திவ்ய பலி பூசை அர்ச்சிஷ்டவர்களுக்குத் தோத்திரமாக ஒப்புக் கொடுக்கப் படுகிறது.

ஆனாலும் அர்ச்சிஷ்டவர்களின் காலச் சக்கரம் காட்டுவது போல பூசை அர்ச்சிஷ்டவர்களுக்காகவும் ஒப்புக் கொடுக்கப் படுகிறது. இதன் மூலம் கல்வாரிப்பலியின் மூலமாகவும், திவ்ய நற்கருணைப் பலியின் மூலமாகவும் மட்டுமே அவர்கள்  இவ்வாறு அளவற்ற விதமாய் வரப்பிரசாதங்களைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள் என்ற உண்மை வலியுறுத்தப்படுகிறது.  மேலும்  உன்னதமானவரின் செயல்பாடு அவர்களில் மகிமைப்படுத்தப்படுகிற போது, அவர்களும் மகிமைப்படுத்தப் படுகிறார்கள்.

பீடத்தில் நம் ஆண்டவரின் பலியோடு அர்ச்சிஷ்டவர்களின் நினைவையும் நாம் ஒன்றிணைக்கிற போது, அவர்களுக்கும் நாம் ஒரு தகுதியான வணக்கத்தைச் செலுத்துகிறோம்.  கிறீஸ்து நாதரின் ஞான சரீரத்தின் உறுப்புகள் என்ற முறையில், அவர்களுடைய சிரசாக இருக்கிற நம் ஆண்டவரின் திவ்ய பலியோடு அவர்களையும் ஐக்கியமாக்குவது நீதியானதே.  ஏனென்றால் அவர்கள் தங்கள் துன்பங்களின் மூலமாகவும், அடிககடி தங்கள் வேதசாட்சியத்தின் மூலமாகவும், இந்த தேவ பலியானவரின் திரு இரத்தத்தோடு தங்கள் இரத்தத்தையும் கலந்திருககிறார்கள்.  

மேலும் திருச்சபையானது அர்ச்சிஷ்டவர்களின் அருளிக்கங்களை, விசே­மாக வேதசாட்சிகளின் அருளிக்கங்களை, குருவானவர் திவ்யபலி பூசையின் போது திவ்ய அப்பத்தை வைக்கும் அதே இடத்தில் உள்ள பீடப் பலிக்கல்லில் பதித்து வைக்கிறது.  “அது இரட்சிக்கப்பட்டவர்களின் முழுமையான நகரமாக, அர்ச்சிஷ்டவர்களின் திருக்கூட்டமாக இருக்கிறது.  அது உலகார்ந்த பலியாக இருக்கிறது.  தமது திருப்பாடுகளில் தம்மையே நமக்காகத் தமது பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிற பிரதான குருவாகிய கிறீஸ்துநாதரே இந்த பொதுப்பலியை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்” என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

உன்னதமானவரை ஆராதிக்கும்படியாகவும், அர்ச்சிஷ்டவர்களுக்கு அவர் செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்தும்படியாகவும், அவர்கள் பெயரால், சேசுவின் திரு இரத்தத்தை நாம் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற போது, அவர்களுக்கு நாம் அளிக்கக் கூடிய, அனைத்திலும் பெரிய மகிமையை அவர்களுக்கு அளிக்கிறோம்.  நாம் அவர்களுடைய கருத்துக்களோடு ஒன்றித்து கடவுளை மகிமைப்படுத்தும் போது, பரிசுத்த தமத்திரித்துவம் மகிமைப்படுத்தப்பட வேண்டுமென்ற தணியாத ஆவல் கொண்டுள்ள அவர்கள் நமக்குக் கடமைப் பட்டவர்களைப் போல ஆகிறார்கள்.  ஏனென்றால் இது அவர்களுடைய மகிழ்ச்சியை அதிகரிக்கின்றது.  

அவர்களது கடந்த காலப் பேறுபலன்களும், தற்போதைய ஜெபங்களும் பொது மத்தியஸ்தராகிய கிறீஸ்துநாதரின் பேறுபலன்களோடும், ஜெபங்களோடும் நெருக்கமான விதத்தில் ஒன்றிக்கப் பட்டு சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப் படும் போது, அவை ஒரு விசே­மான முறையில் அதிகரிக்கின்றன.  இது விசே­மாக அவர்களுடைய திருநாட்களில் அவர்களுககு மகிமையாக திவ்ய பலி பூசை ஒப்புக் கொடுக்கும் போது நிகழ்கிறது. “எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தெரிந்து கொள்ளப்பட்டவர்களின எண்ணிக்கை மிகப் பெரியதாக இருப்பதால், உமது அளவற்ற இரக்கங்களின் முழுமையில் நாங்கள் பங்கு பெறும்படியாக, மிகுநத தாழ்ச்சியோடு நாங்கள் ஜெபிக்கிறோம்” என்று திருச்சபையானது சகல அர்ச்சிஷ்டவர்களின் திருநாளுக்குரிய சபைச் செபத்தில் கூறுகிறது.

அர்ச்சிஷ்டவர்களின் மத்தியஸ்தத்தின் வழியாக ஒப்புக் கொடுக்கப் படுகிற சேசுவின் திரு இரத்தத்தை சர்வேசுரன் முழுமையான விருப்பத்துடன ஏற்றுக் கொள்கிறார்.