கத்தோலிக்கத் திருச்சபையில் திருச்சுரூபங்கள்.

கத்தோலிக்க திருச்சபையில் கடவுளை வழிபடுவதில் நீண்ட காலங்களாகவே சொரூபங்கள் இடம்பெற்றுள்ளதை அறிவோம்.திருசொரூபங்கள் மற்றும் புனிதபடங்கள் வழியாக பலரும் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து புனிதர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

பிரான்சிஸ் அசிசி,மார்க்கரீத் மரியம்மாள் போன்றவர்களும் திரு சொரூபங்கள் மற்றும் புனித படங்கள் வழியாக இறை ஐக்கியத்தை அனுபவித்து புனிதர்களாக மாறி இருக்கிறார்கள்.

புனித சவேரியார் எப்போதுமே கையில் இயேசுவின் பாடுபட்ட திரு சுரூபத்தை வைத்திருப்பார்.அந்த திரு சிலுவை திரு சுரூபத்தால் இறந்தவர்களை உயிர் பெற்று எழும்ப செய்திருக்கிறார்.

நமதாண்டவர் இயேசுகிறிஸ்து புனித மர்க்கரீத் மரியம்மாவிற்கு கொடுத்த காட்சியில் திரு இருதய திரு படம் எல்லா வீடுகளிலும் ஸ்தாபல் செய்யப்பட்டு வணக்கம் செலுத்த படவேண்டும். என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறாக ஒரே கடவுளை வழிபடும் இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையில் இறைவன் நம்முன்னே பிரசன்னமாயிருகிறார் என்பதை உணர்ந்து இறைவனோடு இன்னும் அதிகமாக ஐக்கியம் ஆவதற்காக திரு சொரூபங்கள் வைக்கபடுகின்றன.

ஆனால் விவிலியம் கண்டிக்கும் சிலை வழிபாட்டிற்கும் உண்மை கடவுளை நினைவு படுத்தும் திரு சொரூபத்திற்கும் வித்தியாசம் தெரியாத எனது பிரிவினை சபை நண்பர்கள் சில சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.

அவர்களின் சந்தேகமும் அதற்கான பதிலையும் இதன் மூலம் தொடர்ந்து அறிவோம்...

மோசே செய்த பொன் கெருபு [சம்மனசு சுரூபம்] சிலையல்ல:-

‘’விடுதலை பயணம் 25:18 இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.

19 ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.

20 அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்’’.

இங்கே கடவுள் மேலே விண்ணகத்திலுள்ள இரண்டு கெரூபுகளின் சாயலை பொன்னால் செய்யும்படியும் அவைகளை இரக்கத்தின் இருக்கையில் எப்படி அமைக்க வேண்டுமென்றும் மோசேக்கு கட்டளை இடுவதை காண்கிறோம்

.கடவுள் தங்கி இருக்கும் உடன்படிக்கை பேழையின் மேல் பாகம் தான் இரக்கத்தின் இருக்கை என்று நமக்கு தெரியும்.

தொடர்ந்து வாசிப்போம்,

‘’விடுதலை பயணம் 25:21 பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து, பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.

22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.’’

இங்கே இந்த பொன் கெரூபுகளின் மகிமையை நாம் பார்க்கிறோம். ஆம். உடன்படிக்கை பேழையில் அமைந்துள்ள இரு பொன் கேரூபுகளின் நடுவிலிருந்து இஸ்ரேயேல் மக்களுக்கான கட்டளைகளை கடவுள் கொடுக்கிறார்.

‘’விடுதலை பயணம் 20:4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், ப+மிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்"

என்று கடவுள் மோசேக்கு தடை விதித்திருந்தார்.ஆனால் மேலே விண்ணகத்திலுள்ள கெரூபுகளின்[சம்மனசு சுரூபம்]சாயலில் இரு பொன் கெரூபுகளை செய்யும்படி கடவுள் மோசேக்கு கட்டளை கொடுக்கிறார்.

உருவாக்கவே கூடாது என்று கடவுளே தடை செய்ததை மோசே செய்யும்படி கடவுளே தூண்டுகிறார் என்று இங்கே நாம் சிந்திக்க முடியுமா?

கடவுளே தவறு செய்யும்படி மோசேயை தூண்டுகிறார் என்று நாம் சிந்திக்கமுடியும?

நிச்சயமாக இல்லை.கடவுள் இஸ்ரேயலுக்குரிய 
கட்டளைகளை உடன்படிக்கை பேழையிலுள்ள அந்த இரு கெரூபுகளின் நடுவிலிருந்து அல்லவா கொடுப்பதை காண்கிறோம்.

அந்த கெரூபுகளை கடவுள் தமக்குரியதாக ஏற்று கொண்டதையல்லவா இது காட்டுகிறது.

சிலைகளை வெறுத்து அவைகளை உருவாக்கவே கூடாது என்று தடைசெய்யும் கடவுள்,

விண்ணகக் கெரூபுகளின் சாயலாம் பொன் கெரூபுகளை ஏற்று கொள்வதிலிருந்து இந்த பொன் கெரூபுகள் கடவுள் கண்டிக்கும் சிலைகள் அல்ல என்பது தெள்ள தெளிவாக தெரிகிறதல்லவா?.

'' எண்ணிக்கை 21:5 மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர்.

6 உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.

7 அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்" நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்" என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார்.

8 அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார்.

9 அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.''

இங்கே கடவுள் ஒரு கொள்ளிவாய்ப் பாம்பைச் செய்யும்படி மோசேக்கு கட்டளை கொடுக்க அவ்வாறே மோசேயும் ஒரு வெண்கலப் பாம்பை செய்கிறார்.

பாம்பு கடியுண்டவர்கள் யாரெல்லாம் அதை உற்று பார்த்தார்களோ அவர்கள் அனைவரும் பாம்பு கடியிலிருந்து விடுதலை பெற்று வாழ்வை பெற்று கொள்கிறார்கள்.

விடுதலைப்பயணம் 20:4-ல் மேலே விண்வெளியிலும் கீழே மண்ணுலகில்,பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ உருவாக்கவேண்டாம் என்று கடவுள் மோசேக்கு கட்டளை கொடுத்திருந்தாலும் தண்ணீரிலும் பூமியிலும் வாழ்கின்ற பாம்பின் உருவத்தை செய்ய சொல்கிறார்.

அந்த உருவத்தின் வழியாக ஜீவன் கடந்து வருகிறது;மக்களும் சாவின் கணனியிலிருந்து மீட்பை பெற்று கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வை சிந்தித்து பாருங்கள்....

மோசே ,கடவுளின் பேச்சுக்கு கீழ்படிந்து வெண்கல பாம்பு உருவத்தை செய்து ,அதை மக்களிடம் உற்று பார்க்க சொல்கிறார்.

அதேபோல் அமமக்களும் மோசே சொன்னவுடன் ஏன்?எதற்கு?என்று எதிர் கேள்விகள் கேட்காமல் 

இது தவறல்லவா?இது சிலைவழிபாடல்லவா?என்றெல்லாம் மோசேக்கே பாடம் சொல்லிக் கொடுக்காமல் 

மோசே தங்களுக்கு சொன்னதை பழிக்காமல்,சந்தேகிக்காமல் 

முழுமையாய் விசுவசித்து அந்த வெண்கலப்பாம்பு உருவத்தை உற்று நோக்கினார்கள் விடுதலையை பெற்று கொண்டார்கள்.

அன்று மோசே வழியாக இறைவன் மக்களை வழிநடத்தினார் என்றால் இன்று இயேசு உருவாக்கிய ஒரே தூய அப்போஸ்தலிக்க கத்தோலிக்க திருச்சபை வழியாகவே இறைவன் இவ்வுலகை வழிநடத்தி வருகிறார்.

அன்று மோசே சொன்னதை விசுவசித்து ஏற்றுகொண்ட மக்கள் விடுதலையை பெற்று கொண்டது போல இன்றும் திருச்சபை உரைப்பதை சந்தேகிக்காமல் விசுவசித்து ஏற்று கொள்பவர்களெல்லாம் விடுதலையை பெற்று கொள்வார்கள் என்பது சத்தியம்.

ஒருவேளை இன்றைய பிரிவினை சபையினரை போல அன்றும் யாராவது இருந்திருந்தால் ,மோசே சொன்னதை சந்தேகித்து மோசேக்கே பத்து கட்டளையை சொல்லிகொடுத்து[!!!]அது சிலைவழிபாடு என இவர்களே கற்பனை செய்து கொண்டு மோசே உயர்த்திய அந்த வெண்கலப்பாம்பை உற்று நோக்காமல் மடிந்து போயிருப்பர்.

அதேநேரத்தில் நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ளவேண்டும்.

மோசே படைப்பின் கடவுளுக்கு நிகராக அல்லது ஒரே கடவுளை மறந்து அந்த வெண்கல பாம்பு சுரூபமே உங்களை மீட்கும் கடவுள் ஆகவே கடவுளுக்குரிய வழிபாட்டை இந்த ரூபத்துக்கு செலுத்துங்கள் என சொல்லியிருந்தால் கண்டிப்பாக அதுதான் கடவுள் கண்டிக்கும் சிலைவழிபாடு.

ஆனால் இங்கே மோசே படைப்பின் கடவுளின் அருளை மக்களுக்கு பெற்று கொடுக்கும் ஒரு கருவியை தான் கட்டுகிறாரே தவிர கடவுளுக்கு இணையாக வேறொரு கடவுளை காட்டவில்லை.

,மக்களும் படைப்பின் கடவுள், இவ்வடையாளம் வழியாக விடுதலையை வழங்குகிறார் ஆகவே அதை உற்று நோக்கி கடவுளின் அருளை பெற்றுகொள்வோம் என்ற விசுவாசத்தில் தான் ஓடோடி அந்த பாம்பின் ரூபத்தை பார்த்திருப்பார்கள்.

அதேபோல் கத்தோலிக்க ஆலயங்களில் இருக்கும் திரு சுரூபங்கள் எல்லாம் படைப்பின் ஒரே கடவுளுக்கு நிகரான வேறொரு கடவுள் அல்ல மாறாக ஒரே படைப்பின் கடவுளின் அருளை பெற்று தரும் கருவிகளே என்பதை புரிந்துகொள்ளுங்கள் 

''யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.

15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.

என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.

சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு ஆண்டவரின் திரு சுரூபத்தை உற்று நோக்கி அவரில் நம்பிக்கை கொள்ளும் மக்களை சிலைவழிபாட்டினர் என ஒருவர் சொல்வாரானால் அவரை என்னவென்று சொல்வது?

அவர் கிறிஸ்தவர் என தன்னை சொல்லிகொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

அவர் வாழ்நாள்முழுவதும் வேதம் படித்தும் பயன் என்ன ?

எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே அவருக்கு முன்பாக எந்த கடவுளும் இல்லை கடவுளர் என்று சொல்லப்படுகிற பல தெய்வங்கள் இருப்பதாக கூறப்பட்டால் அவைகள் எல்லாம் போலி தெய்வங்களே.இந்த போலி தெய்வங்களின் ரூபங்கள் தான் சிலைகள்.

இந்த சிலைகளை மனிதனே கண்டுபிடித்து உருவாக்கி அதற்கு தெய்வீகத்தையும் சாற்றினான்.ஆனால் அவைகளில் உண்மையான தெய்வீகம் இல்லை. ஆனால் எங்கும் வியாபித்திருக்கும் எல்லாம் வல்ல கடவுளைப்போல அவைகளையும் சித்திரித்து மனிதன் அவைகளை மகிமை படுத்துகிறான்.எனவே எல்லாம் வல்ல கடவுள் அவைகளை வெறுக்கிறார்.அவைகள் சபிக்கபட்டவை.அவைகளை வழிபடுவது மிகப்பெரிய பாவம்.

''சாலமோனின் ஞானம் 14:12 சிலைகள் செய்யத் திட்டமிட்டதே விபசாரத்தின் தொடக்கம். அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவு.

13 அவை தொடக்கமுதல் இருந்ததில்லை; என்றென்றும் இருக்கப் போவதுமில்லை''

''சாலமோனின் ஞானம் 14:8 ஆனால் கைவேலைப்பாடாகிய சிலை சபிக்கப்பட்டது. அதைச் செய்தவரும் அவ்வாறே சபிக்கப்பட்டவர். ஏனெனில் அவரே அதைச் செய்தார். அது அழியக்கூடியதாயிருந்தும், தெய்வம் என்று அழைக்கப்பட்டது.

9 இறைப்பற்றில்லாதோரையும் அவர்களது இறைப்பற்றின்மையையும் கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்''

இதன்பொருள் மிகத்தெளிவானது.அதாவது அழியக்கூடிய ஒரு சிலையை மனிதன் செய்து அதற்கு கடவுள் தன்மையை சாற்றி அதை கடவுள் என்றே சொல்லிவிடுகிறான்.ஆனால் உண்மையில் அவைகள் கடவுள் அல்ல.இவ்விதமான போலி கடவுள்களை உண்மைகடவுள் வெறுக்கிறார்.

எனவே கை வேலைபாடாகிய சிலை சபிக்கப்பட்டது.அதை செய்தவனும் சபிக்கபட்ட்வன்,என்று இறைவார்த்தை சொல்கிறது.

மனிதனே அவர்களுடைய கடவுளை செய்கிறபடியால் கடவுள் அவைகளை வெறுக்கவும் விமர்சிக்கவும் செய்கிறார்.

''ஏசாயா 46: 5 யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்? யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்? யாருக்கு நிகராக என்னை ஒப்பிடுவீர்கள்?

6 மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்; தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்; பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்; அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்; பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள்.

7 அதைத் தூக்கித் தோள்;மேல் சுமந்து போகின்றனர்; அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்; அது அங்கேயே நிற்கிறது; தன் இடத்திலிருந்து அது பெயராது; எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது; அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை''

இந்த விதமான போலி தெய்வங்களைப் பற்றி விடுதலைபயணம்20: 23 ல் மோசேயிடம் கடவுள் சொல்கிறார்.

''விடுதலைபயணம்20: 23 எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.''

காரணம் சர்வவல்லமையுள்ள கடவுள் ஒருவரே எனவே கடவுளுக்கு இணையாக வேறு தெய்வங்களை நாம் நினைத்து கூட பார்க்ககூடாது.அவைகளுக்கு படைப்பின் கடவுளை போல ஆராதனை செய்வதற்கென்று பொன்னாலோ வெள்ளியாலோ அல்லது வேறு எந்த பொருளாலோ சிலைகளையும் செய்யகூடாது.

சிலைகள் என்பது உண்மை கடவுளுக்கிணையாக ஆராதனை செய்வதற்கென்றே வடிக்கப்பட்ட போலி தெய்வங்களின் ரூபங்களே...

ஆனால் அவைகள் சபிக்கப்பட்ட போலி தெய்வங்கள். போலி தெய்வங்கள் தொடக்கத்திலிருந்தே இருந்ததுமில்லை என்றும் இருக்க போவதுமில்லை.அவைகளின் சிலைகளை கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவாக மாறியது.

படைப்பின் ஒரே கடவுளுக்கு முதன்மையான இடத்தை கொடுத்து அவர் ஒருவரை மட்டுமே வழிபடுவதற்கு நமக்கு உதவும் பொருட்டே ஆலயங்களில் சுரூபங்கள் வைக்கபடுகின்றன.

நம்முடைய பாவங்களுக்கு கழுவாயாக மாறி நமது பாவங்களை சிலுவையில் அறைந்து நிலைவாழ்வை நமக்களித்த இயேசுவை நம்முடைய இதயங்களில் ஏற்பதற்காகவும் அவரை மட்டுமே வழிபடுவதற்காகவும் பாடுட்ட சுரூபம் வைக்கபட்டுள்ளது

.கடவுளை சார்ந்த சித்திரம் இருக்கவேண்டிய என் உள்ளத்தில் உலகை சார்ந்த உருவங்களோ படங்களோ அபகரித்து கொண்டு நாம் அவற்றை ஆராதிப்பவனாக மாறாமல் இருக்க கடவுளை குறித்த சித்திரம் பேருதவியாக இருக்கும் அதற்காகவே நமது ஆலயங்களில் சுரூபங்கள் வைக்கபடுகின்றன

.நாம் இந்த சுரூபங்களையல்ல இந்த சுரூபங்கள் எதை சுட்டி காட்டுகின்றனவோ அதற்கே ஆராதனை செலுத்துகிறோம்.பாடுபட்ட சுரூபம் இயேசுவை நினைவுபடுத்துகின்ற அடையாளமாக இருப்பதால் நமது வழிபாடுகள் இயேசுவுக்கே சென்றடைகிறது.ஆகவே இது சிலைவழிபாடல்ல.

சாத்தானை சிலையில்லாமலோ சிலை வைத்தோ எப்படி வழிபட்டாலும் அது கடவுளால் கண்டிக்கப்படுகிற அருவருப்பான சிலைவழிபாடு தான்.

ஆக நாம் எப்படி வழிபடுகிறோம் என்பதல்ல யாரை வழிபடுகிறோம் என்பது தான் சிலைவழிபாடு.

மனிதர்களாகிய நாம் அனைவரும் படைப்பின் கடவுளை மட்டுமே வழிபடவேண்டும் 

மாறாக ஆளுக்கொரு கற்பனை உருவங்களையோ &மிருகங்களின் சிலைகளையோ &வேற்று தெய்வங்களின் சிலைகளையோ உருவாக்கி,அதற்கு கடவுளுக்குரிய வழிபாடை செய்யகூடாது என்பதே கடவுளின் முதல் கட்டளையாகும்.

இந்த கட்டளையை கடவுள் முதல் கட்டளையாக நமக்கு தருவதற்கு காரணம்,அன்றைய மக்கள் படைப்பின் கடவுளை வழிபடாமல் வேற்றுதெய்வங்களையும் இயற்கையையும் கற்பனைதெய்வங்களையும் மிருகங்களின் சிலைகளையும் வழிபட்டனர்.இதுவே சிலைவழிபாடு

இதையே கடவுள் கண்டிக்கிறார்.பைபிள் முழுவதும் பல இறைவாக்கினர்களால் கண்டிக்கபடுகிறது

மாறாக படைப்பின் கடவுளை ஒரு அடையாளம் மூலமாக வழிபடுவது சிலைவழிபாடல்ல.

இன்று நேற்றல்ல பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்தே மக்கள் கடவுளை இவ்வாறாக அடையாளங்கள் வழியாகவே வழிபட்டு வந்தனர்.

இறைவன் இஸ்ராயேல் மக்கள் மத்தியில் பிரசன்னமாயிருப்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக ஒரு பேழை,அதன் மேல் ஒரு அரியணை,அதன் இரு புறங்களிலும் இரண்டு கெரூபீன் உருவங்கள்(சம்மனசு சுரூபம்)செய்து வைக்க கடவுள் சொல்கிறார்.அதிலிருந்து அவர்களோடு பேசினார்(விப25:10-22,எபி9-5)

இஸ்ராயேல மக்கள் சென்ற இடமெல்லாம இந்த பேழையை தூக்கி சென்றார்கள்(1சாமு4:3-7&1அர8:1-9)பேழை தங்களிடமில்லாத போது கடவுளின் மாட்சி தங்களிடமில்லாததாக உணர்ந்தார்கள்(1சாமு4:23)

யோசுவா ஆண்டவரின் பேழையை மக்களிடையே தூக்கி செல்ல குருக்களுக்கு கட்டளையிடுகிறார்.இந்த ஆண்டவரின் பேழைக்கென்று ஒரு ஆசாரகூடாரம் அமைத்தார்கள்.

.மோயிசனும் யோசுவாவும் மூப்பர்களும் ஆண்டவரின் உடன்படிக்கை பேழையின் முன் முகங்குப்புற விழுந்து கடவுளை ஆராதித்தார்கள்(எண்20:6&யோசு7:6)

இந்த பேழையின் முன் கடவுளுக்கு செலுத்த வேண்டிய பலியை செலுத்தினார்கள்(2சாமு6:13)தாவீது நடனமாடுகிறார்(2சாமு6:14)தாவீது கடவுளுக்கு பேழையின் முன் பலி செலுத்துகிறார்(6சாமு6:17,18)

ஆண்டவரின் பேழையை குருக்கள் தூக்கி கொண்டு யோர்தான் ஆற்றில் இறங்கவே தண்ணீர் இரண்டாக பிரிந்து மக்கள் ஆற்றை கடந்து செல்ல உதவியது(யோசு3:7-17)

ஆண்டவரின் பேழையை தூக்கி கொண்டு நகரின் மதில்சுவரை சுற்றி வந்தபோது மதில் சுவர் இடிந்து விழுந்தது நகரை கைப்பற்றுகிறார்கள்(யோசு6:6-20)

இவ்வாறாக உருவமற்ற படைப்பின் கடவுளை உடன்படிக்கை பேழை வழியாக மக்கள் வழிபட்டார்களே இதெல்லாம் சிலைவழிபடா?

சிந்தித்து பாருங்கள்...

இதையெல்லாம் சிலை வழிபாடு என ஒருவர் சொல்வாராகில் அவர் கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறார் என்பது உறுதி..

சிலைவழிபாடு இல்லை என ஒருவர் சொல்வாராகில் இயேசு ஆண்டவர் மனித உருவெடுத்த மறைபொருளின் அடிப்படையில் வைக்கபட்டிருக்கும் இயேசு ஆண்டவரின் திரு சொரூபத்தை பார்த்து,இயேசு ஆண்டவரிடமே நம்பிக்கை கொள்ளும் விசுவாசிகளை சிலை வழிபாட்டினர் என எவ்வித இறை அச்சமுமில்லாமல் பழிப்பது கடவுளுக்கு எதிரான பாவமில்லையா??? 

விவிலியம் கண்டிக்கும் சிலை என்பது போலி தெய்வங்களின் ரூபங்களையே என்பதையையும் கடவுளை நினைவுபடுத்தும் அடையாளங்கள் சிலையல்ல என்பதையும் விவிலிய ஆதாரத்தோடு அறிந்தோம்.

இந்நிலையில் யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்கவேண்டாம் என்று தடை செய்கின்ற இறைவார்த்தையான விடுதலைப்பயணம் 20:4-5க்கும் மோசே வழிபட்ட உடன்படிக்கைபேழை அதன் மேல் வைக்கப்பட்ட பொன்கெரூபின் மற்றும் இன்று கத்தோலிக்க ஆலயங்களில் வைக்கபட்டிருக்கும் திரு சுரூபங்களுக்கும் இடையேயுள்ள எதிரும் புதிருமான குழப்பங்களை பற்றி பார்ப்போம் 

இந்த குழப்பம் உருவாவதற்கு காரணமே விடுதலைப்பயணம் 20:4-5க்குத் தொடர்பான அதன் முந்தைய வசனங்களான விடுதலைப்பயணம் 20:2-3ஐ விட்டுவிட்டு விடுதலைப்பயணம் 20:4-5க்கு மட்டும் தனியாக அர்த்தம் கொள்வது தான்.

விடுதலைப்பயணம் 20:4-5சிலைகள் செய்வதை தடை செய்கிறது. விடுதலைப்பயணம் 20:2-3 ஏன் செய்யகூடாது என்பதற்கான காரணத்தை சொல்கிறது. விடுதலைப்பயணம் 20:2-3 ஐயும் விடுதலைப்பயணம் 20:4-5ஐயும் சேர்த்து வாசிக்கும்போது தான்.உண்மையான விளக்கம் வெளிபடுகிறது.

அதாவது கடவுளாகிய ஆண்டவர் மட்டுமே உண்மைக் கடவுள்;வேறு போலி கடவுள்களை ஆராதனை செய்யக்கூடாது;அவைகளை ஆரதிப்பதர்காக அவைகளின் சிலைகளை செய்யவும் கூடாது.

சிலைகள் என்பது உண்மை கடவுளுகினையாக ஆராதனை பெருவதெற்கென்று வடிக்கப்படும் போலி தெய்வங்களின் உருவங்களென்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்,இதை கடவுள் தடை செய்கிறார்.

எனவே விடுதலைப்பயணம் 20:2-5-ல்,ஒரே ஒரு உண்மை கடவுள் இருப்பதால் ஆராதனை செய்வதற்கென்று வேறு தெய்வங்களை கொண்டிருத்தல் ஆகாது என்று கடவுள் மோசேயிடம் கட்டளையை கொடுக்கிறார்..

அதோடு அவைகளுக்கு ஆராதனை செலுத்துவதற்காக மேலே விண்வெளியில்.கீழே மண்ணுலகில் ,பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ,ஓவியத்தையோ நீ உனக்கென உருவாக்க வேண்டாமென்றும் கட்டளையிடுகிறார்.

இப்பொழுது விடுதலைப்பயணம் 20:2-5 ஐ முழுவதுமாக வாசிப்போம்.

''விடுதலைப்பயணம் 20:2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.

3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், ப+மிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.''

ஆம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே கடவுள்.

.வேறு கடவுள்களே இல்லை.

அப்படி இருப்பதாக சொல்லப்படும் கடவுள்கள் எல்லாம் போலி தெய்வங்கள்.

அவைகளை வழிபடுவதர்காகவோஆராதிப்பதர்காகவோ அவைகளுக்கு மேலே விண்வெளியில்,கீழே மண்ணுலகில்,பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ளவைகளுக்கு ஒப்பாக யாதொரு சிலைகளையும் ஓவியங்களையும் உருவாக்கவும் வேண்டாம்.

அப்படி உருவாக்கி அவைகளை ஆராதிக்கவும் வேண்டாம்.அப்படி உருவாக்கி அவைகளை ஆராதித்தால் நம் கடவுளாகிய ஆண்டவர் அதை சகித்து கொள்ளமாட்டார்.இதுவே விடுதலைப்பயணம் 20:2-5 ல் கடவுள் கொடுத்துள்ள கட்டளை

ஆனால் சில பிரிவினை சகோதரர்கள் இந்த கடவுளின் கட்டளையை திரித்து விண்வெளியில் மண்ணுலகில் நீர்த்திரளில் உள்ள எந்த உருவத்தை செய்தாலும்,செய்ய நினைப்பதும் கடவுள் கண்டிக்கும் சிலைவழிபாடு தான்என்கிறார்கள் .இன்னும் சொல்லப்போனால் செய்வதெல்லாம் சிலை தான் என்கிறார்கள்.

ஒரே கடவுளை நினைவுபடுத்தும்அடையாளமாக இருந்தாலும் அதுவும் சிலை தான் என்று கூட சொல்ல துணிகிறார்கள்[!!!].

அப்படியென்றால் கடவுள் உடன்படிக்கை பேழையை மோசேயுடன் செய்ய கட்டளை இட்டிருக்க மாட்டார்[ விடுதலைபயணம்25:10-17].

அதன் மேலே இரு கேரூபின்களின் சுரூபங்களை வைக்க சொல்லியிருக்க மாட்டார்.[விடுதலைபயணம் 25:18-20]

அந்த கேரூபின் சுரூபத்தின் மேலிருந்து இஸ்ரேயல் மக்களிடம் பேசியிருக்க மாட்டார்.[விடுதலைபயணம் 25:21-22]

பாம்பு கடியால் மாண்ட இஸ்ரேயல் மக்களை காக்க வெண்கல சர்ப்ப உருவை செய்து காட்ட மோசேயிடம் சொல்லியிருக்க மாட்டார்21[எண்ணிக்கை 21:5-9]

அதுமட்டுமல்ல சாலமோன் அரசர் எருசலேம் தேவாலயத்தின் தூயகத்தின் முன்னுள்ள தூண்களில் [காண்க 1அரசர்7:18-21]கீழே மண்ணுலகில் காணப்படும் மாதுளை பழ வடிவங்கள் ,அல்லிமலர் வடிவங்கள் செய்து வைத்தார்

.அதை கடவுள் ஏற்றுகொண்டாதால் தானே திருகோவிலின் அர்ப்பண வேளையில் 2குறிப்பேடு 7:1 ல் சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும் வானத்திலிருந்துநெருப்பு இறங்கி எரி பலியையும் மற்ற புலிகளையும் எரித்தது.ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரபிற்று என்று வசிக்க காண்கிறோம்.

சிலை என்பது போலி தெய்வங்களின் ரூபங்களே... என்பதை மிக தெளிவாக அறிந்துகொண்டோம்.

,இப்பகுதியில் விவிலியம் கண்டிக்கிற ஒருசில சிலைகளை பற்றி பார்ப்போம் 

சீனாய் மலையில் மோசே ஆண்டவரோடு இருந்தபோது ஆரோன் தங்கத்தால் ஆன ஒரு கன்றுக்குட்டியின் சிலையை செய்ததை நாம் அறிவோம் 

‘’விடுதலைப்பயணம் 32:3 அவ்வாறே மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,

4 அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், "இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே" என்றனர்''

படைப்பின் ஒரே கடவுளை மறந்து கன்றுக்குட்டியின் சிலையை செய்து அதை கடவுளாக்கி வழிபடுகிறார்கள்,இங்கே கன்று குட்டி சிலை வேறு எதையும் பிரதிபலிக்கவில்லை. வேறு யாரையும் அடையாள படுத்தவில்லை.அந்த சிலை தான் அவர்களின் கடவுள். அந்த சிலைக்கே தான் வழிபாடு செலுத்தபடுகிறது.. இது தான் சிலைவழிபாடு.

இதைகண்டு கடவுள் சினம் கொள்கிறார் 

''விடுதலைப்பயணம் 32:7 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.

8 நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, "இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே" என்று கூறிக் கொள்கிறார்கள்" என்றார்.

9 மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.

10 இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்" என்றார்''.

இதேபோன்று தான் மக்கள் படைப்பின் கடவுளை மறந்து அவரவர்களுக்கு தோன்றிய வடிவில் சிலைகளை செய்து அந்த சிலைகளை கடவுளாக்கி அதற்கே ஆராதனை செய்தனர் இத்தகைய சிலைவழிபாடு தான் விவிலியத்தில் பல இடங்களில் பல இறைவாக்கினர்களால் கண்டிக்கபடுகிறது, 

விவிலியத்தில் நான்கு வகையான சிலைகளை நாம் காண்கிறோம்.அவ்வகைகளை பார்ப்போம்

1,கற்பனை சிலைகள் கடவுளாயின :

''எசேக்கியேல்1617 நான் உனக்குத் தந்த பொன், வெள்ளி அணிகலன்களைக் கொண்டு நீ ஆண் உருவங்களைச் செய்து, அவற்றுடன் வேசித்தனம் செய்தாய்''

''சாலமோனின் ஞானம் 13:10 ஆனால் பொன், வெள்ளியால் திறமையாக உருவாக்கப்பட்டவையும், விலங்குகளின் சாயலாய்ச் செய்யப்பட்டவையுமான மனிதக் கைவேலைப்பாடுகளையோ பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய பயனற்றக் கல்லையோ தெய்வங்கள் என்று அழைத்தவர்கள் இரங்கத் தக்கவர்கள்; செத்துப் போனவற்றின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்''

மற்றும் ஏசாயா46:6-7 சாலமோனின் ஞானம்13:11-19 சாலமோனின் ஞானம்14:27-31

2,இறந்தவர்களின் சிலைகள்:-

''சாலமோனின் ஞானம் 14:15 இளமையில் தம் மகன் இறந்ததால், ஆறாத்துயரில் மூழ்கியிருந்த தந்தை ஒருவர் விரைவில் தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அவனது சிலையைச் செய்தார். முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப் பின்பு தெய்வப் பிறவியாகக் கொண்டாடினார். மறைவான சமயச் சடங்குகளையும் வழிபாடுகளையும் வழிவழியாகச் செய்யுமாறு தம் பணியாளரைப் பணித்தார்.

16 இந்தத் தீய பழக்கம் காலப் போக்கில் வேரூயஅp;ன்றி சட்டம்போலப் பின்பற்றப்படலாயிற்று''

இதை போன்ற இறந்தவர்களின் வழிபாடு கேரளா மாநிலத்தில் நாயர்கள் என அழைக்கப்படும் பிரிவினரில் காணப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் முத்தச்சன் முத்தச்சி என்று இரண்டு கற்களை வைத்து அவர்கள் தங்கள் மூதாதையர் என்று சொல்லி அவர்களை தெய்வங்களாக வழிபடுவதை காணமுடியும் 

3,இயற்கை மற்றும் விண்மீன்களின் சிலைகள் :-

''சாலமோனின் ஞானம் 13:2 மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களேதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள்.

3 அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார்''

இந்தியாவில் கூட அக்னி பகவான்,வருண பகவான்,வாயு பகவான்,சூர்யபகவான் ,சந்திர பகவான் என்றெல்லாம் இவ்வாறான தெய்வங்களை வழிபடுவதை காண்கிறோம்.

இதை கடவுள் கண்டிக்கிறார் 

''ஏசாயா 47:12 இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்; ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்; ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.

13 திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்; வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.

14 இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள், நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்; தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்; அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று; எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று''

4,பேய்களின்[அந்நிய தெய்வங்களின்] சிலைகள் :

''திருப்பாடல்கள் 106:36 அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின.

37 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்;

38 மாசற்ற இரத்தத்தை, தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்; கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டார்கள்;அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது''.

''2அரசர்கள் 17:29 ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.

30 பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும்,

31 அவ்வியர் நிபுகசு, தர்த்தாக்குச் சிலைகளையும் செய்து வைத்துக் கொண்டனர். மேலும் செபர்வயர் தம் நாட்டுத் தெய்வங்களான அதிரம்மெலக்கு, அனம் மெலக்கிற்குத் தங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டு பலி கொடுத்தனர்.

மேலும் தானியேல்[இ]3:5,மற்றும் எரேமியா 32:34 படியுங்கள் இதுவும் இத்தகைய வேற்று தெய்வ வழிபாடே 

இத்தகைய சிலைவழிபாடுகள் தான் விவிலியத்தில் கண்டிக்கப்படுகிறது .,

சிலைகள் என்பது போலி தெய்வங்களின் உருவங்கள் என்று கண்டோம். கடவுளை சுட்டி காட்டுகின்ற அடையாளமாகவோ ,கடவுளின் அருளை பெற்று தருகின்ற உபகரணமாகவோ இருப்பதில்லை மாறாக கடவுளுக்கு எதிரானவை.

ஆனால் இந்த மக்கள் இவைகளை உண்மைக் கடவுளைப் போல சித்திரிக்கிறார்கள் 

ஆகவே தான் 

ஏசாயா 46:9ல் ஆண்டவராம் கடவுள் சொல்வதை வாசிப்போம் ‘’தொன்று தொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்து பாருங்கள்;நானே இறைவன்;என்னையன்றி வேறு கடவுள் இல்லை;என்னை போன்று வேறு எவரும் இல்லை’’

எனவே செக்காரியா 13:2ல் அவர் சொல்கிறார் 

‘’அந்நாளில் நான் சிலைகளின் பெயர்கள் நாட்டில் இல்லாதவாறு அறவே ஒழித்து விடுவேன்.அதன்பின் அவற்றைப் பற்றிய நினைவு யாருக்கும் இராது’’ 

கடவுள் கண்டிக்கும் அருவருப்பான சிலை வழிபாடுகளை பற்றி இப்பகுதியில் பார்த்தோம்.

ஆனால் கடவுளை நினைவு படுத்துகின்ற திரு சுரூபங்களோ ,மோசே முகங்குப்புற விழுந்து வழிபட்ட உடன்படிக்கை பேழையோ சிலை என ஒருவர் சொல்வாராகில் அவர் கடவுளின் திருநாமத்தை இழிவு செய்து பத்து கட்டளைக்கு எதிரான பாவம் செய்தவராவார்..

திரு சுரூபங்களின் மகிமை 

இறைவனுக்கு வழிபாடு செய்த உடன்படிக்கை பேழையின் மேலே பொன்னாலான இரு கெரூபுகள் இருந்தது.என்பது நமக்கு தெரியும்.

இந்த கெரூபுகளை பற்றி புதிய ஏற்பாட்டில் திருத்தூதர் பவுல் கூறுவதை பாருங்கள் 

''எபிரேயர் 9:4 அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன் தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும் ஆரோனின் தளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.

5 பேழையின்மேலே மாட்சிமிகு கெருபுகள் இரக்கத்தின் இருக்கைக்கு நிழலிட்டுக் கொண்டிருந்தன. இவை பற்றி இப்போது விரிவாய்க் கூற இயலாது.''

விண்ணகத்தில் கடவுளின் அரியாசனத்தின் கீழே அமர்ந்திருக்கும் வானவர்கள் கெரூபுகள் என்று அழைக்கபடுகிரார்கள்.

இங்கேயும் உடன்படிக்கை பேழையின் மேல் அமைந்திருக்கும் கெரூபுகளின் சுரூபங்களைக் கூட அந்த விண்ணக கெரூபுகளின் பெயராலேயே ‘மாட்சிமிகு கெரூபுகள்’ என்ற பெயராலேயே குறிப்பிட்டு விண்ணகத்தின் நிஜ கெரூபுகளின் அதே மகிமையை இந்த இரக்கத்தின் அரியணையில் இருக்கும் கெரூபுகளின் திருசுரூபங்களுக்கும் புனித பவுல் சாற்றுகிறார்.இதிலிருந்து திரு சுரூபங்களுக்கு உள்ள மகிமையை நாம் உணர முடிகிறது.

''2சாமுவேல் 6:2 தாவீது அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவர் பெயரால் அழைக்கப்படுகிறது''

கெரூபுகளின் சுரூபங்களில் கடவுள் வீற்றிருக்கிறார் என்பதை இவ் இறைவசனம் தெளிவாக கூறுகிறது.

கடவுள் வீற்றிருப்பதால் அந்த பேழையும் பொன் கெரூபுகள் முதல் அதிலுள்ள அனைத்துமே தெய்வ மகிமையால் நிறைந்திருந்தன.

தெய்வ மகிமையால் நிறைந்திருந்த இந்த பொன் கெரூபுகளை தான் புனித பவுல் ‘மாட்சிமிகு கெரூபுகள்’ என்று அழைப்பதை பார்த்தோம்.இவைகள் கடவுளால் வெறுக்கப்பட்ட சிலைகள் அல்ல மாறாக திரு சுரூபங்கள்.

இந்த கெரூபுகள் கடவுளின் செய்தியை மக்களுக்கு கொடுபதற்காக பயன்படும் கடவுளின் கருவி.இவை கடவுளுக்கானது.கடவுளுக்கு உரியது.இந்த திரு சுரூபங்கள் அவரை சார்ந்தவைகளாக இருப்பதால் ஆண்டவராம் கடவுள் இவைகளை ஆதரிக்கிறார்.

தானியேல் 5:1-30 ஐ வாசிக்கும்போது எருசலேம் தேவாலயத்தின் பொற்கிண்ணங்களை கூட கடவுள் மகிமையாய் உயர்த்தி,அதை தவறாக பயன்படுத்தியதற்காக பெல்சாட்சர் மன்னனுக்கு தண்டனை கொடுப்பதை நாம் காணமுடியும்.அவன் கொலை செய்யப்பட்டு மாண்டு போகிறான்.
கெரூபுகளின் திரு சுரூபங்கள் மகிமைபடுத்தபடுகின்ற போது இயேசுவின் திரு சுரூபங்கள் அதற்கு மேலாக மகிமை படுத்தப்பட வேண்டும் அன்றோ?

இயேசுவின் சுரூபங்கள்:-

ஆனால் இயேசுவின் திரு சுரூபங்களுக்கு மகிமை கொடுப்பதற்கு பதில் எனது பிரிவினை சபை நண்பர் நிந்தனைகள் புரிகிறார்.

இயேசுவின் திரு சுரூபங்கள் இயேசுவுக்கு போட்டியாக வருகின்ற இன்னொரு தெய்வம் அல்ல;அது அவரை சார்ந்ததும் அவரது மகிமைக்காகவும் இருக்கிறது. 

விண்ணக புனிதர்களின் சுரூபங்கள்:-

''திருவெளிப்பாடு 3:21 நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்''

இத்தகைய மகிமையை விண்ணக புனிதர்கள் யேசுவிடமிருந்துபெற்றுக்கொண்டிருகிறார்கள்.

கெரூபுகளின் சுரூபங்கள் மாட்சிமிகு கெரூபுகள் என அழைக்கபடுவதால் விண்ணக புனிதர்களின் சுரூபங்களும் மாட்சிமிகு திரு சுரூபங்கள் என்று அழைக்கப்படலாம்.

மாட்சிமிகு பொன் கெரூபுகளை போல அவைகளும் மாட்சிமிகு திரு சுரூபங்களேயன்றி வெறுப்பதற்குரியசிலைகள் அல்ல.எனவே கத்தோலிக்க திருச்சபை விண்ணக புனிதர்களுக்கு மகிமை செலுத்துவதற்காக அவர்களின் திரு சுரூபங்களையும் ஏற்றுகொள்கிறது.

இதற்குரிய அதிகாரத்தை மத்தேயு 16:19-ல் தான் உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமைக்கு இயேசுவே நேரடியாக வழங்கியுள்ளார்.

புனித பொருள்களும் புனிதப்படுத்தலும் 

ஒரு திரு சுரூபமோ படமோ புனித படுத்துகின்ற பொது அதிலே தெய்வீக வல்லமை நிறைந்து தங்கி அதிலிருந்து அது வெளிபடுகிறது .இத்தகைய புனிதபடுத்துதல் பல வழிகளில் நடந்தேறுகிறது.

இயேசு புனிதமானவர் எனவே அவரது ஆடைகள் கூட புனிதம் ஆனது.மாற்கு 5:25-29-ல் ஆண்டவருடைய வல்லமை அவரது ஆடை வழியாக வெளிப்பட்டு அந்த பெண்ணின் இரத்த போக்கு நோயை குணமாக்கியது. மேலும் ஆண்டவரின் உடலையும் ஆடையையும் தொட்டவர்கள் எல்லோருமே நலமடைகிறார்கள்.

''மாற்கு6:56 மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்''

புனித பவுலின் கைக்குட்டைக்கு கூட குணமளிக்கும் வல்லமை இருந்தது.

''திருத்தூதர் பணிகள் 19:11 பவுல் வழியாய்க் கடவுள் அரும் பெரும் வல்ல செயல்களைச் செய்து வந்தார்.

12 அவரது உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்; பொல்லாத ஆவிகளும் வெளியேறும்''

அந்த கைகுட்டைகளும் துண்டுகளும் இந்த பரிசுத்தமான மனிதர் தொட்டதன் வழியாக புனிதபொருளாகிறது.இந்த புனித பொருளை தொடுபவர்கள் எல்லோருமே நலமடைகிறார்கள் 

திருத்தூதர் பேதுருவின் நிழல்கள் கூட குணமளிக்கும் வல்லமை பெற்றிருந்தன.

''திருத்தூதர் பணிகள் 5:15 பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக்கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்;

16 எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்''

புனித நிலையிலிருந்த பேதுருவின் நிழலில் கூட அவரின் புனிதம் கடந்து நின்றது என்பதை இங்கே காண்கிறோம்.

''விடுதலைப்பயணம் 29:36 பாவக் கழுவாய்க்கென்று ஒவ்வொரு நாளும், நீ ஒரு காளையைப் பாவம்போக்கும் பலியாக ஒப்புக்கொடு, இவ்வாறு பாவக்கழுவாய் செய்து பலிபீடத்தைத் தூய்மைப்படுத்துவாய். அதனை அர்ப்பணிப்பதற்காகத் திருப்பொழிவு செய்வாய்.

37 ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும்''

''விடுதலைப்பயணம் 30:25 திறமை வாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல், கூட்டுத் தைலமாக ஒரு தூய திருப்பொழிவு எண்ணெய் தயாரிப்பாய். இது தூய திருப்பொழிவு எண்ணெயாக இருக்கும்,

26 இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம். உடன்படிக்கைப் பேழை,

27 மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம்,

28 எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய்.

29 நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும்.''

இங்கே அபிஷேகம் செய்யப்பட்டு அர்ப்பணிக்கபடுகிற பலிபீடமும் மற்றும் பொருள்களும் புனிதமடைகின்றன.இந்த புனிதம் இந்த புனித பொருள்களிலிருந்து அதை தொடுபவர்களில் கடந்து வருவதை இங்கே நாம் காண்கிறோம்.

புனிதபடுத்துவதற்கு இன்னொருமுறையும்இருந்திருகிறது

''திருப்பாடல்கள் 51:7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்''

புனிதப்படுத்தப்பட்ட திரு சுரூபங்கள் :-

ஈசோப்புல்லினால் தெளித்தவுடன் தூய்மையாவது [திருப்பாடல்கள் 51:7] போல ,இயேசுவிடமிருந்து அதிகாரத்தை பெற்ற,இயேசு உருவாக்கிய ஒரே திருச்சபையின் அங்கீகாரமுள்ள குருக்கள் புனித நீரினால் தெளித்து புனிதபடுத்தபடும் திரு சுரூபங்களும் புனிதமடைகின்றன.

புனிதபடுத்தபட்ட திருசுரூபங்களை தொடுபவர்களிடமும் அந்த புனிதம் கடந்து வருகிறது.

பேதுருவின் வல்லமை பேதுருவின் நிழலின் வழியாக கடந்து வந்து வெளிப்பட்டது போல பவுலிடமிருந்த வல்லமை அவரது கைக்குட்டையை புனிதபடுத்தி அந்த கைக்குட்டையை தொட்டவரல்லோரையும் புனிதபடுத்தியது போல திரு சுரூபங்கள் யாரை நினைவு படுத்துகின்றதோ அவர்களிடமுள்ள புனிதமும் இந்த திரு சுரூபங்களை புனிதபடுதுகின்றன.இந்த திரு சுரூபங்களில் உள்ள புனிதம் அதை தொடுபவர்களிடமும் கடந்துவருகிறது.

இவ்வாறு இயேசுவின் அருளும் வல்லமையும் அன்னைமரியாள் மற்றும் புனிதர்களில் உள்ள அருளும் வல்லமையும் அவர்களது திரு சுரூபங்கள் அல்லது திரு படங்கள் வழியாக பொழியப்பட்டு கொண்டேயிருக்கிறது.

புனித பொருள்களின் முன்பாக ஜெபிக்கலாம்:-

படியுங்கள் யோசுவா 7:6-11

இங்கே யோசுவா கடவுளிடம் வேண்டுகிறார்.எங்கே வேண்டுகிறார்?மனித கையால் செய்யப்பட்ட உடன்படிக்கை பேழையின் முன்னே முகங்குப்புற விழுந்து கிடந்து வேண்டுகிறார். 

அந்த பேழையில் கடவுள் தங்கி இருப்பதால் கடவுளின் முன்னே விழுந்து கிடப்பதாக நினைத்துகொண்டு பேழையின் முன் தான் விழுந்து கிடக்கிறார். 

அவரது வேண்டுதல்களை, கடவுள் ஏற்றுக்கொண்டு பேழையிலிருந்தே பதில் கொடுப்பதை பார்க்கிறோம்.

இதேபோல் ஆண்டவர் இயேசுவை நினைவுபடுத்தும் ஆண்டவர் இயேசுவின் திரு சுரூபம் மற்றும் திரு படம் முன்பாக நாம் வேண்டுதல் செய்கின்ற போது,அந்த வேண்டுதல்களை இயேசு ஆண்டவர் ஏற்றுகொள்கிறார் 

படியுங்கள் 2சாமுவேல் 611

புனித பொருளான ஆண்டவரின் பேழை ஒபேது-ஏதோமின் வீட்டில் தங்கிய பொது ஆண்டவர் அவரையும் அவரது வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்ததை இங்கே காண்கிறோம்

திரு சுரூபங்களும் திரு படங்களும் புனித பொருள்கள் தானே இவைகள் இருக்கும் இல்லங்களில் இறைவனின் ஆசீர்வாதம் மழையாக பொழியப்படுகிறது

ஜெப உணர்வோடும் பக்தியோடும் இயேசுவின் திரு இருதய படத்தையோ இரக்கத்தின் ஆண்டவரான இயேசுவின் படத்தையோ வைத்திருக்கும் இல்லங்களில் நிச்சயமாக தெய்வீகம் ஆழமாக அனுபவிக்க முடிகிறது

இயேசுவின் மீது எனக்குரிய அன்பும் பக்தியும் என் இல்லத்திலுள்ள திரு இருதய ஸ்தாபலில் இருந்து தான் முதன்முதலில் உதயமாகிறது.

2 சாமுவேல் 6:12-13 மற்றும் 1 அரசர் 8:3-5 ஆகிய பகுதிகளை படியுங்கள் 

மனித கையினால் செய்யப்பட்ட உடன்படிக்கை பேழையின் முன்னே கடவுளுக்கு பலி செலுத்துகிறார்கள்.கடவுளும்அதை ஏற்று கொள்கிறார்.

இதேபோல் தான், இயேசுவின் திரு சுரூபத்திற்கு முன்பாக கொடுக்கப்படும் புகழ்ச்சி பலிகளும் வணக்கங்களும் வழிபாடுகளும் ஏசுவுக்கே சென்றடைகிறது.

‘’தாவீதும் இஸ்ரேயல் வீட்டார் அனைவரும் ஆராவாரத்தோடு எக்காள முழக்கதோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டுவந்தார்கள்.ஆண்டவரின் பேழை தாவீதின் நகரை அடைந்தபோது சவுலின் மகள் மீக்கால் பலகணி வழியாக பார்த்தாள்.அரசர் தாவீது ஆண்டவர் முன்பு குதித்து ஆடி கொண்டிருப்பதைக் கண்டு அவரை தன் உள்ளத்தில் வெறுத்தாள் 2சாமுவேல் 6:15’’

இதையே 1 குறிப்பேடு 15:29 இவ்வாறு சொல்கிறது’’தாவீது அரசர் அக்களித்து ஆடி கொண்டிருந்ததை கண்டு அவரைத் தன உள்ளத்தில் இகழ்ந்தார்’’

கடவுளை நினைவு படுத்திய உடன்படிக்கை பேழையின் முன்பாக நின்று கடவுளை புகழ்ந்து நடனமாடிய தாவீதை உள்ளத்தில் இகழ்ந்த மீக்காலுக்கு சாகும்வரை கடவுள் பிள்ளை பேறே கொடுக்கவில்லை

இதையே 2சாமுவேல் 6:23ல்வாசிக்கிறோம் ‘’சவுலின் மகள் மீக்காலுக்கு சாகும்வரை குழந்தை பேறு கிட்டவில்லை’’

இந்நிலையில் ஆண்டவரை நினைவு படுத்தும் திருசுரூபங்களுக்கு முன்பாக செலுத்தப்படும் வழிபாடு,பவனிகள் முதலான காரியங்களை இகழ்ந்து கொண்டிருக்கும் பிரிவினை சபையை சார்ந்த நண்பர்களே !

இறைவனுக்கு அஞ்சி நடுங்குங்கள்.

இனிமேலும் நாம் சிலைகளையும் உடன்படிக்கை பேழை,திரு சுரூபங்கள் போன்ற புனித பொருள்களையும் ஒரே நிலையில் வைத்து பேசமுடியுமா?

இதுவரையில் திரு சுரூபங்களுக்கும் சிலைக்கும் வித்தியாசம் தெரியாமல் நாமே குழம்பியிருக்கலாம் இன்னும் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

நிச்சயமாக வாய்ப்பே இல்லை. 2 சாமுவேல் 6:17 சொல்கிறது,

‘’2சாமுவேல் 6:17 ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது, ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார்.’’

2குறிப்பேடு 5:7 சொல்கிறது,

‘’2குறிப்பேடு 5:7 அவ்வாறே குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவிலின் கருவறையாகிய திருத்தூயகத்திற்குக் கொண்டு வந்து, அதற்குரிய இடமாகிய கெருபுகளின் இறக்கைகளுக்குக் கீழே வைத்தனர்.’’

இதேமுறையில் சாலமோனின் ஞானம்13:15-18 கடவுளுக்கு எதிரான சிலைகளை குறித்தும் சொல்கிறது.

''சாலமோனின் ஞானம்13:15 அதற்குத் தகுந்ததொரு மாடம் செய்து, அதைச் சுவரில் ஆணியால் பொருத்தி, அதில் சிலையை வைக்கிறார்;

16 தனக்குத்தானே உதவி செய்ய முடியாது என்பதை அறிந்து, அது விழாதபடி பார்த்துக் கொள்கிறார்; ஏனெனில் அது வெறும் சிலைதான்; அதற்கு உதவி தேவை.

17 அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும் திருமணத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் வேண்டும்போது உயிரற்ற ஒரு சிலையுடன் பேச வெட்கப்படுவதில்லை; வலிமையற்ற ஒன்றிடம் உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.

18 செத்துப்போன ஒன்றிடம் வாழ்வுக்காக மன்றாடுகிறார்; பட்டறிவு இல்லாத ஒன்றிடம் உதவி கேட்கிறார்; ஓர் அடிகூட எடுத்து வைக்கமுடியாத ஒன்றிடம் நல்ல பயனத்திற்காக இறைஞ்சுகிறார்.''

உடன்படிக்கைபேழையும் தூக்கி வரப்பட்டுத்தான் அதற்குரிய இடத்தில கொண்டுபோய் வைக்கப்படுகிறது.மனித பார்வைக்கு அது உயிரற்ற ஒன்றாகவேத் தெரிகிறது.எனவே தனக்குத்தானே உதவி செய்ய முடியாதது போலவும்,அது விழுந்து விடாதபடி கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டியதும் அவசியம் போலவும் தோன்றுகிறது.

ஆனால் இந்த உடன்படிக்கை பேழையில் தான், கடவுள் தங்கியிருந்து இஸ்ரேயேல் மக்களுக்கு ஆசீர்வழங்கினார். இந்த உடன்படிக்கை பேழை சென்ற இடமெல்லாம் கடவுளின் வல்லமையை மக்கள் உணர்ந்தார்கள்.ஆகவே மேலயுள்ள சிலையை குறிக்கிற இறை வசனங்களை ஒரே கடவுளை நினைவுபடுத்தும் உடன்படிக்கை பேழைக்கோ திரு சுரூபத்திற்கோ பொருத்தி இனிமேலும் யாரேனும் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள்.

புனித பொருளான உடன்படிக்கை பேழையின் சக்தி:-

''யோசுவா 3: 14 மக்கள் தங்கள் கூடாரஙகளிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.

15 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.

16 மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர்.

17 இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.''

இத்தகைய மாபெரும் அதிசயம் புனித பொருளான உடன்படிக்கைபேழையின் வழியாகத்தான் நடந்தேறியது.

மேலும் இந்த உடன்படிக்கை பேழையிலிருந்து கடவுள் பிலிஸ்தியர்களோடு போராடியதை 1சாமுவேல் 5:1-7ல் நாம் வாசிக்கிறோம்.

ஆம் கடவுள் பேழையிலிருந்து அற்புதகரமாய் பிலிஸ்தியர்களையும் அவர்களது போலி தெய்வவங்களையும் தண்டித்து தீர்த்தார்.இத்தகைய வல்லமையை மனித கரங்களால் செய்யப்பட்ட புனித பொருளில் தான் நாம் காண்கிறோம்.

அன்னைமரி:-

பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை பேழையைப் போல உயிருள்ள வாக்குத்தத்தத்தின் பெட்டகம் அன்னை மரி, மூவொரு கடவுளின் இரண்டாம் நபரான இயேசுகிறிஸ்து அவரது பூரண தெய்வீக நிறைவில் அன்னைமரியின் திரு உதரத்தில் தங்கி இருந்தார்.

1917ல் அக்டோபர் மாதம் போர்த்துக்கல் நகரான பாத்திமாவில் அன்னைமரி காட்சி கொடுத்தார்.அந்த காட்சியின் சமயத்தில் அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு விசுவாசிக்கும்படி சூரியன் அசைந்து நடனமாடியது.

பாத்திமா மாதாவின் திரு சுரூபம் உலகமெல்லாம் கொண்டு செல்லப்பட்ட போது ,அந்த திரு சுரூபம் வந்து இறங்கிய சில நகரங்களில் அதே சூரிய நடன அதிசயம் நிகழ்ந்தது.

பிளேக் என்ற கொள்ளை நோய் பிடித்திருந்த சில நகரங்களில் அந்த திரு சுரூபம் வந்து இறங்கிய உடனே அந்த கொள்ளை நோய் அந்நகரங்களிளிருந்து மறைந்து போனது.

ஆம் !பாத்திமா அன்னை,அந்த திரு சுரூபத்திலிருந்து வல்லமை வெளிப்பட செய்து அந்த நோய்களை முறியடித்தார்கள்.

''லூக்காஸ் 7:37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.

38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்..

47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூhந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.

48 பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்

இங்கே கட்டளைகளை கடைபிடிக்காத ஒரு பாவி தனது சொந்த பாவங்களுக்கு மனம் வருந்திக் கொண்டே அவரிடம் பெரிய அன்பை வெளிபடுத்தும் போது,அவளை முழு மனத்தோடு இயேசு ஏற்றுகொள்கிறார்.

அப்பெண் அவருடைய காலடிகளை தம் கண்ணீரால் நனைத்து ,தம் கூந்தலால் துடைத்து,அக்காலடிகளில் விலையுயர்ந்த நறுமண தைலம் பூசினாள்.அப்பெண்னின் அன்பை வெளிபடுத்த தம் சொந்த முறைகளை கையாண்டாள்.அது அங்கிருந்த பரிசேயர்களுக்கு பிடிக்கவில்லை.

இதே சம்பவத்தை குறித்து மத்தேயு 26:8-9 சொல்லும்போது அது அவருடைய சீடர்களுக்கும் பிடிக்கவில்லை என்று வாசிக்கிறோம்.ஆனால் இயேசு அவளது உள்ளத்தின் உண்மையான அன்பை புரிந்துக்கொண்டு அதை பரிவோடு ஏற்றுகொள்கிறார்.

மனிதர் வெளிப்படையாக நாம் செய்கின்ற செயல்களை குறித்தே தீர்ப்பிடுகிறோம் ஆனால் கடவுளோ உள்ளத்தை ஊடுருவி பார்க்கிறார்.

ஆகவே தான் இயேசு மத்தேயு 26::10ல் இவ்வாறு சொல்கிறார் ‘’அவர் எனக்கு செய்தது முறையான செயலே’’இதை குறித்து ‘’மாற்கு 14:8இவர் தம்மால் இயன்றதை செய்தார்’’

அப்பெண் மத்தேயு 22:37-38ல் இயேசு கொடுத்த கட்டளைபடியே நடந்து கொண்டாள்.

''மத்தேயு26:37 அவர், "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து."

38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை''

ஆனால் அவளது சொந்த செயலின் மூலமாகவே இயேசுவிடம் கொண்டிருந்த அன்பை வெளிபடுத்தினாள்.அதை இயேசுவும் ஏற்று கொள்கிறார்.

திரு சுரூபத்தின் வழியாக கடவுளை அவ்வாறு அன்பு செய்கிற போதும் அந்த உண்மையான அன்பை ஆண்டவர் புறகணிப்பதில்லை.

கடவுள் தம்மை நெருங்கவும் தம்மை அடையவும் நமக்கு வழிகளை விசாலமாக்கி தருகின்றார்.

மோசேயுடன் உடன்படிக்கை பேழையை உருவாக்க சொல்லி அதிலிருந்து இஸ்ரேயல் மக்கள் எளிதாக தம்மை தரிசிக்க செய்த கடவுள்,

அவ்வாறே உலக முடியும்வரையிலும் மக்கள் தம்மை மிக எளிதாக கண்டு தரிசித்து அன்பு செய்ய புதியதோர் உடன்படிக்கையாக நற்கருணையை ஏற்படுத்தினார். 

[லூக்காஸ் 22:19-20 ]நற்கருணையில் மிக எளிமையாக வீற்றிருந்து நமது புகழ்ச்சி பலிகளையும் நமது ஆராதனைகளையும் ஏற்று கொள்கிறார்.

.மேலும் மிக எளிதாக அவரை அடையும்படியும்,அன்பு செய்யும் படியும்,அவரை நெருங்கும் படியும் திரு சுரூபங்களை தமது கருவியாக்குகின்றார். 

முடிவுரை:-

ஒரு மனிதன் தனது சொந்த வழிமுறையிலேயே இயேசுவை உண்மையாக அன்பு செய்தால் அந்த அன்பையும் முழு மனத்தோடு இயேசு ஏற்றுக்கொண்டு ஆசீர்வாதம் அருளுகின்றார் என்று அவரிடமிருந்து பாடம் கற்று கொண்டோம்.

ஒரு மனிதன் இயேசுவின் திருசுரூபத்தின்மூலமாக அவரை அன்பு செய்யும்போது அந்த அன்பு அவரை சென்றடைய அதன் பலனை அவரிடமிருந்து அவன் பெற்று கொள்கிறான்

.திரு சுரூபங்களை நாம் தொட்டு முத்தம் செய்யும்போது அதில் இருக்கும் பரிசுத்தமும் புனிதமும் நம்மில் கடந்து வருகிறது.திருசுரூபங்களில் நாம் ஜெபிக்கும் போது,அது யாருடைய திருசுரூபமோ அவருடைய ஆசீர்வாதம் அந்த திருசுரூபங்களின் வழியாக கடந்துவந்து நம்மை அடைகிறது.இயேசு,அன்னைமரி,புனிதர்கள்,வானதூதர்கள் இவர்களின் திரு சுரூபங்கள் வழி இவ்வாறு நாம் ஆசீர்வாதம் பெற்றுகொள்கிறோம்.

இன்றுமுதல் சபிக்கப்பட்ட சிலைகளிலிருந்துதிருசுரூபங்களை வேறுபடுத்தி புரிந்துகொள்ளுங்கள்.

தெய்வீக அருளையும் ஆசீரையும் பெற்று கொள்ள உதவும் கடவுளின் கருவியான திரு சுரூபங்களை ஏற்று கொள்ளுங்கள்.இதுவே இறைவனை நெருங்கவும் அவரை அடையவும் மிகவும் எளிதான மார்க்கம்-ஆமென்.