தேவ வசீகரத்துக்கு முன் செபங்கள்

ஆகையால் மிகவும் இரக்கமுள்ள பிதாவே, இந்தக் கொடைகளை, இந்தக் காணிக்கைகளை, இந்தப் பரிசுத்த மாசற்ற பலிகளைத் தேவரீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருள வேண்டுமென உம்முடைய திருக்குமாரனும், எங்களுடைய ஆண்டவருமாகிய சேசுக்கிறீஸ்துவின் பேரால் உம்மைத் தாழ்மையாய் இரந்து மன்றாடுகிறோம்.

அவைகளை முதன்முதல் உமது பரிசுத்த கத்தோலிக்குத் திருச்சபைக்காக ஒப்புக் கொடுக்கிறோம்.  உமது ஊழியரும், எங்கள் பாப்புவுமாகிய (பெயரைக் குறிப்பிடுகிறார்), எங்கள் மேற்றிராணியாரான (பெயரைக் குறிப்பிடுகிறார்), சத்திய மார்க்கத்தாரோடும், கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க விசுவாசத்தை அனுசரிக்கிற விசுவாசிகள் எல்லாரோடும், உமது திருச்சபையை உலகமெங்கும் சமாதானத்தில் நிலைநிறுத்திக் காப்பாற்றி, ஐக்கியப்படுத்தி, ஆண்டுவரத் தயை செய்தருளும்.

ஆண்டவரே, உமது ஊழியர்களாகிய ஸ்திரீ பூமான்கள் . . . . . . . . . இன்னாரையும் (இங்கு குரு தாம் சீவியராகிய யார் யாருக்காக ஜெபிக்க விரும்புகிறாரோ, அவர்களை நினைவுகூர்கிறார்.), இங்கே சூழ்ந்து நிற்கிறவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இவர்களுடைய விசுவாசமும், பக்தியும் தேவரீருக்குத் தெரிந்திருக்கின்றனவே;  அவர்களுக்காக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.  இன்னும் இந்தத் தோத்திரப் பலியை அவர்களே தங்களுக்காகவும், தங்களைச் சேர்ந்த மற்ற அனைவருக்காகவும், தங்களுடைய ஆத்தும மீட்புக்காகவும், அவர்கள் நம்பியிருக்கிற இரட்சணியத்திற்காகவும், க்ஷேமத்துக்காகவும் ஒப்புக் கொடுத்து, நித்திய சீவியரும், மெய்யான தேவனுமாகிய தேவரீருக்குத் தங்கள் வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

முதன்முதல் எங்கள் தேவனும், ஆண்டவருமாகிய சேசுக் கிறீஸ்துநாதரின் மாதாவும், மகிமையுள்ளவர்களும், முப்பொழுதும் கன்னிகையுமான மரியம்மாளோடும், இன்னும் முத்திப்பேறு பெற்ற உமது அப்போஸ்தலரும் வேதசாட்சிகளுமான அப்போஸ்தலர்கள் இராயப்பர், சின்னப்பர், பெலவேந்திரர், இயாகப்பர், அருளப்பர், தோமையார், இயாகப்பர், பிலிப்பு, பர்த்தொலோமேயு, மத்தேயு, சீமோன், ததேயு ஆகியோரோடும், பாப்புமார்களாகிய லீனுஸ், கிளேத்துஸ், சாந்தப்பர், சிக்ஸ்துஸ், கொர்னேலியுஸ், மற்றும் வேதசாட்சிகளான சிப்ரியான், லெளரேஞ்சியார், கிறிசோகோனுஸ், அருளப்பர், சின்னப்பர், கோஸ்மான், தமியானுஸ் என்பவர்களோடும், உமது சகல அர்ச்சிஷ்டவர்களோடும் நாங்கள் ஐக்கியமாகி அவர்களை வணக்கத்தோடு நினைத்துக்கொண்டு, அவர்களுடைய பேறுபலன்களினாலும், மன்றாட்டுக்களினாலும் நாங்கள் சகலத்திலும் தேவரீருடைய பாதுகாப்பின் உதவியினால் காப்பாற்றப்படக் கிருபை செய்தருளும்.  எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்து நாதரின் பேரால்.  ஆமென்.

ஆகையால் ஆண்டவரே, எங்களுடையவும் தேவரீருடைய குடும்பம் முழுவதினுடையவும் ஊழியத்தின் இக்காணிக்கையைத் தேவரீர் உவப்புடன் கையேற்றுக் கொண்டு, எங்களுடைய வாழ்நாட்களை உமது சமாதானத்தில் நிலைநிறுத்தி, எங்களை நித்தியக் கேட்டினின்றும் விடுவித்து, உம்மால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்த்துக் கொள்ளக் கட்டளையிட்டருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.  எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதரின் பேரால்.  ஆமென்.

சர்வேசுரா, இந்தக் காணிக்கையைத் தேவரீர் சகலத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டதும், வசீகரிக்கப்பட்டதும், அங்கீகரிக்கப் பட்டதும், தகுந்ததும், உகந்ததுமாக்கி, அது எங்களுக்குத் தேவரீருடைய அதிமிகப் பிரியமுள்ள குமாரனும், எங்கள் ஆண்டவருமாகிய சேசுக்கிறீஸ்துவின் சரீரமும், இரத்தமும் ஆகும்படி அநுக்கிரகஞ் செய்யத் தேவரீரை மன்றாடுகிறோம்.