குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.
(உட்காரவும்)
(அடுத்து குரு ஒப்புக்கொடுத்தல் வாக்கியத்தை வாசிக்கிறார். அதன் பின் அப்பத்தை ஒப்புக்கொடுக்கிறார்.)
குரு: பரிசுத்த பிதாவே, சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, தேவரீருடைய அபாத்திர ஊழியனாகிய அடியேன், கணக்கற்ற என் பாவங்களுக்காகவும், துரோகங்களுக்காகவும், அசட்டைத்தனங்களுக்காகவும், இங்குச் சூழ்ந்து நிற்கின்ற சகலருக்காகவும், இன்னும் சீவியரும், மரித்தோருமான எல்லாக் கிறீஸ்துவ விசுவாசிகளுக்காகவும், எனக்கும், அவர்களுக்கும் நித்திய சீவியத்தின் இரட்சணியத்திற்காக உதவும்படி சீவியரும், சத்தியமுள்ளவருமான என் சர்வேசுரனாகிய உமக்கு ஒப்புக் கொடுக்கிற இந்த மாசற்ற பலிப்பொருளைக் கையேற்றுக் கொள்ளும். ஆமென்.
(குரு பாத்திரத்தில் இரசத்தை ஊற்றியபின் தண்ணீரை ஆசீர்வதித்து, அதில் ஒரு துளியைப் பாத்திரத்தில் இடும்போது கூறுவதாவது:)
மனித சுபாவத்தை ஆச்சரியத்துக்குரிய விதமாய் உண்டாக்கி, இன்னும் ஆச்சரியத்துக்குரிய விதமாய் அதைப் புதுப்பித்திருக்கிற சர்வேசுரா, எங்கள் மனித சுபாவத்திலே பங்குபெறத் திருவுளமான உமது திருக்குமாரனும், எங்கள் ஆண்டவருமாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய தேவ சுபாவத்திலே நாங்களும், இந்த இரசமும் தண்ணீரும் கலக்கும் பரம இரகசியத்தினால் பங்கு பெறத் தக்கவர்களாக எங்களுக்கு அநுக்கிரகஞ் செய்தருளும். அவர் தேவரீரோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் சர்வேசுரனுமாய், என்றென்றைக்கும் சதாகாலமும் சீவியருமாய், இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாய் இருக்கிறவர். ஆமென்.
(குரு இரசத்தை ஒப்புக் கொடுக்கிறார்.)
ஆண்டவரே, இரட்சணியத்தின் பாத்திரம் எங்கள் இரட்சணியத்திற்காகவும், சர்வலோகத்தின் இரட்சணியத்துக்காகவும், உமது தெய்வீக மகத்துவப் பிரதாபத்தின் சன்னதியில் சுகந்த வாசனையுடன் எழும்பும் படியாகத் தேவரீருடைய தயவை இரந்து மன்றாடி உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். ஆமென்.
ஆண்டவரே, தாழ்ச்சியுள்ள மனதோடும் பச்சாத்தாப ஆத்துமத்தோடுமுள்ள நாங்கள் தேவரீரால் ஏற்றுக்கொள்ளப்படவும், இப்படியே தேவனாகிய ஆண்டவரே, உமது திருச்சமூகத்தில் எங்களுடைய பலியானது இன்று உகந்ததாயிருக்கவும் அருள்வீராக.
அர்ச்சிக்கிறவரே, சர்வ வல்லபரும் நித்தியருமான சர்வேசுரா, தேவரீர் எழுந்தருளி வந்து உம்முடைய பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக ஆயத்தப்படுத்திய இந்தப் பலியை ஆசீர்வதித்தருளும்.
(இதன்பின் குரு தம் விரல்களைக் கழுவியபடி பின்வரும் சங்கீதத்தைச் சொல்கிறார். (சங். 25:6‡12)
ஆண்டவரே, உத்தமர்களின் நடுவில் என் கரங்களைக் கழுவி, உமது பீடத்தைச் சுற்றி வருவேன்.
உமது துதியின் சத்தத்தைக் கேட்டு, உமது அதிசயங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவேனாக.
ஆண்டவரே, உமது வீட்டின் அலங்காரத்தையும், உமது மகிமை வாசஞ் செய்யும் இடத்தையும் விரும்பினேன்.
சர்வேசுரா, என் ஆத்துமம் அவபக்தியுள்ளவர்களோடும், என் சீவன் இரத்தப் பிரியரோடும் சேர்ந்து நாசமாக விடாதேயும்.
அவர்களுடைய கைகளில் அக்கிரமங்கள் இருக்கின்றன. அவர்களது வலக்கை இலஞ்சத்தால் நிறைந்திருக்கின்றது.
நானோ என் கபடற்றதனத்தில் நடந்தேன். என்னை மீட்டு என்பேரில் இரக்கம் புரியும்.
என் கால் செவ்வழியில் உறுதியாய் நின்றது. ஆண்டவரே, ஆலயங்களில் நான் உம்மைத் துதிப்பேன்.
பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் தோத்திரமுண்டாகக் கடவது.
ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
(குரு பீடத்தின் நடுவில் வந்து குனிந்து நின்றபடி பின்வரும் ஜெபத்தைச் சொல்கிறார்.)
பரிசுத்த திரித்துவமே, எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதரின் பாடுகள், உத்தானம், ஆரோகணம் ஆகியவற்றின் ஞாபகமாகவும், எப்பொழுதும் கன்னிகையாகிய முத்திப்பேறு பெற்ற மரியம்மாள், முத்திப்பேறு பெற்ற ஸ்நாபக அருளப்பர், அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர், சின்னப்பர் இவர்களுடையவும், சகல அர்ச்சிஷ்டவர்களுடையவும் மகிமைக்காகவும் நாங்கள் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிற இந்தக் காணிக்கையைக் கையேற்றுக் கொள்ளும். இது அவர்களுக்கு மகிமையாகவும் எங்களுக்கு இரட்சணியமாகவும் பயன்படுவதாக. அவர்களுடைய ஞாபகத்தை இவ்வுலகில் கொண்டாடுகிற எங்களுக்காக அவர்கள் பரலோகத்தில் மன்றாடக் கடவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் பேரால். ஆமென்.
(குரு பீடத்தை முத்தி செய்து மக்களை நோக்கித் திரும்பித் தாழ்ந்த குரலில் கூறுவதாவது:
குரு: சகோதரரே, என்னுடையவும், உங்களுடையவும் பலியானது சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரனுக்கு உகந்ததாயிருக்கும் படி செபியுங்கள்.
பரி: ஆண்டவர் தமது திருநாமத்தின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நம்முடையவும், அவரது பரிசுத்த திருச்சபை முழுமையினுடையவும் நன்மைக்காகவும் உமது கரங்களிலிருந்து இந்தப் பலியை ஏற்றுக் கொள்வாராக.
குரு: ஆமென்.