செபமாலை சொல்லும் விதம்.

பரிசுத்த ஆவியின் உதவியை நாடியபின் செபமாலை சொல்லத் துவங்குவது நல்லது. முதன் முதல் விசுவாச மந்திரம் ; கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விசுவாசந்தானே அஸ்திவாரம் ; கர்த்தர் கற்பித்த ஜெபம் , மூன்று முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , பின் பத்து பத்தாய் ஐந்து முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , ஒவ்வொரு பத்துக்குப் பின் 'பிதாவுக்கும் சுதனுக்கும் ' என்ற திரித்துவ ஸ்தோத்திரம் சொல்லுகிறோம் . ஒவ்வொரு பத்துக்கு முன்னரும் ஒரு தேவ இரகசியத்தைச் சொல்லி அதைப் பற்றிச் சிறிது நேரம் , இரண்டொரு வினாடியாவது யோசிக்க வேண்டும்

சில நாடுகளில் 53 மணிக்குப் பின் கிருபை தாயாபத்து செபத்தை சொல்லுகிறார்கள் எண்ணுவதற்கு மணிகள் உதவுகின்றன என்று பார்த்தோம் .அதோடு அவை நம் கவனத்தையும் கவர்கின்றன . நாம் சுத்த அரூபிகளான சம்மனசுகள் அல்லோம் . நாம் ஆத்துமமும் சரீரமும் சேர்ந்தவர்கள், அவை இரண்டும் ஒத்துழைக்கின்றன . இரண்டொரு சிறு வெளிச் செயல்கள் புத்திக்கு வேகத்தைக் கொடுக்கின்றன . ஒரு பெரியவர் , பெரிய சிந்தனையாளர் , பெரிய அறிஞர் . அவரைப் போய்ப் பார்க்கும்போதெல்லாம் எதைக் கவனிக்கலாம் ? மேசையின் மேல் புத்தகம் ஒன்றும் இராது . எழுதத் தாள் ஒன்று , வலது கரத்தில் எழுதுகோல் , இடது கரத்தில் சுருட்டொன்று . நாலைந்து மணி நேரமாக ஒரே சுருட்டு தான் . ஏன்? அச்சுருட்டு சிந்தனா சக்தியைப் பெருக்குகிறது என்பார் . இத்தகைய வழிகளைப் பின்பற்றும் பலரைப் பார்த்திருக்கலாம் . பெண்களில் சிலர் சிந்திப்பதற்கு உதவியாகப் பின்னுகிறார்கள் . எவ்வளவு வேகமாய்ப் பின்னுகிறார்களோ, அவ்வளவு வேகமாய் அவர்களது சிந்தனையும் ஓடுகிறது .சிந்தனைக்கு உதவியாக சிலர் வேகமாய் நடப்பதைக் கண்டிருக்கலாம் . அதே போல மணிகளும், அவைகளை உருட்டுவதும் செபிப்போரின் கவனத்தை எழுப்புகின்றன. உலக சிந்தனைகள் பல படையெடுத்து பாய்கின்றன அல்லவா , அந்தப் பராக்கை எல்லாம் சிறிதளவாவது தள்ளி விட மணிகள் உருட்டுதல் உதவுகிறது . அதே போல் வாய்ச் செபமும் மனோ செபத்திற்கு உதவியாக இருக்கிறது

மானிட சுபாவத்தை அறியாதவர்கள் தான் ஒரே செபத்தை திரும்பத் திரும்பச் சொல்லுவதில் பயன் இல்லை என்பர் . மன மகிழ்ச்சியோ அன்போ பொங்கி பொங்கி எழும்போது, அபூர்வங்களைக் கண்டு அதிசயம் பூத்து நிற்கும்போதும் பெரும் சோகத்தால் உள்ளம் கரையும்போதும் , ஒரே மொழியை, ஒரே பொருளைத் திரும்பத் திரும்ப சொல்லுவார்கள் . அன்பின் பெருக்கால் தாயண்டை வந்த பிள்ளை " அம்மா , நான் உன்னை நேசிக்கிறேன் , அம்மா உன்னை நேசிக்கிறேன் , நேசிக்கிறேன் அம்மா " என்று சொல்லுவதைக் கேட்கும் தாயின் மனம் பூரிக்குமா ? புழுங்குமா?

"மணியாம், செபமாம் , இரகசியமாம் , என்ன இடைஞ்சல்கள் " என்று செபமாலை செய்யாதவர்கள் சொல்லலாம் . தமிழ்நாட்டு கிராமவாசி ஒருவன் , மேல் நாட்டான் உணவருந்த உட்காருகையில்  உண்கலத்தையும், லோட்டாவையும் , கத்தியையும் , கரண்டியையும் , முள்ளையும், மடித்துவாலையையும் கண்டு இதென்னடா சங்கடம் என்று நினைக்கலாம் . உணவருந்த உட்கார்ந்த மகராசனுக்கு சங்கடம் தெரியவில்லை . பத்து நிமிஷத்டுஹ்க்குள் கை அசுத்தப்படாமல் விலாப்புடைக்கத் தின்று எழும்புகிறான் . கத்தி ,முள் , கரண்டி அவனுக்கு சங்கடமல்ல . அவை அவனுக்கு உதவி

எவ்விதம் சிந்திப்பது ? தியானம் செய்து பழகியவர்களுக்கு அது அவ்வளவு கஷ்டம் அல்ல . ஆனால் சாதாரண மக்களுக்கு அதற்க்குச் சுலபமான வழிகள் உள. ஒவ்வொரு தேவ இரகசியத்தைச் சொல்லும்போதும் , அதை விவரிக்கும் நற்செய்தி வாசகத்தை வாசிப்பது நல்லது . அவ்வாறு வாசித்தால் பத்துமணியைச் சொல்லும்போது அந்த இரகசியத்தில் உள்ள பற்பல எண்ணங்கள் , புத்தியில் மின்னி மின்னி மறையும் . ஒவ்வொரு இரகசியத்தையும் படம் போல் சித்தரித்து , அவைகளைப் பார்த்துக் கொண்டே சிலர் சுலபமாய்ப் பத்து மணியைத் தியானத்தோடு சொல்லி முடிக்கிறார்கள் . இது சரியான தியானம் , அல்லது ஒவ்வொரு பத்திலும் அந்த இரகசியத்துக்கு அடுத்த ஓர் எண்ணம் , ஒரு புண்ணியம் புத்தியில் ஊன்றி நிற்கும்  அல்லது உலாவி வரும் . இதுவும் நல்ல தியானம் . சிறிதளவேனும் தியானிப்பதால் தான் செபமாலை சொல்லுவதால் பெரும் பலனை அடையலாம்.