இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நரகம் என்னும் சத்தியம்

நரகம் ஆவதென்ன?

நரகம் என்பது நித்திய தண்டனைக்குக் கடவுளால் தீர்ப்பிடப்பட்டவர்கள், சர்வேசுரனை ஒருபோதும் காணாமல், அவியாத அக்கினியில் பசாசுக்களோடு நித்திய காலமும் எரிந்து கொண்டேயிருக்கிற, சகல விதமான வேதனைகளும் நிறைந்த இடம் என்று ஞான உபதேசக் கோர்வை கூறுகிறது (பக்கம் 292).

நரகம் (1) வேதாகமத்தில் நம் ஆண்டவரால் போதிக்கப்பட்ட சத்தியமாகவும், (2) கத்தோலிக்கத் திருச்சபை பாரம்பரியமாக விசுவசித்துப் போதித்து வரும் சத்தியமாகவும் (3) மனித புத்திக்கும், நியாயத்திற்கும் முழுவதும் ஒத்ததாகவும் இருக்கிறது.

நரகம் உண்டென்பதும், அதன் தண்டனை நித்தியமானது என்றும், எப்போதும் திருச்சபை விசுவசித்து வந்துள்ளது. நரகவாசிகளின் தண்டனைக்கு முடிவுண்டு என்று சொல்லத் துணிந் தவர்களைக் கொன்ஸ்தாந்திநோப்பிள் பட்டணத்து இரண்டாம் பொதுச் சங்கம் திருச்சபை விலக்கத் தண்டனையைக் கொண்டு தண்டிக்கிறது.

நரகம் என்பது சர்வ வல்லப சர்வேசுரன் தம்மை எதிர்த்துப் பகைத்து விரோதிக்கும் துரோகிகளைத் தண்டிக்கும்படி ஏற்படுத்திய ஆக்கினை ஸ்தலம், வேதவாக்கியத்தின்படி சகல துன்பங்களும் குடியிருக்கும் இடம், இருளடர்ந்த சிறைக்கூடம், அக்கினிப் பெருங்கடல், நெருப்புக் கால்வாய், பயங்கரமுள்ள குகை, நன்மையொன்றும் இல்லாத சபிக்கப்பட்ட ஸ்தலம். பேய்கள் வாழும் சுடுகாடு என்று அர்ச். இஞ்ஞாசியாரின் தியானப் பிரசங்கங்களின் தொகுப்பு நூலாகிய மன்ரேசா கூறுகிறது.

நரகத்தில் இரண்டுவித முக்கியமான வேதனைகள் உண்டு.

1) சர்வேசுரனை இழந்து போனதினால் ஆத்துமம் அனுபவிக்கும் இழப்பின் வேதனை.

2) ஐம்புலன்களின் வேதனை. (கண், காது, வாய், மூக்கு, ஸ்பரிசம் தொடு உணர்வு)).

இந்த அத்தியாயத்தில், சர்வேசுரனை இழந்து போனதால் ஆத்துமம் அனுபவிக்கும் கொடிய இழப்பின் வேதனையை நாம் சற்று விரிவாக ஆராய்வோம்.