சேசுநாதர் சிலுவையில் தொங்குவதைப் பார்த்து நின்றவர்கள்!

"பின்னும் சேவகர் கீழே உட்கார்ந்து அவரைக் கவனித்தார்கள். ஜனங்களோ தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரை அறிந்தவர்களும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்தவர்களுமாகிய அநேக ஸ்திரீகள் தொலைவில் இவைகளைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்'' (மத்.27:36; மாற்கு.15:40; லூக்.23:35; அரு.19:37).

மூன்றாணிகளால் சிலுவையில் தொங்கிய சேசுநாதர், சொல்ல முடியாத வாதைகளை அனுபவிக்கும்பொழுது, மனங்கலங்கவில்லை. முழு மனதோடு அவைகளை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கு சஞ்சல மிகுதியைக் கொடுத்தது ஒன்றிருந்தது. அது என்ன என்றால் இந்த அவமானத்தையும் அருந்துன்பங்களையும் அநேக அநேக ஜனங்களின் முன்னிலையில் அனுபவிக்க வேண்டி யிருந்ததே.

அகங்காரம் எல்லாம் பாவங்களுக்கும் மூல காரணம் அல்லவா? அதனாலேயே, தேவசுதன், சகலருக்கும் முன்பாகத் தம்மை இவ்விதமாய்த் தாழ்த்தத் திருவுள மானார்.

அறைபட்ட சேசுவின் முன்னிலையில் அமைதியிழந்த மாபெரும் கூட்டம் ஒன்று நிற்கின்றது. அக்கூட்டத்தில் ஆண்களும், பெண்களும், சேசுவை அறிந்தவர்களும், அறியாதவர்களும் கலந்து நிற்கிறார்கள். கொலைகாரர் களான சேவகரும், கொலை செய்ய ஏவித் தூண்டிய சண்டாள யூதர்களும், அவர் முன்னே உட்கார்ந்து அவர் அடையும் ஆற்றொணாத் துயர வியாகுலத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள். ஆணிகளால் துளைக்கப்பட்டு, அந்தரத்தில் தொங்கும்போது அவர் அனுபவிக்கும் அங்கலாய்ப்பைக் கண்டு, பரிகாசம் செய்கிறார்கள். இது தான் எதிர்பார்க்கப்பட்ட இரட்சகருக்கு இஸ்ராயேல் மக்கள் கொடுத்த கடைசிப் பிரிவு உபசாரம். எத்தனை உத்தமர்களும், பிதாப்பிதாக்களும், அரசர்களும், தீர்க்க தரிசிகளும் இவரைக் கண்குளிரக் கண்டு களிக்க ஆசித் திருந்தார்கள்! இப்பொழுது சாந்த அமைதியும், சர்வ வல்லபமும் இச்சிலுவையில் கலந்து துலங்குவதை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. அன்பும், அருளும், அவருடைய இராஜரீகத்தை மறைத்து நிற்கிறது என அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

சந்தேகம், பயம், பகை இம்மூன்றும் அந்த யூதர்களின் நெஞ்சில் படிப்படியாக வளர்ந்து வந்தது. கடைசியாய்ப் பகை அவர்களை ஆட்கொண்டது. அப்பகையே வேத பாரகர்களையும் சாஸ்திரிகளையும் குருடராக்கியது. இதோ, இப்பொழுது அவர்கள் தங்களுடைய பழியைத் தீர்த்துக்கொண்டார்கள். ஈவிரக்கமற்ற பகை ஆவேசத்திற்கு இலக்கான இந்த நாசரேத்தூர் சேசுவின் மரணத்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

சேசுவின் கொடிய பகைவரான இந்த யூதத் தலைவர் களுக்குப் பின்னால் பெரும் மக்கள் கூட்டம் ஒன்று வேடிக்கை பார்த்தபடி நிற்கிறது. மனித சுபாவத்தின் ஒரு கேவலமான குணம் என்னவென்றால், பிறர் துன்பம் அடையும்பொழுது அத்துன்பத்திலும் ஒரு வேடிக்கையைக் காண்பது. இத்தகைய வினோதப்பிரியத்தால் தூண்டப் பட்டவர்கள் இக்கூட்டத்தில் அநேகர். வேறு அநேகர் புதிதான உத்தம போதனைகளைப் போதித்து, பல அற்புதப் புதுமைகளைச் செய்து வந்த நாசரேத்தூர் சேசு என்பவர் சிலுவையில் அவமான மரணம் அடைந்ததை நான் பார்த்தேன் என்று மற்றவர்களிடம் சொல்லிப் பெருமை அடையலாம் என்ற எண்ணத்தோடு நடப்பவைகளைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். மற்றும் சிலரோ உண்மையான அனுதாபம் கொண்டவர்கள். சேசுவின் விரோதிகள் அகன்று செல்வார்களானால், தாங்கள் அவருக்குச் செய்யக் கூடிய சொற்ப உதவியைச் செய்யலாம் என்று சமயம் தேடி நிற்கிறார்கள். இவர்களில் ஒருசிலரே சேசுநாதரின் உறவினர்களும், உண்மை அன்பர்களும் ஆவார்கள். இவர்கள் அந்த மாசற்ற மனுக்குல மாணிக்கத்திற்குக் கடைசி வேளையில் எவ்வித ஆறுதலைக் கொடுக்கலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாஸ்காப் பண்டிகையின் காலம். உலகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்த யூதர்கள் அனைவரும் ஜெருசலேமில் இத்திருநாளுக்காகக் கூடுவது வழக்கம். அவ்விதம் கூடிய மக்கள் கூட்டம் இப்பொழுது கல்வாரி மலையைச் சுற்றித் திரண்டு நிற்கின்றது.

சேசு இரட்சகர், தமது கடைசி அவஸ்தையைப் பார்த்து நிற்கும் அந்த மக்கள் கூட்டத்தை ஏறிட்டுப் பார்க்கிறார். "நான் பூமியின்று (சிலுவையில்) உயர்த்தப்படும்பொழுது, சகலரையும் ஈர்த்துக்கொள்வேன்'' என்று அவரே திருவுளம் பற்றினாரல்லவா? உலக முடிவு வரைக்கும், மனித அவதாரம் எடுத்த தேவன் மரணமடைந்த கல்வாரி மலைக் காட்சி, சகல மனிதர்களையும் வசீகரிக்கத்தான் செய்யப் போகின்றது. பிற்காலத்தில் வரவிருக்கும் சந்ததிகள் எல்லாம், இதோ இங்கு நிற்கும் இக்கூட்டத்தினரைப் போலவே, பல்வேறு விதமாகச் சிலுவையில் மரித்த இக்குணக் குன்றைப் பற்றிச் சிந்திப்பார்கள். அவர்களது எண்ணங்களும், வார்த்தைகளும், கிரிகைகளும் இப்பொழுது போலவே அவரவர் மனநிலைக்குத் தக்கவாறு தான் இருக்கப் போகிறது. ஆதலால்தான் நமது அன்பர், தம் முன்னே நிற்கும் இக்கூட்டத்தைப் பார்த்து, இதன் வழியாய்ச் சகல மனிதர்களையும் நினைத்துக்கொண்டு எல்லா மனுக்குலத்திற்காகவும் தமது கடைசி மரண அவஸ்தையை சந்தோஷத்தோடு அனுபவிக்கிறார்.

அவரது பார்வை மக்கள் கூட்டத்தின் முன் வரிசையில் விழுகிறது. அங்கே ஒரு சில பெண்களும், அப்போஸ்தலர் களில் ஒருவரும் நிற்கிறார்கள். அன்பு பிரமாணிக்கத்தை உண்டுபண்ணுகிறது. உள்ளன்போடு சேசுவை நேசித்த இவர்கள், உரோமைச் சேவகர்களின் ஆயுதங்களுக்கு பயப்படவில்லை; ஆணவ வைராக்கியங் கொண்ட யூதர் களின் அலட்சிய மிரட்டலைக் கண்டு பின்வாங்கவில்லை. முரடர்களின் பரிகாச தூஷணங்களைக் கவனிக்கவில்லை. அவரைப் பெற்று வளர்த்த மாதாவோடு, இந்தச் சில பெண்களும், ஒரே ஒரு ஆணும் சேசுவின் முன் நின்று தங்கள் அன்பையும், அனுதாபத்தையும் காட்டிக்கொண்டிருக் கிறார்கள்.

இதோ, மனித வர்க்கத்தின் மானக் கேட்டைப் பரிகரிக்கும் ஒரு சில பெண்களின் பிரமாணிக்கம், மனுக்குலத்தை இரட்சிக்க வந்த மனுமகனின் மரண வேளையில், அவருக்கு ஆறுதல் வருவித்தவர்கள் ஆண்கள் அல்ல. அவருடைய ஞான ஊழியத்தில் அவரது ஊழியர்களும் பங்காளிகளுமாயிருந்த அப்போஸ்தலர்கள் கூட அல்ல. அன்பிற்கும் அனுதாபத்திற்கும் இருப்பிடமான பெண்களே உலக சரித்திரத்தின் முக்கிய கட்டத்தில், மனுக்குலத்தின் நற்பெயரைக் காப்பாற்றினவர்கள். ஆதலால், பிரிய சகோதரிகளே, கேளுங்கள். உங்கள் குடும்பத்தையோ, நாட்டையோ, உலகத்தையோ புனிதப்படுத்தக் கூடிய வர்கள் நீங்களே. ஏனெனில் அன்பு, அனுதாபம் என்ற இரண்டு உத்தம ஆயுதங்கள் உங்கள் கைகளில் இருக் கின்றன. இவ்விரண்டு ஆயுதங்களைத் தகுந்த விதமாய் நீங்கள் உபயோகிப்பீர்களானால், நீங்கள் செய்யக்கூடிய நன்மைகள் ஏராளம்.