உறுதிப்பூசுதல் பெறுவதற்கான தகுதிகள்

1. யார் உறுதிப்பூசுதல் பெற முடியும்?

ஞானஸ்நானம் பெற்று, இன்னமும் உறுதிப் பூசுதல் பெறாத யாரும் இந்தத் தேவத் திரவிய அனுமானத்தைப் பெறலாம்.


2. திருச்சபை எப்போதாவது பிறந்த குழந்தைகளுக்கு உறுதிப்பூசுதல் வழங்கியுள்ளதா?

ஆம். கிறீஸ்தவத்தின் தொடக்க காலங்களிலும், சில குறிப்பிட்ட கீழை நாடுகளில் இப்போதும் கூட திருச்சபை பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்நானத்தைத் தொடர்ந்து உடனே உறுதிப்பூசுதலும் வழங்குகிறது.


3.வழக்கமாக எந்த வயதில் உறுதிப்பூசுதல் வழங்கப் படுகிறது?

திருச்சபையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று, புத்தி விபரம் அறிந்தவர்கள் மட்டுமே உறுதிப்பூசுதல் பெற அனுமதிக்கப் படுகிறார்கள்.


4. உறுதிப்பூசுதல் பெறுவதற்கான நிபந்தனைகள் யாவை?

(1) அதைப் பெறுபவர் ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்கராக இருக்க வேண்டும்.

(2) அவர் தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருக்க வேண்டும்; அதாவது சாவான பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்.

(3) தமது ஞானஸ்நானப் பெயரிலிருந்து வேறுபட்ட ஒரு அர்ச்சிஷ்டவரின் பெயரை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

(4) அவர் தமது விசுவாசத்தின் அடிப்படை சத்தியங்களை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

5. பரலோக மந்திரம், அருள் நிறை மந்திரம், விசுவாசப் பிரமாணம், பத்துக் கட்டளைகள், திருச்சபைக் கட்டளைகள் ஆகியவற்றையும், தேவத்திரவிய அனுமானங்களைப் பற்றிய கொள்கையையும், விசேஷமாக, உறுதிப்பூசுதல் என்னும் தேவத்திரவிய அனுமானத்தின் தன்மையையும், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் அவர் அறிந்திருக்க வேண்டும்.


6. உறுதிப் பூசுதல் பெறுபவரின் ஆத்துமம் எந்நிலையில் இருக்க வேண்டும்?

அவர் தகுதியான முறையில் பாவ சங்கீர்த்தனம் செய்திருக்க வேண்டும். மேலும் இஸ்பிரீத்து சாந்துவை அவருடைய ஏழு கொடைகளோடும் பெற்றுக் கொள்ளத் தம்மை ஆயத்தம் செய்யும்படி சிறிது நேரம் தியானத்தில் செலவிட வேண்டும்.


7. உறுதிப்பூசுதல் பெறும்போது உபவாச நிலையில் இருக்க வேண்டியது அவசியமா?

இல்லை. இக்காலத்தில் உறுதிப்பூசுதல் பெற இருக்கிறவர்கள் உபவாச நிலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.


8. தான் சாவான பாவநிலையில் இருப்பதை அறிந்திருந்தும் ஒருவன் உறுதிப்பூசுதல் பெறத் துணிவானாகில், என்ன நிகழும்?

அவன் அப்போது ஒரு பெரும் தேவத்துரோகப் பாவத்தைக் கட்டிக் கொள்கிறான். மேலும் இந்தத் தேவத்திரவிய அனுமானம் அவனால் பெறப் படுகிற போது, அதன் வரப்பிரசாதங்களைப் பெற அவனால் முடியாது. ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, பாவமன்னிப்புப் பெறும் வரை அவற்றை அவனால் பெற முடியாது.