உறுதிப் பூசுதல் - மறையறிவு

உறுதிப் பூசுதல் என்னும் திருவருள்சாதனத்தில் விசுவாசிகள் இன்னும் நெருங்கிய முறையிலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர். தூய ஆவியின் தனி வல்லமையால் உறுதிப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் விசுவாசத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் மிகவும் கடமைப்பட்டுள்ளனர், (திருச்சபை11)

திருமுழுக்கு பெற்றவர்கள் உறுதிப்பூசுதல் என்னும் அருள்சாதனத்தின் வழியாக கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்தில் முன்னேறுகின்றனர், அவர்கள் இந்த அருள்சாதனத்தில், பெந்தகோஸ்தே நாளில் ஆண்டவர் அனுப்பிய அதே தூய ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தூய ஆவி கொடுக்கப்படுவதால் விசவாசிகள் இன்னும் முழுமையாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்கள் ஆகின்றனர். திடம் பெறுகின்றனர், கிறிஸ்துவின் உடலை அன்பிலும் விசுவாசத்திலும் கட்டி எழுப்பக் கிறிஸ்துவுக்குச் சான்று பகரக் கூடியவராகின்றனர். அவர்கள் ஆண்டவரின் அழியா முத்திரையால் பொறிக்கப்படுவதால் உறுதிப்பூவுதல் ஒரே முறைதான் அளிக்கப்படும். (சடங்குமுறை1,2)

தூய ஆவியின் கொடைகளும் கனிகளும்: உறுதிப்புசுதல் வழியாக நாம் தூய ஆவியின் கொடைகளான ஞானம், புத்தி, அறிவு, திடம், பக்தி, விமரிசை, தெய்வபயம் எனும் ஏழு கொடைகளையும் பெறுகிறோம். உறுதிப்புசுதல் பெற்றவர் தூய ஆவியின் கனிகளான பரிவன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, கனிவு, பரிவு, நன்னயம், பெருந்தன்மை, மென்மை, நம்பிக்கை, ஒழுங்கு, தன்னடக்கம், கற்பு ஆகியவைகளைத் தங்கள் வாழ்கையில் கடைப்பிடிக்க ஊக்கம் பெறுகிறார்கள். திருமுழுக்குப் பெற்ற யாரும் தக்க தயாரிப்புடன் இத்திருவருள்சாதனத்தைப் பெறலாம். இத்திருவருள்சாதனத்தை யாரும் இருமுறை பெற இயலாது.

யார் யார்? வழக்கமாக உறுதிப்பூசுதலை வழங்குபவர் அப்போஸ்தலர்களின் வழித்தோன்றல்களும், தலத் திருச்சபையின் தலைவருமான ஆயரே. அவருடைய அனுமதியின் பேரில் குருவும் நிறைவேற்றலாம். உறுதிப்பூசுதல் பெறுவோருக்கு ஞானத்தாய் தந்தையர் இருவரில் ஒருவராவது இருப்பது அவசியம். திருமுழுக்கில் ஞானப் பெற்றோராக இருந்தவரே உறுதிப்பூசுதலிலும் ஞானப் பெற்றோராக இருப்பது சிறப்பானது.

ஆயர் அல்லது ஆயரால் அதிகாரம் பெற்ற குரு 'கிறிஸ்மா' என்னும் புனித தைலத்தால் உறுதிப் பூசதல் பெறுபவரது நெற்றியில் பூசி .........(பெயர்) தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொள், பரம தந்தையின் உன்னத கொடை அவரே!

உறுதிப்பூசுதல் பெறுவோர்: ஆமென். என்று சொல்லும் இப்பகுதி உறுதிப்புசுதலின் முக்கிய பகுதியாகும்.

(திருப்பலியில் இறைவாக்கு வழிபாடு முடிந்தபின், ஆயர் கேள்விகள் கேட்க, உறுதிப்பூசுதல் பெறுவோர் பதில் கூறுகின்றனர்.)

திருமுழுக்கு வார்த்தைப்பாட்டை புதுப்பித்தல்

ஆயர் : பசாசையும், அதன் செயல்களையும், அதன் மாய கவர்ச்சிகளையும் விட்டு விடுகிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : விட்டு விடுகிறேன்.

ஆயர் : வானமும் வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் :அவருடைய ஒரே மகனும், கன்னிமரியாவிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் :அன்று, பெந்தகோஸ்தே விழாவின் போது அப்போஸ்தலர்களுக்கு அருளப்பட்டதுபோல், இன்று, உங்களுக்குச் சிறப்பாக அருளப்பட இருக்கின்ற ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் : புனித கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் உறவையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்த்தெழுதலையும், முடிவில்லா வாழ்வையும் விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் : இதுவே நம் விசுவாசம், இதுவே திருச்சபையின் விசுவாசம். இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதிலே நாம் பெருமை கொள்கிறோம்.

உறுதிப்பூசுதல் பெறுவோர் :ஆமென்.

கைகளை வைத்தல் :

அன்பார்ந்த மக்களே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை வேண்டுவோமாக, திருமுழுக்கில் முடிவில்லா வாழ்வுக்கென ஏற்கெனவே புதுப்பிறப்பு அடைந்து, இறைவனின் உரிமை மக்களாகப் பெற்ற இவர்கள் மீது அவர் தயவுடன் தூய ஆவியைப் பொழிவாராக. அந்த ஆவியார், தம் கொடைகளை நிறைவாக அளித்து, இவர்களை உறுதிப்படுத்தி, தம் அபிஷேகத்தில் இவர்கள் இறைமகன் கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்ளச் செய்வாராக.

(சற்று நேரம் மொளன செபம்)

ஆயரும் குருக்களும் உறுதிப் பூசுதல் பெறுவோர் மீது கைகளை வைக்க, ஆயர்மட்டும் கூறுவதாவது:

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையே, நீரினாலும் தூய ஆவியினாலும் உம் அடியார்கள் இவர்களைப் பாவத்தினின்று விடுவித்து, புதுப்பிறப்பு அளித்துள்ளீர், ஆண்டவரே, துணையாளராகிய தூய ஆவியைப் இவர்களுக்குள் அனுப்பியருளும்.

ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவியை,
ஆலோசனையும் வல்லமையம் தரும் ஆவியை,
அறிவும் பக்தியம் தரும் ஆவியை,
இவர்களுக்கு அளித்தருளும்,
தெய்வ பயத்தின் ஆவியால் இவர்களை நிரப்பியருளும்,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

திருத்தைலம் பூசுதல்

ஞானத்தாய் அல்லது தகப்பன் உறுதிப்பூசுதல் பெறுவோரின் தோள்மேல் தமது வலது கையை வைத்து, அவர் பெயரைச் சொல்ல, ஆயர் தம் வலது பெறுவிரல் நுனியைத் திருத்தைலத்தில் தேய்த்து, அவர் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து சொல்கிறார்.

(பெயர்) தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொள், பரம தந்தையின் உன்னத கொடை அவரே!

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஆமென்.

ஆயர் : உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உறுதிப்பூசுதல் பெறுவோர் : உமக்கும் சமாதானம் உண்டாவதாக.

திருப்பலியின் இறுதியில் ஆசியுரை :

ஆயர் : எல்லாம் வல்ல பரமதந்தை நீரினாலும் தூய ஆவியினாலும் உங்களுக்குப் புதுப்பிறப்பளித்து, உங்களைத் தம் சுவிகார மக்களாக்கிக் கொண்ட இறைவன், உங்களை ஆசீர்வதித்து , தந்தைக்குரிய தம் அன்புக்கு உகந்தவர்களாக உங்களை என்றும் காத்தருள்வாராக.

எல் : ஆமென்.

ஆயர் :பரம தந்தையின் ஒரே திருமகன், திருச்சபையில் உண்மையின் ஆவியானவர் என்றும் இருப்பாரென வாக்களித்த ஆண்டவர், உங்களை ஆசீர்வதித்து, உண்மையான விசுவாசத்தை நீங்கள் அறிக்கையிடுமாறு உங்களைத் தம் வல்லமையால் உறுதிப்படுத்துவாராக.

எல் : ஆமென்.

ஆயர் : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், தூய ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.

எல் : ஆமென்.

நன்றி. திரு இருதய குருகுலம்.