பரிசுத்த கன்னிமரியாயின் மந்திரமாலை ஜெபிக்கும்முன் ஜெபம்

ஆண்டவரே! உமது திருநாமத்தை வாழ்த்த என் நாவைத் திறந்தருளும். சகலமான வீண்புறத்தி விசாரங்களினின்றும் என்னிருதயத்தைப் பரிசுத்தப் படுத்தும். நான் இந்த மந்திரமாலையைச் சரியான கவனத்தோடும், பக்தியோடும் ஜெபிக்கும்படியும்,  தேவரீருடைய திருச்சமூகத்தில்  நான் கேட்கும் மன்றாட்டை அடையும்படியும், ஆண்டவரான சேசு கிறீஸ்துநாதரைப் பற்றி என் புத்திக்குப் பிரகாசத்தையும் என் நேசத்துக்கு அக்கினியையும் கொடுத்தருளும் சுவாமி - ஆமென்.

ஆண்டவரே! தேவரீர் பூமியிலிருக்கும்போது எந்தக் கருத்தோடு சர்வேசுரனுக்குப் புகழ் புரிந்தீரோ, அந்தக் கருத்தோடு இச்செபத்தை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். 

யாமப் புகழ் (MATINS)

முதல்வர் : அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே.

பதிலுரை : பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய  திருவயிற்றின்   கனியாகிய  சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

முதல் : ஓ! ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்.

பதில் : என் வாய் உமது புகழை எடுத்துரைக்கும்.

முதல் : சர்வேசுரா! எனக்கு உதவியாக வாரும்.

பதில்: கர்த்தாவே, எனக்கு ஒத்தாசைச் செய்யத் தீவரியும்.

முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.

பதில்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக.- ஆமென். அல்லேலூயா.

(செப்துவாஜெசிமா ஞாயிறிலிருந்து ஈஸ்டர் வரை அல்லேலூயாவுக்கு பதிலாக : “நித்திய மகிமைக்கு இராஜாவான ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது”” என்று சொல்லவும்.)

முன்னிசை வாக்கியம்: வாருங்கள்!  பரிசுத்த கன்னிகையின் குமாரரான  நமது அரசரை ஆராதிப்போம்!