நன்றிப் பாடல்

ஓ தேவனே, நாங்கள் உம்மைப் போற்றுகின்றோம். உம்மையே எங்கள் ஆண்டவர் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

நித்திய பிதாவாகிய தேவரீரை உலகமனைத்தும் வணங்குகிறது. பரமண்டலங்களும், அவற்றிலுள்ள பலவத்தரும், சம்மனசுக்கள் அனைவரும், ஞானாதிக்கரும், பத்திச்சுவாலகருமான சம்மனசுக்களும், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சேனைகளின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர் என்று ஓயாமல் உம்மை வாழ்த்திப் போற்றி ஆர்ப்பரிக்கின்றனர்.

பரலோகமும், பூலோகமும் உம்முடைய மகத்துவமிக்க மகிமையால் நிறைந்துள்ளன.

மகிமைமிகு அப்போஸ்தலர்களின் திருக் கூட்டமும், புகழ்ச்சிக்குரிய தீர்க்கதரிசிகளின் தோழமைக் கூட்டமும், வேதசாட்சிகளின் வெண்சேனையும் உம்மை ஸ்துதிக்கின்றனர்.

அளவில்லா மகத்துவமிக்க பிதாவாகிய உம்மையும், ஆராதனைக்குரிய உமது மெய்யான ஏக சுதனையும், தேற்றுகிறவராகிய திவ்ய இஸ்பிரீத்து சாந்துவையும் உலகமெங்குமுள்ள பரிசுத்த திருச்சபையானது ஏற்றிப் போற்றுகின்றது.

ஓ கிறீஸ்துவே, நீரே மகிமையின் அரசர்! நீரே நித்தியத்திற்கும் பிதாவின் சுதனாக இருக்கிறீர்! 

மனிதனை மீட்டு இரட்சிக்கத் தேவரீர் திருவுளங் கொண்ட போது, பரிசுத்த கன்னிகையின் திருவுதரத்தை நீர் தள்ளி விடவில்லை.

மரணத்தின் கொடுக்கின் மீது நீர் வெற்றி கொண்ட போது, சகல விசுவாசிகளுக்காகவும் பரலோக இராச்சியத்தைத் திறந்தருளினீர்.

பிதாவின் மகிமையில் சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறீர்.

தேவரீர் எங்களை நடுத்தீர்க்கிறவராக வரவிருக்கிறீர் என்று நாங்கள் விசுவசிக்கிறோம்.

(இங்கே அனைவரும் முழந்தாளிட்டு பின்வரும் வாக்கியத்தைச் சொல்லவும்.)

எனவே விலைமதிப்பில்லாத உமது திரு இரத்தத்தினால்  தேவரீர் மீட்டு இரட்சித்த உமது ஊழியர்களுக்கு உதவும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.

(எழுந்திருக்கவும்)

நித்திய மகிமையில் உம் அர்ச்சிஷ்டவர்களோடு கூட அவர்களும் எண்ணப்படத் தயை செய்வீராக.

ஓ ஆண்டவரே, உமது மக்களைக் காத்தருளும். உமது உரிமைச் சொத்தாகிய உம்முடையவர்களைக் ஆசீர்வதித்தருளும்.  அவர்களை ஆண்டு நடத்தி, என்றென்றைக்கும் அவர்களை உயர்த்தியருளும்.

அனுதினமும் உம்மை வாழ்த்துகிறோம். ஆம் ஆண்டவரே, உமது பரிசுத்த நாமத்தை நாங்கள் என்றென்றும் போற்றுகின்றோம்.

ஆண்டவரே, இன்று முழுவதும் எங்களைப் பாவமின்றிப் பாதுகாத்தருளும். எம்மீது இரக்கமாயிரும் ஆண்டவரே, எம்மீது இரக்கமாயிரும். ஆண்டவரே, நாங்கள் உம்மை நம்பியிருப்பது போல, உமது இரக்கம் எங்கள் மேல் இருப்பதாக!

ஆண்டவரே, உம்மிலேயே என் நம்பிக்கையை வைத்தேன். நான் ஏமாற்றமடைய எந்நாளும் விடாதேயும்.

முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,

பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (அல்லேலூயா).
    
(காலை ஜெபத்தைத் தொடர்ந்து சொல்லாவிடில், பின்வரும் ஜெபத்தைச் சொல்லவும்.)

முதல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பதில்: எங்கள் அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.

பிரார்த்திக்கக் கடவோம்

ஆண்டவராகிய சர்வேசுரா, உமது ஊழியராகிய நாங்கள் எங்கள் சரீரத்திலும், உள்ளத்திலும் தொடர்ந்து நலமாயிருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.  எப்பொழுதும் கன்னிகையான ஆசீர்வதிக்கப்பட்ட மரியாயின் மகிமை மிக்க வேண்டுதலினால், நாங்கள் இக்காலத்தின் துயரங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதன்பின் வரும் நித்தியப் பேரின்பத்தை  அனுபவிக்கவும் எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: ஆமென்.


காலைச் செபம் 

முதல்: சர்வேசுரா எனக்கு உதவியாக வாரும்.

பதில்: ஆண்டவரே, எனக்கு உதவி செய்யத் தீவரியும்.

முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும்....

பதில்: ஆதியில் இருந்தது போல்.... அல்லேலூயா.

(செப்துவாஜெசிமா ஞாயிறிலிருந்து உயிர்ப்பு ஞாயிறு வரையிலும் அல்லேலூயாவுக்குப் பதிலாக நித்திய மகிமைக்கு இராஜாவாயிருக்கிற ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது என்று சொல்லவும்.)