குழந்தை ஞானஸ்நானம்!

குழந்தைத் திருமுழுக்கைப் பற்றி பார்க்கும் போது, நாம் முதலில் காணும் உண்மை என்னவெனில் குழந்தை திருமுழுக்கு அல்லது குழந்தைகள் திருமுழுக்குப் பெற்றனர் என்ற சொல்லாட்சி புதிய ஏற்பாட்டில் நேரடியாக காணப்படுவதில்லை. இதனை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இதனால் குழந்தைகளுக்கு தொடக்க திருச்சபையிலே திருமுழுக்கு கொடுக்கப்படவில்லை என்று வாதம் செய்வதும் தவறானது. யூதர்கள் குடும்ப உணர்வு / பற்று மிக்கவர்கள். எனவே ஒரு யூதப் பெற்றோர் கிறிஸ்தவர்களாக மறையைத் தழுவினார்கள் என்றால் நிச்சயமாக அவர்களுடைய குழந்தைகளும் திருமுழுக்கு பெற்றிருப்பார்கள். உண்மையிலேயே ஒவ்வொரு யூதப் பெற்றோரும் தம் குழந்தைகளை சிறுவயதிலேயே விருத்தசேதனம் செய்துவிடுவார்கள். இது அவர்களது நுழைவுச்சடங்கைக் குறிக்கின்றது. அதே சமயம் குழந்தை திருமுழுக்கு பற்றிய குறிப்பு புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் புரிந்து கொள்ளும் மொழி நடையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விவிலிய அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திருத்தூதர்கள் பணி நூலில் 'அவரும் அவரது வீட்டாரும்" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றது. 'நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார்" (தி.ப 11:14) 'லீதியாவும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றார்கள்" (16:33) 'தொழுகைக் கூட தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார்.... திருமுழுக்குப் பெற்றனர்" (18:8) 'ஸ்தேவான் வீட்டாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்துள்ளேன்" (1கொரி 1:16)

மேற்கூறப்பட்ட விவிலியப் பகுதிகளினூடாக புதிய ஏற்பாட்டில் 'வீட்டார்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு வீட்டுத் தலைவர், அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளடங்கிய குடும்பம் என்ற பொருள் கொள்ளலாம். திருமுழுக்கு மீட்பைக் குறிக்கும் நிகழ்வாகும். எனவே வீட்டுத்தலைவர் தாம் மாத்திரம் மீட்படைய விரும்புவார் என்பதிற்கில்லை. எனவே தானும் தன் குடும்ப உறுப்பினர் அனைவரும் மீட்படைய விரும்புவார் என்பதிற் சந்தேகமில்லை. எனவே குழந்தை திருமுழுக்கு விவிலிய ஆதாரமற்றது என்று அறுதியாக கூறமுடியாது.

அடுத்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பது அவர்களுடைய சுதந்திரத்திற்கு எதிரானது தானே என்று வாதிடுவோர் உண்டு.

நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் 'அறிவுத்தேடல்" கொள்கை (Gnosticism)யின் விளைவால் குழந்தைகள் ஜென்மப் பாவத்துடன் பிறப்பதில்லை என்று நம்பியதால் திருமுழுக்கைப் பின் போட்டனர். மேலும் மனிதர்கள் எவருடைய துணையும் இல்லாமல் தம் சொந்த முயற்சியினால் மீட்படைய முடியும் என்ற வாதத்தை முன்வைத்தார். ஐந்தாம் நூற்றாண்டு பிலேஜியஸ் (Pelagius). ஆகவே இறைவனின் அருள் தேவை இல்லாத ஒன்று என்று வாதிட்டார்.

மேலும் குழந்தைகள் பாவக்கறையோடு பிறப்பதில்லை. ஆகவே திருமுழுக்கு தேவையில்லை என்றார். இவர்க்கு பதில் அளித்தவர் தூய அகுஸ்தினார் ஆதாம் பாவம் செய்ததால் அவனது இறைச்சாயல் கறைப்பட்டது. ஆனால் அழியவில்லை. எனவே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஜென்மப் பாவ கறையோடே பிறக்கின்றது. ஆகவே இதிலிருந்து மீட்புப் பெற திருமுழுக்கு அவசியம் என்பதை தூய அகுஸ்தீனார் வலியுறுத்தினார். இன்னும் அக்காலத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அந்நாட்களில் போதியளவு அடிப்படை சுகாதார,
மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. ஆகவே தங்கள் குழந்தைகள் கூடிய சீக்கரம் திருமுழுக்கு பெற பெற்றோர் விரும்பினர். பாஸ்காவின் போது தான் திருமுழுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற நியத திருச்சபையால் பரிந்துரைக்கப்பட்ட போதும் அதற்கு முதலே திருமுழுக்கை கொடுக்கும்படி பெற்றோர் விரும்பிக் கேட்டனர்.

இப்பொழுது ஒரு சில திருச்சபையின் தந்தையர்கள் திருமுழுக்கிகு தொடர்பக கூறியவற்றைப் பார்ப்போம்.

✠ "அவர்கள் ஓடும் தண்ணீர் அருகே வந்ததும், தங்கள் ஆடைகளை களைவர். குழந்தைகளுக்கு முதலில் திருமுழுக்கு அளிப்பர். அவர்கள் தாமாக பதிலளிக்க கூடியவர்களாக இருந்ததால் பதிலளிப்பர் இல்லையேல் அவர்கள் சார்பாக குழந்தைகளின் பெற்றோர் பதில் அளிப்பர்"
(ஹிப்போலிட்டஸ்)

✠ "திருமுழுக்கினால் பிறப்பின்போது இருக்கும் பழுதற்ற நிலை அகற்றப்படுகின்றது. குழந்தை திருமுழுக்கு கட்டாயமானது. திருத்தூதர்களின்காலம் முதல் நடைமுறையில்
இருந்தது" (ஓர்ஜின்)

அடுத்ததாக நாம் ஞாயிறு தினம் தோறும் திருப்பலியில் நம்பிக்கை அறிக்கையின் (விசுவாசப் பிராமானம்) போது பாவ மன்னிப்புக்கான ஞானஸ்நானத்தைம் ஏற்றுக் கொள்கிறேன். இக்கூற்றின்படி கிறிஸ்தவனாகுவதற்கு மனமாற்றம், நம்பிக்கை (விசுவாசம்) மற்றும் ஒழுக்க நிறைவாழ்வு எதிர்பார்க்கப்படுகின்றது. இதனடிப்படையில் இன்னுமொரு வாதம் எழலாம். குழந்தைகளிடம் பாவம் எதுவும் இல்லை. மன்னிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கை அறிக்கை செய்ய முடியாது. ஒழுக்கமான வாழ்வு வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கமுடியாது. இவ்வாதத்தை நோக்கும்போது குழந்தைகள் நம்பிக்கையை வெளிப்படுத்த இயலாது என்பது உண்மையெனினும் நம்பிக்கை இன்றி குழந்தைகள் திருமுழுக்குப் பெறுவதில்லை. பெற்றோர் ஞானப்பெற்றோர், பங்குச் சமூகம் இவர்களின் நம்பிக்கையில் குழந்தை திருமுழுக்குப் பெறுகின்றது. நம்பிக்கை தனி மனிதனுடைய சொத்து அல்ல அது நம்பிக்கையாளர் சமூகத்தின் அருள்நிலை. ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையாளர் சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில்தான் அதனை கொடையாகப் பெற இயலும்.

பிறரோடு பகிர முடியும். அந்தவகையில் குழந்தை பங்குச் சமூகத்தின் நம்பிக்கையில் திருமுழுக்குப் பெறுவது சரியானதே. இவ்விடத்திலே இன்னுமொரு ஆழமான உண்மையை நாம் அறிய வேண்டும். அதாவது கடவுள் தாமே நம்மைத்தேடி வருகின்றார். தம் அருளை எல்லோர் மேலும் பொழியச் செய்கின்றார். இறைவனே நம் பாவங்களை மன்னிப்பவர். நம்மைத் தூய்மைப்படுத்துவர். கொடைகளின் ஊற்று அவருடைய அருள் எங்களுக்கு இலவசமாகத் தரும் கொடை. எங்களுடைய நன்மைத்தனத்தின் பொருட்டு கூடிக் குறைபவையல்ல. நாங்கள் நல்லவர்களாய் இருந்தால் தான் இறைவன் ஆசீர்வதிப்பார் என்றால் நாம் இறைவனை வரையறைக்குட்படுத்துகின்றோம். கடவுள் நாங்கள் நல்லவர்களாய் இருப்பதனால் எம்மை அன்பு செய்வதில்லை. மாறாக, கடவுள் நம்மை அன்பு செய்வதினால் நாம் நல்லவர்களாக இருக்கின்றறோம். அன்பும் இரக்கமும் இறைவனது மறுபெயர்கள். உங்கள் மூதாதையருக்கு அவர் அன்பு காட்டியதால் அவர்களுக்குப் பின் அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரை முன்னின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். (இ.ச 4:37)

இறைவன் எமது தகுதி தராதரங்களைப் பாராமல் எம்மை அன்பு செய்கின்றார். அந்தவகையில் இறைவன் தன் அன்பை வெளிப்படுத்த அவர்கள் பெரியவர்களாக இருக்கவேண்டுமென்பதில்லை. மேலும் இயேசு மத் 18:14ல் இச்சிறியோருள் ஒருவர் கூட அழிவுறுவது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று என்கின்றார். ஆதாமினால் விளைந்த பாவத்தின் பலனை, பாதிப்பை குழந்தைகள் விபரமறியாத போதே பெறமுடிகின்றபோது கிறிஸ்துவால் விளைந்த அருளையும் குழந்தைகள் விபரமறியாதபோதே பெற முடியாது என்பது தூய அகுஸ்தீனாரின் வாதம். கடவுள் தரும் கொடையை நான் பிறகு பெற்றுக்கொள்கின்றேன் என்று கூறுவது
மடமை இல்லையா என வினவுகின்றார். தூய யோண் கிறிஸ்தோஸ்தம் இந்த வாதங்களின் பின்னணியில் நாம் சில உண்மைகளைக் கண்டுணரலாம். அதாவது

திருமுழுக்கு
✠ ஒருவரை கிறிஸ்தவ வாழ்வுக்கு அறிமுகப்படுத்துகின்றது.
✠ ஒருவரை இயேசுக்கிறிஸ்துவின் மறையுடலின் உறுப்பினராக மாற்றுகின்றது.
✠ ஒருவரை இயேசுக்கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு, எனும் பாஸ்கா மறைபொருளில் பங்கேற்கச் செய்கின்றது.
✠ ஒருவரை இறைவனின் பிள்ளையாக மறுபிறப்படையச் செய்கின்றது.

குழந்தை திருமுழுக்கின் வழியாக எவ்வாறு ஒரு சாதாரண தாய்தந்தை தாம் பெற்றெடுத்த குழந்தையின் மீது பிறந்த பொழுதிலிருந்து அன்பு செலுத்தி பராமரித்து வழிநடத்துகின்றார்களே அதே போன்று இறைதந்தையின் அன்பையும், பராமரிப்பையும் வழிநடத்துதலையும் பெறுகின்றார்கள்.

இறைவன் தாமே குழந்தையை நம்பிக்கை வாழ்வில் வழிநடத்துவார். இறைவன் தாமே ஆவியின் கொடைகளினாலும், கனிகளினாலும் மனமாற்றத்தை ஏற்படுத்தி நிறைவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.

வத்திக்கான் சங்க ஏற்பாட்டிலிருந்து ஒரு சிறு துளி 'தன்னிலே திருமுழுக்கு ஒரு தொடக்கமும் முதற் செயலும் மட்டுமே ஏனெனில் வாழ்வின் நிறைவை கிறிஸ்துவில் அடைவதே அதன் முழு நோக்கம். இவ்வாறு முழுமையாய் நம்பிக்கையை அறிக்கையிடச் செய்ததும் கிறிஸ்து விரும்பிய நிலைவாழ்வளிக்கும் நிர்வன அமைப்பில் முற்றும் இணையச் செய்தலும் இறுதியாக நற்கருணை ஒன்றிப்பில் முழுமையாய் நம்மை புகுத்தலுமே திருமுழுக்கின் நோக்கங்களாகும்.

சிறு குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பது அவர்கள் மீது திணிக்கப்படுகின்றது. அவருடைய சுதந்திரத்தைப் பாதிக்கின்றது எனக் கூறுவோருக்கு இது தகுந்த பதிலாகும். மனித வாழ்க்கையிலேயே ஒருவருக்கு தேவையான அனைத்தையும் மனிதன் வளர்ந்த பிறகு தான் தேர்ந்தெடுக்கின்றான் என்று கூற முடியுமா. மனிதனைப் பாதிக்கக்கூடிய பல்வேறு வாழ்வுக் காரணிகளை ஆராயும்போது அனைத்தையும் மனிதன் ஆய்வு செய்து தேர்ந்து கொள்வதில்லை. உதாரணம் பெற்றோர், குடும்பம், மொழி, ஆரம்பக் கல்லி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவைகளைக் குழந்தை வளர்ததும் தெரிவுசெய்ய இயலாது. குழந்தை வளர்ந்ததும் தான் செய்யவேண்டிய தொழில், வாழ்க்கைத் துணை இவற்றை ஒருவர் தெரிந்து கொள்ளலாம். சில தருணங்களில் இது கூட பெற்றோர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உண்மையிலேயே வாழ்வை உருவாக்குகின்ற அடிப்டைக் காரணிகள் பெரும்பாலும் தேர்ந்துகொள்ளப்படுவதில்லை. மாறாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நம்பிக்கை (விசுவாசம்) என்பதும் வாழ்வின் அடிப்படை தேவைகளில் ஒன்று என்பதை மறக்காதிருப்போம். பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மதிப்பீடுகளை குழந்தை பேணிக்
காக்கவேண்டியது கடமை. பெற்றோரிடமிருந்து பெறும் நம்பிக்கை எனும் கொடையும் இத்தகையதே. இறுதியாக குழந்தையின் கல்வி, தொழில், ஏன் சிலவேளைகளில் வாழ்க்கைத்துணையைக் கூட தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள பெற்றோருக்கு அக்குழந்தையின் நம்பிக்கை வாழ்வுக்கு வழிசமைக்கும் திருமுழுக்கை பெற்றுக்கொடுக்கஉரிமை இல்லையா?