ஏழு தேவத் திரவிய அனுமானங்கள்

1. ஏழு தேவத்திரவிய அனுமானங்கள் யாவை?

(1) ஞானஸ்நானம் 

(2) உறுதிப்பூசுதல் 

(3) நற்கருணை 

(4) பச்சாத்தாபம் 

(5) அவஸ்தைப்பூசுதல் 

(6) குருத்துவம் 

(7) மெய்விவாகம்.


ஞானஸ்நானம் ஆவதென்ன?

ஜென்மப் பாவத்திலிருந்து நம்மைக் கழுவி சுத்திகரித்து, நம்மைக் கிறீஸ்தவர்களாகவும், சர்வேசுரனுடைய பிள்ளைகளாகவும் மோட்சத்திற்கு சுதந்திரவாளிகளாகவும் ஆக்குகிற தேவத்திரவிய அனுமானம்.


உறுதிப் பூசுதல் ஆவதென்ன?

திடமுள்ள உத்தம கிறீஸ்தவர்களாகவும், சேசுக் கிறீஸ்து நாதருடைய போர்வீரர்களாகவும் நம் விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கு நமக்கு உதவும்படியாக ஒரு விசேஷமான முறையில் இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரன் நம்மிடத்தில் வரப் பண்ணுகிற தேவத் திரவிய அனுமானம்.


நற்கருணை ஆவதென்ன?

அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும், முந்திரிகைப் பழ இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் நம் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்து நாதருடைய திருச்சரீரமும், இரத்தமும், ஆத்துமமும் தெய்வீகமும் அடங்கியிருக்கிற தேவத்திரவிய அனுமானம்.


பச்சாத்தாபம் ஆவதென்ன?

ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு நாம் கட்டிக் கொள்கிற பாவங்கள் குருவானவர் தருகிற பாவப் பொறுத்தலின் வழியாக மன்னிக்கப் படுகிற தேவத் திரவிய அனுமானம்.


அவஸ்தைப் பூசுதல் ஆவதென்ன?

வியாதி, விபத்து அல்லது மூப்பினால் நாம் மரண ஆபத்தில் இருக்கிற போது குருவானவர் தைலம் பூசுதல் மற்றும் அவருடைய ஜெபங்களின் வழியாக நம் ஆத்துமத்திற்கும் சில வேளைகளில் சரீரத்துக்கும் நல்ல சுகமும், பலமும் தருகிற தேவத் திரவிய அனுமானம்.


குருத்துவம் ஆவதென்ன?

மேற்றிராணிமாரும், குருக்களும், திருச்சபையின் பிற ஊழியர்களும் அபிஷேகம் செய்யப்பட்டு தங்கள் பரிசுத்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான அதிகாரத்தையும் வரப்பிரசாதத்தையும் பெற்றுக் கொள்கிற தேவத்திரவிய அனுமானம்.


மெய்விவாகம் ஆவதென்ன?

ஒரு கிறீஸ்தவ ஆணையும், பெண்ணையும் திருச்சபையின் சட்டப்படியான விவாக பந்தனத்தில் ஒன்றிணைக்கிற தேவத் திரவிய அனுமானம்.