரணமாகிறது . ஒரே ஒரு பாவியின் மனமாற்ற முதலாய் மோட்சத்தில் இறைவனுக்கும் சம்மனசுக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் .

ஆதலால் தேவ இரகசியங்களைத் தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லி வருவோம்!